26 Apr 2017

பூச்சி பிரை, பூச்சி ரோஸ்ட் இன்ன பிற...


பூச்சி பிரை, பூச்சி ரோஸ்ட் இன்ன பிற...
            வருங்காலங்களில் சைவ உணவு, அசைவ உணவு என்பதைத் தாண்டி பூச்சி உணவு என்ற புதுவகை உணவு விசுவரூபம் எடுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கமலஹாசன் எடுத்த விசுவரூபத்தை விட இது பெரிய விசுவரூபமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
            இதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடுவது
            1. குறைந்து வரும் உணவு உற்பத்தி,
            2. விவசாயத்திற்கானத் தேவையான நீரில் நிலவும் பற்றாக்குறை,
            3. பெருகி வரும் மக்கள் தொகை,
            4. குறைந்து வரும் விவசாய நிலப்பரப்புகள்.
            இப்போது தாவரங்களை வளர்த்தாலே பூச்சிகள்தான் முதலில் வருகின்றன என்பதால் அப்போது, பூச்சிகளை வளர்ப்பதில் எந்த வித சிரமமும் இருக்காது. பூச்சிக்கொல்லிக்காக நாம் செலவழிக்கும் அவசியமும் இல்லாமல் போய், பூச்சிகளை வளர்ப்பதற்காக நாம் செலவு செய்யும் நிலைமை உண்டாகி விடும்.
            அதன்பின் இந்தப் பெண்கள் கரப்பான் பூச்சிகளைப் பார்த்து பயப்பட மாட்டார்கள். பார்த்தால் பிடித்து கறி சமைத்து விடுவார்கள். அதன்பின் கரப்பான் பூச்சிகள்தான் இந்தப் பெண்களைப் பார்த்து பயப்படும்.
            நிலைமை அப்படிப் போய் விட்டால் பூச்சிகளை அழிக்கும் கிட் தயாரிக்கும் நிறுவனங்கள், பூச்சிகளை ஊட்டி வளர்க்கும் காம்ப்ளான்களையும், ஹார்லிக்ஸையும் தயாரிக்கத் தொடங்கி விடும்.
            அதன் பின் வீட்டுக்கு வீடு ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போய் பூச்சிகளை வளர்ப்பது பேஷனாகி விடும்.
            ஐயனாருக்கும், வீரனுக்கும் வேறு வழியில்லை. ஆடு, கோழி பலி கொடுக்க முடியாது. நாம் செல்லமாக வளர்க்கும் பூச்சிகளில் ஒன்றைத்தான் பலி கொடுக்க வேண்டியிருக்கும்.
            சமீப காலத்தில் ஊர்ந்து வந்த மரவட்டையைப் பிடித்த ஒரு குழந்தையைப் பற்றிக் கேள்விபட்ட போது அசந்து போய் விட்டேன். தீர்க்கதரிசி அந்த குழந்தை. தம்மின் தம் மக்கள் அறிவுடை‍மை என்று வள்ளுவர் சொன்னதில்தான் எத்தனை ஆயிரம் அர்த்தங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...