தமிழ்நாட்டின் காய்ச்சல்களும், தாத்தாவின் சிகிச்சையும்
தமிழ்நாட்டில் அவ்வபோது ஒவ்வொரு விதமான
காய்ச்சல் அடிப்பதுண்டு. டெங்குக் காய்ச்சல், சிக்கன்குன்யா காய்ச்சல், மர்மக் காய்ச்சல்கள்
இப்படி பல உண்டு. இப்போது புலனாய்வுக் காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது.
முதலில் சொன்ன காய்ச்சலுக்கு மக்கள் பலியானார்கள்.
இரண்டாவதாக சொன்ன காய்ச்சலுக்கு ஒரு மாநில முன்னாள் முதல்வர் அவர்கள் பலியாகியிருக்கிறார்.
உலகத் தரத்திலான சிகிச்சை அளித்ததாக சொல்கிறார்கள்.
அது கடைசியில் மரணத்தில் முடிந்திருக்கிறது.
இனி உலகத் தரத்திலான சிகிச்சை அளிப்பதாகப்
போதுவான பணிவோடு தங்கள் மருத்துவச் சேவையைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் மருத்துவமனைகளை
மக்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்கள்?
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இதைப்
பற்றி பெரிதாக யோசிப்பதற்கு எதுவுமில்லை. இங்கு காசு இருப்பவர்கள்தான் மருத்துவம்
பார்க்கிறார்கள். இல்லாதவர்கள் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் மர்ம மரணங்கள் அதிகம்
நிகழாமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!
உண்மை அனுபவம் ஒன்றையே சொல்கிறேன், கேளுங்கள்!
எங்கள் தாத்தாவுக்கு பத்து முறைக்கு மேல்
நெஞ்சு வலித்திருக்கிறது. வாய்வு கோளாறு என்று அத்தனை முறையும் அயோடக்ஸை நெஞ்சில்
தேய்த்து விடச் சொல்லியே சமாளித்து விட்டார். பதினைந்தாவது முறையோ, பதினெட்டாவது
முறையோ இருக்கலாம், அப்போதுதான் மாரடைப்பால் செத்துப் போனார். அதுவும் அப்போது
தேய்த்தே தேய்த்தே அயோடக்ஸ் டப்பா காலியாகி விட்டது. துளியோண்டு அயோடக்ஸ் இருந்திருந்தால்
கூட நெஞ்சில் தடவி காப்பாற்றி இருப்போம். இப்படி ஒண்ணுக்கு ரெண்டா அயோடக்ஸ் டப்பா
வாங்கி வைப்பதிலே கணக்குப் பார்த்ததால்தான் எங்கள் தாத்தா 94 வயதில் காலமானார். ஒரு
வேளை முன்கூட்டியே அவருக்கு வைத்தியம் பாத்திருந்தால் 54 அல்லது 64 வயதிலேயே ரேஷன்
கார்டிலிருந்து காணாமல் போயிருப்பார்.
*****
No comments:
Post a Comment