விடை காண முடியாத கேள்விகள் உலகில் உலவ
முடியாது!
வியாபாரம்
செய்வதற்காக நாடுகளைக் கைப்பற்றுவது மக்களாட்சிக்கு எதிரானது என்பதை வல்லரசு நாடுகள்
உணர்ந்து விட்டன. அதனால் போன நூற்றாண்டோடு அதற்கு முடிவுரை எழுதி விட்டன.
நாடுகளைக்
கைப்பற்றுவது மக்களாட்சிக்கு எதிரானது என்பதால், மக்களாட்சியைக் கைப்பற்றுவதுதான் சரியானது
என்ற முடிவில் இந்த நூற்றாண்டில் புதிய முன்னுரை எழுதிக் கொண்டு இருக்கின்றன வல்லரசு
நாடுகள்.
முறைகள் மாறியிருக்கின்றன,
ஆனால் நோக்கங்கள் மாறவில்லை. முகங்கள் மாறியிருக்கின்றன, ஆனால் தந்திரமான மூளைகள்
மாறவில்லை.
மக்களாட்சி
நடக்கும் நாடுகள் பலவற்றில் மக்கள் நலத் திட்டங்களின் ஏஜென்டுகளாக பன்னாட்டு நிறுவனங்கள்
செயல்பட ஆரம்பித்து விட்டன. அந்த நாடுகள் மக்கள் நலத் திட்டங்களை எப்படி வடிவமைக்க
வேண்டும் என்பதில் உலக வங்கியின் நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. நிர்ப்பந்தங்கள் மாறினால்
உலக வங்கியின் கடன் கிடைக்காது என்ற கத்தி மக்கள் மன்றங்களின் மேல் தொங்க விடப்பட்டுள்ளன.
புதிய பொருளாதாரம்
என்ற பெயரில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்களாட்சி நாடுகளின் மக்கள்
தலைவர்கள் இருக்கிறார்கள். இப்படி அவர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து பன்னாட்டு சுரண்டல்
வணிகத்தை ஈர்க்க வேண்டிய ஜூரத்தில் இருக்கிறார்கள்.
தன்னிறைவுப்
பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளும் நாடுகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலான நாடுகள்
என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது. அதை மீறி வளர்க்க முனையும் நாடுகள்
ஈராக் போல அடியோடு நசுக்கப்பட முகாந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.
பசியால் மக்கள்
சாக, இன்னும் பசியால் சாகாத மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா? என்ற கேள்வியோடு நாடுகள்
ஆயுதங்களை வாங்கி வைத்துக் கொள்வதற்கான உளவியல் அச்சங்களும் விதைக்கப்பட்டு விட்டன.
இதற்கு தீர்வுதான்
என்ன?
அங்கு ஒருவர்,
இங்கு ஒருவர் என்று மூலைக்கு ஒருவர் எழுப்பும் இக்கேள்விகளை ஆய்ந்து பார்த்து ஒவ்வொருவரும்
எழுப்ப வேண்டும்!
விடை காண
முடியாத கேள்விகள் இந்த உலகில் உலவ முடியாது!
*****
No comments:
Post a Comment