14 Jan 2017

கடலில் பொழியும் மேகங்கள்


கடலில் பொழியும் மேகங்கள்
கேன் வாட்டர்
நாற்பது ரூபாய் என்பதில்
சுருங்கிப் போன
குளத்தின் வேதனை இருக்கிறது!

தண்ணீர் லாரியில்
அடிபட்டு இறக்கும்
ஒருவனின் ஜீவனில்
நீர்வேட்கைக்கான தாகம்
அடங்கி இருக்கிறது!

நமது மழைநீர்ச் சேகரிப்பில்
பூமியின் மேற்பரப்பைக் கூட
நனைக்காது என்ற
‍உடைந்து கிடக்கும் குழாய்களின்
பரிகாசம் ஒளிந்திருக்கிறது!

கடல் என்றோ
சாக்கடை என்றோ
நீர் இல்லாமல் இல்லை
நீராலான நம் உலகில்!

காலரா
மஞ்சள் காமாலை என்று
கலந்துள்ள நீர்
கொடுக்கப்படும் காசுக்கு ஏற்ப
கிருமிகள் கொண்டதாக இருக்கிறது
அல்லது
இல்லாமல் இருக்கிறது!

நமக்கு நீர் தேவை என்று
பொழியும் மழைநீரையும்
வெள்ளமென தோற்றம் கொள்கையில்
சபித்து விடுகிறோம்!
என்ன செய்வதென்று தெரியாமல்
சில சமயம்
கடலில் பொழிந்து விட்டுப் போய் விடுகின்றன
மேகங்கள்!
*****

No comments:

Post a Comment