ஜெயலலிதா
- ஒரு சுருக்கமான மதிப்பீடு
ஒரு பெண்ணாக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் ஆணாதிக்க அரசியலில் சந்தித்த அவலங்கள் அதிகம். அதுபோல் அவர் காலில்
விழுந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகம்.
கல்வித் துறையில் அவர்
வழங்கிய பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப்பைகள், காலணிகள், மிதிவண்டி, லேப்டாப்,
பெண்களுக்கு நாப்கின் என்று அனைத்தும் மனிதவள மேம்பாடு சார்ந்த திட்டங்கள். அத்தனை
மனித வள மேம்பாடும் அவர் பரவலாக்கிய டாஸ்மாக்கில் அடிபட்டுப் போய் விட்டது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களை
வலுப்படுத்தியதில் அவருக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதே நேரத்தில் டாஸ்மாக் சரக்கைக்
குடித்தே குடித்தே தாலியறுத்த அவலங்களும் நிறைய உண்டு.
திராவிட பாரம்பரியத்தில்
அரசியல் செய்யத் துவங்கிய அவர் வெளிப்படையாக கடவுளை வழிபட்டதும், தன்னை ஆத்திகராய்க்
காட்டிக் கொண்டதும் ஆச்சர்யமான ஒன்று. அவருடைய ஆட்சிக் காலத்தில் சங்கராச்சாரியார்
கைது நடைபெற்றதும் அதை விட ஆச்சர்யமான ஒன்று.
பெண் அதிகாரம் என்பதை
அவர் நிலைநாட்டினார். அவரது இறுதிச் சடங்கை ஒரு பெண்ணாக அவரது தோழி செய்தது என்பது
ஆச்சாரங்களைக் கடந்து பெண் அதிகாரம் என்பதை அவர் எந்த அளவுக்கு நிலைநாட்டியிருந்தார்
என்பதை அவரது இறப்புக்குப் பின்னும் நிலைநாட்டியது.
பெண்கள் அவரைக் காவல்
தெய்வமாகக் கருதினார்கள். கொண்டாடினார்கள். அவரது ஆட்சிக் காலத்தில்தான் வேளாண் கல்லூரி
மாணவிகள் மூவர் பேருந்தில் உயிரோடு எரிக்கப்பட்டதும், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாக
தற்கொலை செய்து கொண்டதும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
அவரைக் குடும்ப அரசியலுக்கு
எதிராக தமிழர்கள் கருதினார்கள். அதை அப்படிக் கருதுவதற்கில்லை. அவரது தனது ரத்த சம்பந்தமான
குடும்ப உறவு அரசியலுக்கு எதிராக இருந்தார் என்று குறிப்பிடலாமே தவிர, அவரது உயிரினும்
மேலான ரத்தத்தின் ரத்தங்களின் அதாவது விசுவாசிகள் என்று குறிப்பிடப்படுபவர்களின் குடும்ப
அரசியலை அவரால் கடைசி வரை எதுவும் செய்யவில்லை.
அவரது தனித்த ஆளுமை
இன்றும் வியக்கப்படுகிறது. 110 விதியின் கீழ் அனைத்தையும் அறிவித்து அவர் அமைச்சர்களுக்கு
அவசியமே இல்லாத ஒரு ஆட்சியை நிகழ்த்தினார். ஆனால் அவரது அமைச்சரவையில் நிறைய அமைச்சர்கள்
இருந்தார்கள்.
அவரது அழுத்தமான முடிவெடுக்கும்
திறன் அனைவராலும் கட்சி பேதமில்லாமல் வியக்கப்பட்டது. அவர் அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக்
கொண்டு இருந்தார்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக
மாற்ற வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதற்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்திக்
கொண்டிருந்த போதே, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையும் கட்டம் கட்டி தமிழகத்தைக்
காலி செய்து கொண்டிருந்தது.
தொட்டில் குழந்தைகள்
திட்டம் மூலம் ஆதரவற்ற, அனாதைக் குழந்தைகளுக்குப் புதுவாழ்வு காட்டிய அவரது ஆட்சிக்காலத்தில்தான்
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடைபெற்று இன்று வரை நிவாரணம் எதுவும் வழங்கப்படாமல்
அதற்கான வழக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வீரப்பனை வீழ்த்த திறம்பட்ட
காவல்துறையை அமைத்தவர் அவர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உறுதியாகச் செயல்பட்டவர்.
ஆனால், ஆணவக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் காவல் துறையிடம் சிக்காமல் வாட்ஸ் அப்பில்
பேசிக் கொண்டு அலட்சியமாகத் திரிந்தனர்.
அவர் நல்ல வாசகர். நிறைய
நூல்கள் படித்தவர். மிக பிரமாண்டமாக சென்னையில் நிறுவப்பட்டிருந்த நூலகத்தை முடக்குவது
போல அவர் நடந்து கொண்டது புரியாத புதிர்.
மாநில சுயாட்சியில்
அவர் ஒரு பெண் சிங்கம். அவர் இறந்த அடுத்த நொடியே மத்திய பாதுகாப்புப் படைகள், மத்திய
அரசின் ராணுவம் என்று தமிழகத்தைச் சூழ்ந்து கொண்டது தமிழகத்தின் இருண்ட பக்கங்கள்.
*****
நிதர்சனம்
ReplyDelete