10 Jan 2017

இதுவரை 5000!


இதுவரை 5000!
            இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், எரிட்ரியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், துருக்கி, இந்தோனிசியா, டென்மார்க், இலங்கை என்று இதுவரை 5000 ஆர்வலர்கள் வலைப்பூவைப் பார்த்துப் பார்த்து பூரித்துள்ளனர்.
            உங்கள் பார்வை உங்களிடம் மகத்தான மாற்றத்தை உருவாக்கியிருக்கும்.           சமகாலத் தமிழ்நிலத்தை அதன் அசல் தன்மையோடு தொடர்ந்து வலைப்பூவில் மலரச் செய்து வருகிறேன்.
            அது நம்முடைய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள மட்டும். அதைத் தாண்டிய புதிய பல இருக்கின்றன.
            அனைத்து மரபார்ந்த தன்மைகளையும் உடைத்துக் கொண்டு புறப்படும் புதிய தொழில்நுட்பத் தடத்தில் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் அமைப்பு, வடிவம் அனைத்தும் புதிது. ஆக புதிய தத்துவ மரபில் நாம் பயணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
            நாம் பயணப்பட வேண்டிய தூரம் அதிகம். இது ஓடிக் கடக்க வேண்டிய தூரம் அல்ல. ரசனையால் கடக்க வேண்டிய தூரம்.
            முன்னர் நமக்கு முன்பிருந்த காலத்தைப் போல, எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதலியின் வரவுக்காகக் கூட காத்திருக்க வேண்டியதில்லை. அவள் இருக்கும் இடத்திலே அவள் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளும் நுட்பங்கள் நம்மிடம் இருக்கின்றன.
            காதலில் இணையும் அதே வேகத்தில், பிரிதலும் நிகழ்கின்றது. காதலிக்கும் நேரம் குறைவாகவும், பிரிந்த பின் அதற்காக அழும் நேரம் அதிகமாகவும் இருப்பது நம் நேரக் கணக்கில் நாமே கவனிக்கத் தவறிய ஒன்று.
            அந்தக் கவனித்தல் அவசியம்.
            ஒவ்வொரு மனிதனும் தன்னைப் புரிந்து கொள்ள, தன்னை நோக்கிய அந்தக் கவனித்தல் அவசியம்.
            அநேகமாக அந்தக் கவனித்தலை நீங்களே செய்வது கடினமாகலாம் அல்லது கடினமாக இருக்கலாம். உங்கள் முகத்தை நீங்களே எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள்? உங்கள் எதிரில் ஒரு கண்ணாடி நீட்டப்பட வேண்டியது அவசியம் அல்லவா!
            அந்த கண்ணாடிதான் இந்த வலைப்பூ!
            இதில் நீங்கள் உங்களைப் பார்க்கலாம். நீங்கள் நீங்களாய் மலரலாம்.
            வாசியுங்கள்! வசியுங்கள்!
            நண்பர்களுக்கு, உறவுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!
            இனி நாம் காணப் போகும் களம் புதிது.          
            இங்கே கவிதைகள் தத்துவங்கள் போல இருக்கும்.
            கதைகள் கவிதைகள் போல இருக்கும்.
            தத்துவங்கள் குட்டிக் கதைகள் போல இருக்கும்.
            வாழ்வெனும் இருளில் மின்னும் கண நேர வெளிச்சத்தில் நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம்.
            பார்க்க முடியாதவர்களுக்கு...
            மின்னல் வெளிச்சத்தை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ, அவ்வளவு நீட்டித்து இந்த எழுத்துகள் உங்கள் முன் மின்னிக் கொண்டிருக்கும். நீங்கள் கண நேரம் தாண்டியும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
*****

No comments:

Post a Comment