நாற்காலி சரிதம்
ஒரு காலி நாற்காலி
இலையுதிர் கால மரம் போல
இருக்கிறது!
அதில் ஒருவர் அமர்வது
அதன் வசந்த காலத்தைக்
கொலை செய்வது போல
இருக்கிறது!
வேரறுந்த மரத்திலிருந்து
நாற்காலிகள் உருவான பின்
அதில் வேர் விட என
முளைக்கிறார்கள்
நிறைய மனிதர்கள்!
*****
மழைபடுகடாம்
வானம் பூமிக்கு
முலைப்பால் ஊட்டிய போது
மழை பெய்தது!
அது புட்டிப்பால்
ஊட்ட முனைந்த போது
அமில மழை பெய்தது!
அதன் முலைகளில்
பிரெஸ்ட் கேன்சர் வந்த போது
நிரந்தரமாக அகற்றப்பட்ட
அதன் முலைகளிலிருந்து
பொழிந்து கொண்டு இருக்கிறது
பூமியெங்கும் ரசாயனங்கள்!
*****
இரவின் வயிறு
நெடிய இரவில்
நிறைய பேர் பசியோடு
படுத்திருக்கக் கூடும்!
குப்பைத் தொட்டிகள்
உணவால் நிரம்பியிருக்கக் கூடும்!
உணவு தேடி களைத்த
பறவையொன்றும்
வீதி தோறும் அலைந்து
பைசா காசு தேறாத
பிச்சைக்காரன் ஒருவனும்
பாடும் பாடலில்
அழகு கொள்கிறது இரவு
வயிறு முட்ட உண்டு
உறங்குபவனைப் போல!
*****
No comments:
Post a Comment