27 Dec 2016

இட்லி உப்புமா!


இட்லி உப்புமா!
            இட்லி உப்புமா என்பது செய்யப்படுவதல்ல. அது ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட மீந்த இட்லியை என்ன செய்வதென்று தெரியாமல் செய்யப்படுவது.
            உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளால் கள்ளப்பணமும், கருப்பு பணமும் உருவாகிறது என்றால் மீண்டும் 2000 ரூபாய் நோட்டை வெளியிடுவது இட்லி உப்புமா செய்வதைப் போன்றதுதான்.
            ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு ரெண்டு முறை மிஷினை ஓட்டி ரெண்டாயிரம் நோட்டை அடித்தவர்கள், இப்போது ஒரே ஓட்டில் ரெண்டாயிரம் நோட்டை அடித்து விடுவார்கள்.
            தேர்தல் நேரத்தில் கட்டு கட்டாக நோட்டுகள் பிடிபடுவது போல் ரெண்டாயிரம் நோட்டுகள் பிடிபடுவதைப் பார்க்கும் போது நோட்டுகளிலோ, பணபரிவர்த்தனை முறைகளிலோ கருப்புப் பணமோ, கள்ளப் பணமோ உருவாகவில்லை. அதைத் தடுக்கத் தவறிய முயற்சிகளிலிருந்துதான் அது உருவாகின்றது.
            நேர்மையானவர்கள் கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தும் துறைகளில் இல்லை. அப்படி இருப்பவர்கள் அந்த துறைகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
            தங்கத்துக்குத் திருடனைக் காவலுக்குப் போட்டு விட்டு தங்கம் திருடு போய் விட்டதாக புலம்புவதைப் போலத்தான் இதுவும்.
            அரசு என்பது நேர்மையான அதிகாரிகளை, அலுவலர்களை மதிக்க வேண்டும். காமராசர் அதைச் செய்தார். அதனால் அவரது அரசு இன்றும் பேசப்படும் அரசாக இருக்கிறது.
            இன்றைய நிலைமை . . .
            சகாயத்திற்கு அடிப்படை சகாயம் கூட செய்து தர யார் தயாராக இருக்கிறார்கள்? உமா சங்கர்களைப் புலம்ப விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இறையன்புகள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட வேண்டி இருக்கிறது.
            விளைவு . . . ராம மோகன ராவ்கள் தலைவிரித்து ஆடுகிறார்கள்.
            ஆட்சியாளர்கள் நல்லது செய்ய ஆசைப்பட்டால் நல்லவர்களை தங்கள் இயந்திரங்களில் வைக்க வேண்டும். நேர்மையானவர்களை மட்டுமே தங்கள் அருகில் நெருங்க விட வேண்டும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...