27 Dec 2016

தமிழக அரசியல் தலைவர் ஆவது எப்படி?


தமிழக அரசியல் தலைவர் ஆவது எப்படி?
            ஒவ்வொரு காலத்திலும் சில "ஆவது"கள் எளிதாகும். அதைப் பின்பற்றி பலர் அப்படி ஆகி விடுவார்கள்.
            பெருந்தலைவர் காமராசர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைய பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட ஆசிரியர்களானார்கள். இப்போது நிலைமையை நினைத்துப் பாருங்கள்! பி.ஹெச்.டி. முடித்தவர்கள் ஆசிரியராவதே கடினமாக இருக்கிறது.
            இப்போதைய நிலைமையில் தமிழக அரசியல் தலைவர் ஆவது எளிதாக ஆகி விட்டது. ஓர் அறிக்கை விட்டால் போதும். அதற்காக வீதியில் இறங்கத் தேவையில்லை. மக்களோடு விவாதிக்கத் தேவையில்லை. போராட்டமும் அவசியமில்லை. அப்படியே அவசியம் என்றாலும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் போட்டுக் கொள்ளலாம்.
            இன்று தலைவர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள். டிவிட்டரில் இருக்கிறார்கள். அல்லது அவர்கள் வீட்டில் சொகுசாக இருக்கிறார்கள். மக்கள் அருகில் யாரும் இல்லை. தேவையென்றால் செல்பி எடுத்துக் கொள்வதற்காக வருகிறார்கள். அப்படியே ஓடி விடுகிறார்கள்.
            கோட் சூட் போட்டு மாற்றத்தை முன்னிறுத்தியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் துபாய் பக்கம் அல்லது துபாய் பஸ் ஸ்டாண்ட பக்கம் இருக்கக் கூடும்.
            மக்கள் நலனுக்காக கூட்டணியை உருவாக்கியவர்கள் என்ன நினைத்தார்களோ? மக்கள் நலனுக்காக கலைத்து விட்டார்கள் போலும். சீட்டுக்கட்டு விளையாட்டு முடிந்து விட்டால் என்ன செய்வார்களோ அதைச் செய்து விட்டார்கள்.
            தமிழகத்தின் வறட்சித் தொடர்கிறது.
            விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரிக்கிறது.
            வங்கி வரிசையிலும், ஏ.டி.எம். வரிசையிலும் மயங்கி விழுந்து, மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருகுகிறது.
            பத்தாண்டுகளுக்கு முன்பு டெல்டா மாவட்டத்தில் பட்டினியால் ஒரு விவசாயி உயிரிழந்த போது இருந்த போராட்ட உணர்வு இப்போது தலைவர்களுக்கு இல்லை. கட்டு கட்டாக சேர்ந்து விட்ட பழைய ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாற்றப் போகிறோம் என்ற கவலையில் இருக்கிறார்களா அவர்கள் என்பதும் புரியவில்லை.
            தமிழகத்தின் மக்கள் தொகை அதிகரித்து விட்டது, இப்படியாவது குறையட்டும் என்று நினைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
            வெகுமானம் வாங்கும் தலைவர்கள் அதிகரித்து விட்டதால். தன்மானமுள்ள தலைவர்கள் நிர்மூலமாகி விட்டார்கள்.
            அவர்கள் தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற இருப்பார்களேயொழிய, சமூகத்தின் பெண்டு, பிள்ளைகள் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?
            பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் சுயநலன் மட்டுமே உள்ள மனிதனைக் கடிந்து கவிதை எழுதியிருப்பார். காலம் எவ்வளவு மாறி விட்டது பாருங்கள். இப்போது தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று இருக்கும் தலைவர்களைக் கடிந்து கவிதை எழுத வேண்டியிருக்கிறது.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...