பங்காளிகள் திருந்தட்டும்!
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மருத்துவமனையில்
இருந்த போது எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் மருத்துவமனையில் சென்று பார்த்தார்கள்.
தற்போது டாக்டர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில்
இருக்கும் போது தம்பிதுரை அவர்கள், ஜெயக்குமார் அவர்கள் வந்து பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் நல்ல அரசியல் பண்பாட்டின்
மறுதுவக்கம் இது.
காமராசர், அண்ணா காலத்து அரசியல் பண்பாடு
திரும்புகிறது.
அதே நேரத்தில்,
சேறு கொஞ்சம் வழிந்து போய் நாலு இஞ்ச்
வாய்காலின் அகலம் அதிகரித்தற்காகவும், கை பிசகாக பாறைக்கோல் ஒன்றரை சென்டி மீட்டர்
தள்ளிப் போய் விழுந்து, அதனால் ரெண்டு சென்டி மீட்டர் அளவுக்குத் தள்ளிப் போன வேலி
சண்டைகளுக்காகவும் நெடுநாளாய் பேசாமல், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கும்
பக்கத்து வீட்டுக் காரர்கள் கொஞ்சம் மனது வைக்க வேண்டும். ஒருவரையொருவர் பாருங்கள்.
பேசுங்கள்.
ஒரு காதுகுத்தலிலோ, கருமாதியிலோ லெக்
பீஸ் விழாமல் போனதற்காகவும், ஒரு இலையில் ரெண்டு வடை வைத்து, தன்னுடைய இலையில் ஒரு
வடை வைத்ததற்காகவும் சண்டையிட்டு இன்று வரை பார்க்காமல், பேசாமல் இருக்கும் பங்காளி
பெருமக்களும் கொஞ்சம் மனது வைக்க வேண்டும். எத்தனையோ குடும்பங்களில் பெரிசுகள் பங்காளிப்
பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், கொஞ்ச வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உயர்வான அரசியல் பண்பாடு
தழைத்த இந்த நேரத்தில் நாமும் அண்டை வீடுகளிடையே இணக்கமான பண்பாட்டையும், பங்காளி வகையறாக்களில்
கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகும் பண்பாட்டையும் தழைக்க வைக்கலாம்.
நமெல்லாம் பக்கத்து வீடுகளிலும், பங்காளி
வீடுகளிலும் சாப்பிட்டு வளர்ந்த பாசக்காரப் பய மக்கா. நம்ம வூட்டுலலாம் என்னைக்கு அடுப்பு
பத்த வெச்சிருக்காங்க சொல்லுங்க!
உங்க சண்டையினால அப்புறம் நிலைமை, ஆதார்
எண்ணெல்லாம் கொடுத்து கேஸ் சிலிண்டர் வாங்கி சமைக்கிறாப்ல ஆகிப் போச்சு!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment