சித்தப்பாவைப் பிடிக்கவில்லை!
உங்களுக்கு உங்கள் சித்தப்பாவைப்
பிடிக்காமல் போகாது. ஆனால் என் நிலைமையைப் பாருங்கள். என் சித்தப்பாவை எனக்குப் பிடிக்காமல்
போய் விட்டது. எனக்கு என் சித்தப்பாவைப் பிடிக்காமல் போனது சரியா? என்பதை நான் யாரிடம்
கேட்பது. நிச்சயமாக அதை என் சித்தப்பாவிடம் கேட்க முடியாது. கேட்டால் அடித்து துவைத்து
என்னை துவம்சம் பண்ணி விடுவார். பாவம் நான்!
அதனால்தான் உங்களிடம்
கேட்கிறேன். நான் எடுத்த முடிவு சரியா?
நான் ஏன் இந்த முடிவுக்கு
வந்தேன் என்பதை உங்களிடம் சொல்கிறேன்.
என் சித்தப்பா புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசி. கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருப்பவர்.
அம்மா அவர்கள் முதலமைச்சர் பதவியைத் துறந்த போது ரகளையில் ஈடுபட்டவர். கடைகளில் கல்
வீசியிருக்கிறார். கையில் இருந்த மிச்ச சொச்ச கற்களைப் பேருந்துகளின் மீதும் வீசியிருக்கிறார்.
சில நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி கொலை பட்டினியும் கிடந்திருக்கிறார். பிறகு நாங்கள்
எல்லாம் ஒருவாறாக சமாதானப்படுத்தி சாப்பிட வைத்திருக்கிறோம். அதில் குறிப்பாக, நான்
"சித்தப்பா! சித்தப்பா!" என கொஞ்சி கொஞ்சி அவருக்கு சோற்றைத் தட்டில்
எடுத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டு இருக்கிறேன்.
அவர் அம்மா அவர்களின்
மறைவின் போது செய்த காரியம் இருக்கிறதே! அதில்தான் அவரை எனக்குப் பிடிக்காமல் போனது.
அதை பற்றி ஒரு வார்த்தை கூட எங்களிடம் பேசவில்லை. பேசாதது மட்டும் இல்லை ஒரு சொட்டு
கண்ணீர் கூட அவர் கண்களிலிருந்து வரவில்லை. தொலைக்காட்சியில் இறுதி ஊர்வல நிகழ்ச்சியைக்
கூட அவர் பார்க்கவில்லை. அன்று இரவு நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டார். ஆனால் பாருங்கள்
குடும்பத்தில் நாங்கள் யாரும் அந்த இரவு சாப்பிடவில்லை.
இப்போதும் பாருங்கள்
அவர் பாட்டுக்கு ஹாயாக சுற்றிக் கொண்டு இருக்கிறார். யாரைப் பிடிப்பது, யாரைப் பார்ப்பது
என்ற பலத்த யோசனையில் இருக்கிறார்.
எனக்கு என் சித்தப்பாவைப்
பிடிக்காமல் போய் விட்டது.
நான் எடுத்த முடிவு
சரிதானா?
இதை நான் அவரிடம் தைரியாமாகச்
சொன்னால், எனக்கு சாயுங்காலம் வாங்கி வந்துக் கொடுக்கும் சமோசாவை நிறுத்தி விட மாட்டார்தானே!
நீங்கள்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அந்த சமோசாவை மனதில் வைத்து முடிவு சொல்லுங்கள்.
சமோசா முக்கியம் அன்பர்களே! என்னால் சாயுங்காலம் சமோசா சாப்பிடாமல் இருக்க முடியாது.
*****
No comments:
Post a Comment