20 Dec 2016

பாண்டுகுடி பயங்கரம்!


பாண்டுகுடி பயங்கரம்!
            விவசாயிகள் வயலுக்குச் சென்று வந்து சாகிறார்கள்.
            தொழிலாளிகள் வங்கிகளுக்குச் சென்று வந்து சாகிறார்கள்.
            வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பாடினார் என்றால், வாடிய பயிரைக் கண்டு உயிர் துறக்கும் விவசாயிகளைப் பார்க்கும் போது என்ன பாடியிருப்பார்?
            தினசரிகளைத் திறந்தால் நித்தம் ஒரு விவசாயி குறித்த மரணத்தைப் பார்க்க முடிகிறது. விவசாயத்தைச் சாகடித்து விட்டு, விவசாயிகளைச் சாகடித்து விட்டு, நாம் உயிரோடு இருந்து விட முடியும் என்று நம் ஆட்சியாளர்களால் எப்படி நினைக்க முடிகிறது?
            விவசாயிகளின் நிலை இப்படி என்றால், தொழிலாளிகளின் நிலை அதை விட மோசமாக இருக்கிறது. கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுகுடி என்ற ஊரைச் சார்ந்த தையல் தொழிலாளி ஒருவர் வங்கிக்குக்குப் பணம் எடுக்கச் சென்று, பணம் வழங்கப்படாததால் இதயம் துடித்து, வெடித்து இறந்திருக்கிறார்.
            அவரது கணக்கில் இருந்த இருப்பை கடனுக்கு ஈடாகப் பிடித்துக் கொண்டதாக வங்கி தரப்பில் விளக்கம் சொல்லப்படுகிறது. மல்லையா வாங்கிய கடனுக்கு ஈடாக இதே போன்று அவர்கள் செய்ய முடியுமா?
            மல்லையா போன்றவர்கள் வங்கிகளைச் சாகடிக்கிறார்கள். வங்கிகள் அதற்கு ஈடாக நாதியற்றவர்களையும், பரிதாபத்திற்குரியவர்களையும் சாகடிக்கிறது.
            வங்கிகள் மார்வாடிக் கடைகள் போலவும், மாபியா கும்பல்கள் போலவும், கந்து வட்டிக்காரர்கள் போலவும் நடந்து கொள்வது அங்கீகரிக்க முடியாத மனித உரிமை மீறல்கள்.
            வங்கிகள் என்பவைகள் வரவு-செலவு கணக்குகளைச் சட்டப்பூர்வமாக செய்ய அமைக்கப்பட்ட அமைப்புகள். சாவு-இழவுகளைச் செய்ய அமைக்கப்பட்ட அமைப்புகள் அல்ல.
            நமது அமைப்பே இப்படித்தான் இருக்கிறது.
            ருசிக்காக திருடுபவர்களை மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கிறது.
            பசிக்காக திருடுபவர்களை நாக்கை இழுத்து வைத்து வெட்டுகிறது.       
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...