26 Dec 2016

கெஞ்சிக் கேட்கிறோம் ஜி!


கெஞ்சிக் கேட்கிறோம் ஜி!
            4ஜி-க்கு வந்து விட்டோம் என்கிறார்கள். எங்கள் ஊரில் 2ஜி-யே தட்டுத் தடுமாறித்தான் கிடைக்கிறது ஜி.
            வாரத்தில் எப்படியும் செவ்வாய் கிழமை பீஸைப் பிடுங்கி விடுகிறார்கள். பராமரிப்பு பணியாம். அவ்வபோது கரண்ட் போகும், வரும். அது தனிக்கணக்கு ஜி.
            சுமார் அறுபது அல்லது எழுபது கிராமங்கள் இருக்கும். அதற்கு ஒரே ஒரு பேங்க். அதனுடன் இணைந்த ஏ.டி.எம்.மை வங்கித் திறக்கும் போது திறக்கிறார்கள். வங்கியை மூடும் போது அதையும் சேர்த்து மூடி விடுகிறார்கள் ஜி.
            ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேருக்கு பணம் எடுத்துக் கொடுப்பவர் ஏ.டி.எம். காவலாளிதான். ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு ரொம்ப தடுமாறுகிறார்கள் ஜி.
            அடிப்படையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது ஜி.
            தங்கு தடையற்ற இணையம் முதல் தேவை. அதையும் ஒரு ஜி.பி. என்று கணக்கு வைத்து அதற்கு 143 விலை நிர்ணயித்தால் தினக்கூலியாக நூறும், நூற்றம்பைதும் வாங்கும் அன்றாடங்காய்ச்சிகள் சோறு பொங்கிச் சாப்பிடுவதா? இணைய இணைப்பைக் கொடுத்துக் கொண்டு பட்டினி கிடப்பதா?
            மின்சாரம் போய் - மொபைல் அல்லது லேப்பில் சார்ஜூம் போய் - நிலைமையை நினைத்துப் பாருங்கள். இ பேங்கிங், இ வாலட், மொபைல் பேங்கிங் எல்லாம் இருக்கும். டிரான்ஸாக்ஸன் இருக்காது.
            போன கரண்ட் எப்போது வரும் என்று ஈ.பி.யில் போன் பண்ணிக் கேளுங்கள்! எரிந்து விழுவார்கள். அவ்வளவு ஆள் பற்றாக்குறையாம் அங்கு. வரப்ப வரும் என்று கூலாகச் சொல்வார்கள்.
            எங்கள் கிராமத்து மக்களில் கை நாட்டுகள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம்தான் எளிது. ஏ.டி.எம்.கார்டுகளைப் பயன்படுத்துவதற்காக அவர்கள் இன்னொருவரைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. பணம் எடுத்துத் தரும் ஏ.டி.எம்.காவலாளிகள் இல்லாவிட்டால், யாராவது வரும் வரை காத்துக் கிடப்பார்கள். கண்காணிப்புக் கேமிராக்கள் வைத்து விட்டதால் ஏ.டி.எம். காவலாளிகள் இல்லாத எத்தனை ஏ.டி.எம்.மையங்கள் இருக்கின்றன? என்ன செய்வார்கள் எங்கள் கிராமத்து மக்கள்?
            உங்கள் வங்கிகள் கிராமத்தில் எத்தனை இருக்கின்றன? நகரத்தில் எத்தனை இருக்கின்றன? நகரங்களில் முக்குக்கு ஒன்று இருக்கும். கிராமங்களில் பத்து கிராமங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் கூட இல்லையே.
            வங்கியில் கணக்குத் தொடங்குவதற்காக நடையாய் நடந்து கால் தேய்ந்தவர்கள் எத்தனை பேர்? செருப்பு வாங்க காசிருந்தால் அவர்களின் கால் தேய்ந்திருக்காது ஜி!
            நல்ல சோறு இல்லை.
            நல்ல சாலை இல்லை.
            நல்ல உடை இல்லை.
            நல்ல வீடு இல்லை.
            மோசமான கழிவறைக் கூட இல்லை.
            நல்ல செல்பேசி இல்லை. உடைந்தது பாதி உடையாதது பாதி என்று ரப்பர் பேண்டை வைத்துக் கட்டிக் கொண்டு அதில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
            பேருந்து வசதி இல்லை.
            நல்ல குடிநீர் இல்லை.
            செத்தால் சுடுகாட்டுக்குச் செல்ல நல்ல பாதை இல்லை.
            அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை.
            ஆனாலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
            அவர்களிடம் வருவது அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், அரசியல்வாதிகள், கடத்தல்காரர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் பேர்வழிகள், லஞ்சப் பேய்கள் என்று எல்லாம் உறிஞ்சியது போக கடைசிச் சொட்டுப் பணம்தான். அதையும் பணமில்லா பொருளாதாரம் என்று பெயரில் உறிஞ்சி விடாதீர்கள் ஜி.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...