குடி
ஓசியில்
வாங்கிக் குடித்ததில்
குடிக்க ஆரம்பித்தான்!
பையில் பணம்
தீரும் வரை குடித்தான்!
வீட்டில் உள்ள பொருள்கள்
அனைத்தும் அடகுக்கடையில்
அடைக்கலம் ஆகும் வரை வரை குடித்தான்!
அதன் பின்னும்
கடன் வாங்கிக் குடித்தான்!
பெருங்குடிகாரனாகி
இறந்த பின்
போதையேற்றிய
பெருங்குடி மக்கள்
துக்கத்தில் கலந்து கொண்டு
போதையேற்றிக் கொண்டு
சுமந்து செல்கின்றனர்
அவன் சடலத்தை!
*****
துளிர்
இலையுதிர் கால மரத்திலிருந்து
இலைகள் உதிர்கின்றன
பறவைகள் வந்தமர்கின்றன
இலைகள் துளிர்ப்பதைப் போல!
*****
பார்த்தல்
யாரும் சீண்டாத
பாழுங் கிணற்றில்
அனுதினமும்
முகம் பார்த்துக் கொண்டு
போகிறது நிலா!
*****
உயிர்
சருகுகளில்
சலசலக்கிறது
மரத்தின் உயிர்!
*****
தெரிதல்
சவால் விட்டுப்
பறந்து கொண்டிருக்கும்
மின்மினிப் பூச்சிகளுக்குத்
தெரியும்
முன்னொரு காலத்தில்
அவைகள்
நட்சத்திரங்களாக இருந்தது!
*****
மனுஷி
கொஞ்சம் அதிர்ச்சியாக
இருக்கிறது
அம்மாவின் காதலர் என்று
ஒருவரைச் சந்திக்கையில்!
சந்தோஷமாகவும் இருக்கிறது
அவளும் மனுஷிதான்
என்று நினைக்கையில்!
*****
No comments:
Post a Comment