பிறப்பு
ஆற்றங்கரையில் பிறந்திருந்தாலும்
மணல் அள்ளிப் பிழைத்திருப்பேன்!
காட்டுப்புறத்திலும் பிறந்திருந்தாலும்
மரம் வெட்டி பிழைத்திருப்பேன்!
சேரி ஓரத்தில் பிறந்திருந்தாலும்
மலம் அள்ளி பிழைத்திருப்பேன்!
கடற்கரை ஓரத்தில் பிறந்து விட்டேன்
துப்பாக்கிச் சூட்டில் சாகிறேன்!
*****
பந்தயக் குதிரைகள்
குதிரைப் பந்தயங்கள்
ஒழிந்து விட்டன
என்கிறார்கள்
நாமக்கல்லிலோ
திருச்செங்கோட்டிலோ
இன்ன பிற
தமிழ்நாட்டின் உறைவிடப்
பள்ளிகளிலோ
பிள்ளைகளைப்
பந்தயமாகக் கட்டி
மதிப்பெண் மைதானத்தில்
குதிரைகளாய் ஓட வைப்பவர்கள்!
*****
கறை
அப்பாவிகளாய் இருக்கிறார்கள்
என்கிறார்கள்
நாகரிகம் இல்லை
என்கிறார்கள்
பண்பாடு இல்லாதவர்கள்
என்கிறார்கள்
அவர்கள் அவர்களின்
வாழ்வை வாழ்ந்தார்கள்
அறிவின் கறை
அங்கில்லை என்பதை
நாமெப்படி
பாடம் எடுப்பது
நமது அறிவாளிகளுக்கு?
*****
No comments:
Post a Comment