4 Dec 2016

குனிந்த தலை நிமிர்கையில்...


குனிந்த தலை நிமிர்கையில்...
எதற்காகக் கட்டிக் கொடுத்தோம்
என்று யோசிக்காமலே,
"நனைஞ்சே சுமக்கப் போறீங்க!"
என்கிறான்
மாப்பிள்ளைக்குத் தந்தையாகப்பட்டவன்.

"நாலு நாள் என்ன?
நாப்பது வருஷமானாலும்
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!"
என்கிறாள்
மாப்பிள்ளைக்குத் தாயாகப்பட்டவள்!

இன்னொரு குடும்பத்தில்
சென்று வாழப் போகிறவள்
என்பது மறந்து,
"எங்க குடும்பத்துக்கு
இதெல்லாம் சரிபட்டு வராது!"
என்கிறாள்
நாத்தனாராகப்பட்டவள்!

"இப்படின்னு தெரிஞ்சிருந்தா
கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்!"
இழிமொழி பேசுகிறான்
மாப்பிள்ளையாக வந்து
கல்யாணம் செய்து கொண்டவன்.

இந்த முறை பொறுமையாக இருப்பதற்கில்லை
என்று
பெருங்குரலெடுத்து
"இருபத்து இரண்டு வருஷம் வளர்த்த எனக்கு
இனிமே வளர்க்கிறது ஒண்ணும் சிரமமில்லைடா!
வெளியே போங்கடா நாய்களா!"
என்கிறார்
மகளைப் பெற்றதற்காக
ஒவ்வொரு முறையும்
தலைகுனிந்த தந்தை.

"அந்த பத்து பவுன் மேட்டர்..."
என்று நிலைமையைச்  சாந்தப்படுத்துவதாக
நினைத்துப் பேச முன் வருகிறான்
மாப்பிள்ளை வீட்டுக்காரன் என்று
சொல்லிக் கொள்ளும் ஒருவன்.

"அட போங்கடா!
நீங்க கேட்குற பவுனும்,
உங்க பவுசும்!"
என்று
ஆவேசமாக கீழே கிடந்த கல்லை எடுத்து
தெருநாய்கள் மேல் வீசுகிறார்
இம்முறை மகளைப் பெற்றதற்காக
தலைகுனிய விரும்பாத தந்தை!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...