28 Dec 2016

நவீன துச்சாதனன்கள்

நவீன துச்சாதனன்கள்
            பாரதக் கதையோடு மறைந்து விடவில்லை துச்சாதனன்கள். பாரதத்தின் காலந்தோறும் அவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய உருவாக்கம் திரைப்பட இயக்குனர் சுராஜ்.
            அவர் கத்தியை எடுத்தது கத்திச்சண்டை என்ற திரைபடத்திற்காக என்று நினைத்தால், நடிகைகளின் ஆடைகளைக் கத்தரிக்கத்தான் என்று கருத்து மழை பொழிந்திருக்கிறார்.
            நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்குவதால் எப்படி ஆடையைக் குறைத்துக் கொடுத்தாலும் அணிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவராம் சுராஜ். அதற்கு ஆடையே கொடுக்காமல் அடல்ட்ஸ் ஒன்லி படம் எடுக்கும் இயக்குனர்கள் எவ்வளவோ மேல். தாங்கள் இத்தகைய படம்தான் எடுக்கிறோம் என்று சொல்லி விட்டு எடுக்கிறார்கள். நீங்கள் குடும்பத்தோடு பார்ப்பதற்காக படம் எடுப்பதாகக் கூறிக் கொண்டு இப்படி கச்சடாக்களாக எடுத்துத் தள்ளுகிறீர்கள்.
            இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அதாகப்பட்டது,
            1) அவர் தயாரிப்பாளருக்கு அவ்வளவு விசுவாசமாக அவர் கொடுக்கும் பணத்திற்கு வேலையை வாங்குகிறாராம்.
            2) இயக்குனர் என்ற வகையில் அவர் கண்டிப்பானவராம்.
            3) தமிழ் ரசிகர்கள் இப்படித்தான் ரசிப்பார்கள் என்பது அவரது ஆய்ந்தெடுத்த கடைந்தெடுத்த கணிப்பாம்.
            இனி மேற்கூறிய ஒவ்வொன்றின் பின்புலங்களை ஆராய்வோம். முதல் கூற்றின்படி பார்த்தால்  தயாரிப்பாளர்கள் அது போன்ற மலினமான ஒன்றிற்காக கோடிகளைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்துகிறார்.
            ஓர் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைத்து அதைத் தைத்துத் தரும் தையல் சமூகத்தையும் அவர் பழிக்கு உள்ளாக்குகிறார்.
            இரண்டாவது கூற்றை எடுத்துக் கொண்டால், ஓர் இயக்குனர் தான் விரும்பும் காட்சி எப்படி வர வேண்டுமோ, அதற்காக ஒரு நடிகையை நடிக்கச் சொல்லி வற்புறுத்தலாம். இப்படி குறைந்த அளவிலான ஆடையைதைத்தான் அணிந்து வர வேண்டும் என்று வற்புறுத்தினால், இவரும் கதையை நம்பாமல், சதையை நம்பி படம் எடுக்கும் மற்றொரு இயக்குனராகிறார்.
            ஏன் இவ்வளவு கண்டிப்பு? சுராஜைப் போன்ற இயக்குனர்கள் நடிகைகளின் ஆடைகளில் போடும் கத்திரிகளுக்கு, சென்சாரில் கத்திரி போட மாட்டார்கள் என்ற அலட்சியப் போக்குதான் அவரின் இத்தகைய கண்டிப்புக்குக் காரணம்.
            மூன்றாவது கூற்றின்படி பார்த்தால், தமிழ் ரசிகர்களை அவர் இழிவு செய்கிறார். சுராஜ் குறிப்பிடும் ஆடை கவர்ச்சிகள் மற்றும் அசிங்கங்கள் இவைகளைப் பார்க்க திரைப்படத்திற்கு வர வேண்டும் என்ற அவசியம் இன்றில்லை. இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன குப்பைகள் போல. ரசிகர்கள் நல்ல கதையம்சமும், கற்பனையம்சமும், கருத்துவளமும் உள்ள படங்களை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களை நம்பி இன்னும் திரையரங்கத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
            குறைந்தபட்சம் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தால் கூட போதும் என்ற குறைந்தபட்ச நோக்கத்திற்காக வரும் ரசிகர்களும் ஆடைகளைக் குறைத்துக் காட்டும் நாயகிகளைப் பார்க்க வருவதாக நினைக்கும் சுராஜ் போன்றவர்களின் அபத்தமான சிந்தனைப் போக்குதான் இதன் பின்புலம்.
            சுராஜ் அவர்களே!
            திரைப்படங்கள் நிர்பயாக்கள் உருவாக்குவதற்கு காரணமாகின்றன என்ற கூற்றிற்கு வலு சேர்ப்பது போல இருக்கிறது உங்கள் வாதம். உங்களின் கூற்று மூலம் தரம் தாழ்ந்த உணர்ச்சிகளை ரசிகர்கள் மேல் திணித்து இருக்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
            உங்களின் இந்தக் கூற்றைப் படிக்கும் உங்கள் தாய், உங்கள் மனைவி, உங்கள் சகோதரிகள், உங்கள் பிள்ளைகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? நீங்கள் நல்ல சிந்தனையோடு உழைத்து பணம் சம்பாதிப்பதாக அல்லவா அவர்கள் இவ்வளவு நாள்கள் நினைத்துக் கொண்டு இருந்திருப்பார்கள். நீங்கள் இப்படிப்பட்ட சிந்தனைகளை மூலதனமாக வைத்துதான் சம்பாதிப்பதில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்பது அறிந்தால் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்.
            நல்லவேளை, நீங்கள் மன்னிப்பு கேட்டு விட்டீர்கள். அப்படி சொல்வது கூட தவறுதான். உங்களை மன்னிப்பு கேட்க வைக்கும் அளவுக்கு நயன்தாரா அவர்களும், தமன்னா அவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். அந்தப் பெண் சிங்கங்கள் சீறவில்லை என்றால் நீங்கள் அடிபணியப் போவதில்லை.
            உங்களை மட்டும் குறை கூறி என்ன செய்வது? இதே சிந்தனைதான் உங்களுடைய குருநாதர் தொடங்கி பலருக்கும் இருக்கிறது. பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களைத் துகிலுரியச் செய்யச் சொல்ல துரியோதனன்கள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். நீங்கள் துச்சாதனனாக இருக்கிறீர்கள். ஆடை கொடுக்க வேண்டிய கிருஷ்ணர்களிடம் பிருந்தாவனத்து கோபியர்களின் ஆடைகளை அள்ளும் கதாபாத்திரத்தை மட்டும் கச்சிதமாகச் செய்தால் போதும் என்கிறீர்கள்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...