3 Dec 2016

கவலை வேண்டாமா?


கவலை வேண்டாமா?
            வயது வந்தோர்க்கான படம் எடுத்து அதிலிருந்து வருமானம் ஈட்டி, தரமான படங்களாக எடுக்கத் தொடங்கியவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
            அவருக்கு மகனாகப் பிறந்த ஒரு நாயகன் தரமான படங்களாக நடிக்கத் தொடங்கி வருமானம் ஈட்டி, தற்போது வயது வந்தோருக்கான விடலைத் தனமான படங்களாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
            படத்தின் தலைப்பைக் "கவலை வேண்டாம்" என்று வைத்திருப்பதில் இருக்கிறது பல சூசகமான விசயங்கள்.
            ஆபாச காட்சியமைப்புகள் இருக்கும்! கவலை வேண்டாம்!
            சிற்றின்ப வேட்கையைத் தூண்டுவோம்! கவலை வேண்டாம்!
            பண்பாட்டை மலினப்படுத்துவோம்! கவலை வேண்டாம்!
            பெண்களைக் கேலிப் பொருளாக்குவோம்! கவலை வேண்டாம்!
            ஈவ் டீசிங் பண்ணுவோம்! கவலை வேண்டாம்!
            வன்கொடுமை செய்வோம்! கவலை வேண்டாம்!
            ஓடும் பேருந்தில் கற்பழிப்போம்! கவலை வேண்டாம்!
        இரயில் நிலையங்களில் பெண்களைக் குத்திக் கொல்லுவோம்! கவலை வேண்டாம்!
            இப்படி எதற்கும் கவலை வேண்டாத தேசமாக மாற்றி விட்டால், எப்படி படம் எடுத்தாலும் கல்லா கட்டலாம்! கவலை வேண்டாம்!
            கவலைப்பட்டுதான் என்ன பண்ணப் போகிறோம்? இவர்கள் இப்படி படம் எடுப்பதை நிறுத்தப் போகிறார்களா?
            கோபப்பட்டு என்னவாகப் போகிறது? என்று அன்று இருந்த சமூகத்திடம் பாரதி சொன்னான், "ரெளத்திரம் பழகு". அந்த ரெளத்திரம்தான் அரசியல் விடுதலைக்கு அடிப்படையானது.
            கவலைப்பட்டு என்னவாகப் போகிறது? என்று கவலைப்படாமல் இருந்து விட வேண்டாம். "கவலை வேண்டும்!" என்ற அந்தக் கவலைதான் உண்மையான பண்பாட்டு விடுதலைக்கு அடிப்படையானது. இது போன்ற திரைப்படங்களிலிருந்தும் நாம் விடுதலை அடைவதற்கு அடிப்படையானது.
            கவலைதான் பல நேரங்களில் அக்கறையாக பிறப்பெடுக்கிறது. அந்தக் கவலையை வேண்டாம் என்று சொல்வதன் மூலம் சமூக அக்கறை என்ற தளத்திலிருந்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்ள நினைக்கிறது இத்திரைப்படம்.
            ஜி.வி.பிரகாஷ்குமார்கள் தொடங்கி வைத்த அத்தியாயத்தை, ஈ, கற்றது தமிழ் போன்ற தரமான படங்களைத் தந்த ஜீவா வழிமொழிவது கவலையைத் தருகிறது. அதற்காக கவலை வேண்டாம் என்பதைத்தான் இத்திரைப்படத் தலைப்பு மூலம் பதிலாகச் சொல்கிறாரா ஜீவா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.          
            கவலை வேண்டும் ஜீவாவுக்கு!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...