13 Dec 2016

சென்னை 600028


சென்னை 600028
            கூரியர் வந்த பிறகு அஞ்சல் துறை தன் வீழ்ச்சியைச் சந்தித்தது. நமீதா போல் கடிதக் கட்டுகளைச் சுமந்து வந்த தபால்காரர்  சிம்ரன் போல் கடிதக்கட்டுகளைச் சுமந்து வந்தார். இமெயில், எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், வாட்ஸ் அப் என்று வந்து விட்டப் பிறகு அவர் கையில் உள்ள தபால்கட்டு ஓமக்குச்சி நரசிம்மன் அளவுக்கு சுருங்கி விட்டது.
            வங்கிக் கடிதங்கள், இன்ஷ்யூரன்ஸ் நினைவூட்டல் கடிதங்கள், அடக்கடை கடிதங்கள், கோர்ட் சம்மன்கள், மணியார்டர்கள் என்று மிக முக்கிய கடிதங்களே தபால் மூலமாக வருகிறது.
            தபால் மூலம் கடிதம் அனுப்புவது மறைந்து விட்டாலும், பின்கோடு என்பது இன்னும் நம் மனதை விட்டு மறையாமல் இருக்கிறது. நமக்கான செல்போன் எண்கள் போல், நமது வசிப்பிடத்திற்கான செல்போன் எண் என்று இதைச் சொல்லலாம்.
            சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த பின்கோடு எண்ணைப் பார்த்த போது எனக்கு மேற்கூறியவைகள்தான் நினைவுக்கு வந்தன.
            ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போனாலும் போகாத பல விசயங்களில் ஒன்று கிரிக்கெட். அவர்கள் கிரிக்கெட்டைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கே அதில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்தது நாமாகத்தான் இருப்போம்.
            இந்த மேட்ச் பிக்சிங் பற்றியும் அதில் புரளும் கருப்புப்பணம் பற்றியும் வெங்கட் பிரபு மங்காத்தா என்ற படத்தின் மூலம் சொல்லியிருப்பார். கூடுதலாக பணத்தைக் கண்டெய்னர் மூலம் கடத்தும் விசயத்தையும் அதில் இணைத்திருப்பார். அண்மையில் ஐநூறு கோடிக்கு மேல் தமிழகத்தில் ஒரு கண்டெய்னர் பிடிபட்ட போது இதையெல்லாம் எப்படி அவர் முன்கூட்டியே அவதானித்தார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
            கருப்புப் பணம் குறித்த ஒரு படமாகவும் அவரது மங்காத்தா படத்தைக் குறிப்பிடலாம். கருப்பாக மாறிய பணம் இந்திய நாட்டில் இருக்காது, அது அந்நிய நாட்டு வங்கிகளுக்குச் சென்று விடும் என்று கிளைமாக்சில் முடித்திருப்பார் அந்தப் படத்தில் வெங்கட்பிரபு. அப்படிப் பார்த்தால் உலக நாடுகளில் உள்ள பணத்தையெல்லாம் பணமாற்ற மதிப்பு செய்தால் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம் போல. அதற்கு மற்ற நாடுகள் சம்மதிக்க வேண்டுமே! பல நாடுகளுக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரதமர் இது குறித்து பல நாடுகளிலும் பேசிப் பார்த்தால் காரியம் நடக்கலாம்.
            இனி சென்னை 600028 பாகம் இரண்டிற்கு வருவோம்.
            கிரிக்கெட்டால் இணையும் நட்பைப் பற்றி பேசும் எதார்த்த வகை உணர்வுப்பூர்மான திரைப்படமே சென்னை 600028. நகைச்சுவையாக விரியும் இத்திரைப்படத்தின் ஊடாக ஜம்பம் அடிக்கும் மனிதர்களின் பல உட்டாலக்கடிகைளை அசலாட்டாக விளாசித் தள்ளியிருப்பார் வெங்கட் பிரபு.
            சென்னை 600028 இன் முதல் பாகத்தில் வெங்கட் பிரபு விளாசித் தள்ளியது சிக்சர் என்றால், அதைப் போன்ற சிக்சருக்கே இரண்டாம் பாகத்திலும் முயற்சித்திருக்கார். சிக்சருக்குச் சென்ற பால் பெளண்டரிக்குச் சற்று முன்னே விழுந்திருப்பதால் இந்தப் படம் ஒரு "போர்"க்குச் சமம்.
            முதல் பந்தை சிக்கருக்கு விளாசி, அடுத்தப் பந்தையும் தைரியமாக சிக்சருக்குத் தூக்கி அது "போர்" ஆவதற்கு தைரியம் வேண்டும்.
            தைரியமாக முயற்சித்திருக்கிறார் வெங்கட்பிரபு. வாழ்த்துகள்!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...