25 Nov 2016

காசேதான் கடவுளடா! சாத்தானடா! அந்த சாத்தானுக்கும் இது தெரியுமடா!


காசேதான் கடவுளடா! சாத்தானடா! அந்த சாத்தானுக்கும் இது தெரியுமடா!
            பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாது என்பதை காலம் நிரூபித்து விட்டது.
            ‍அதே நேரத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், காசோலைகள் மூலம் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலைமை உருவாகி விட்டது.
            இதெல்லாம் நம் அண்ணாச்சி கடைகளுக்கு பாதகமாகவும், ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு சாதகமாகவும் படுகிறது. இதில் ஏதேனும் உள்குத்து அரசியல் இருக்கிறதா என்பதை அரசியல் நோக்கர்கள்தான் கூற வேண்டும்.
            மளிகைப் பொருள்களை வரை ஆன்லைன் நிறுவனங்கள் விற்கப் போவதாக அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது இந்த பணமாற்ற விசயமே ஆன்லைன் நிறுவனங்களுக்குச் சாகமாக எடுக்கப்பட்ட முடிவாகக் கூட தோன்றலாம்.
            இதை வைத்துக் கொண்டு அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கல்லா கட்டி விடக் கூடும். பாவம், அண்ணாச்சிக் கடைகள் எல்லாம் கல்லாவைக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
            கருப்புக்கும் (கருப்புப் பணத்துக்கும்) வெள்ளைக்கும் (வெள்ளைப் பணத்துக்கும்) இடையே நடக்கும் மாபெரும் யுத்தமாக சித்தரிக்கப்படும் இந்த பணமாற்ற முயற்சியால், பொதுமக்கள்தான் பாவம் மாற்ற பணம் கூட இல்லாமல் அல்லல்படுகிறார்கள்.
            இதில் ஒரு நன்மையாக, தற்காலிகமாக கடத்தல்காரர்கள் இந்திய கரன்சிகளைக் கடத்துவதை ஒத்தி வைத்திருக்கலாம். அவர்களும் புதிய கரன்சிகள் வந்ததும் திரும்ப ஆட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். "கைக்கு கை மாறுமே பணமே! உன்னை கைப்பற்றத் துடிக்குது மனமே!" என்ற சில காலம் அவர்களால் பாட முடியாது என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
            அதே நேரத்தில் இந்நேரம், கருப்புப் பண முதலைகள் எல்லாம் கார்டுகளைக் கொண்டும், காசோலைகளைக் கொண்டும் படா மீன்களாகப் பிடித்துச் சுட்டு வறுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.
            இருந்த பணத்தையெல்லாம் வங்கியில் செலுத்தி விட்டு, நம் பணத்தை நாமே எடுக்க முடியாமல்,
            "கையில வாங்குனேன்! பையில போடல! காசு போன இடம் தெரியல!" என்று டணால் தங்கவேல் கணக்காக தகிடுதித்தம் போட வேண்டியிருக்கிறது.
            என் தங்கம் என் உரிமை என்ற புரட்சிப் போரட்டம் நடந்த நாடு அல்லவா!      என் பணம் என் உரிமை என்ற போராட வேண்டி வருமோ?
            உச்ச நீதி மன்றமே அப்படித்தான் சொல்லியிருக்கிறது, நாட்டில் புரட்சி வெடிக்கும் அபாயம் இருப்பதாக.
            நாட்டில் திருட்டுப் பயம், கொள்ளை பயம், கள்வர் பயம் காரணமாக அக்கெளண்டில் பணத்தைப் போட்டு விடுங்கள் என்று சொன்னவர்கள் எல்லாம், கையில் ரொக்கமாகக் (புதிய நோட்டாக) கொடுங்கள் என்று கேட்கிறார்கள். திருட்டுப் பயத்தை விட இந்த பயம் அதிகமாகி விட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.
            தெனாலி படத்தில் கமல் சொல்வாரே சர்வமும் பயமயம் என்று!
            பழைய ஐநூறைக் கண்டால் பயம்!
            பழைய ஆயிரத்தைக் கண்டால் பயம்!
            புதிய இரண்டாயிரத்தைக் கண்டால் சில்லரை மாற்ற முடியுமா என்ற பயம்!     வங்கிக்குச் சென்றால் கூட்டத்தைக் கண்டு பயம்!
            அஞ்சலகத்திற்குச் சென்றால் சிறுசேமிப்பில் பணம் போட முடியுமா என்று பயம்!
            ஏ.டி.எம். முன் நான்கு கிலோமீட்டருக்கு நிற்கும் வரிசையைக் கண்டு பயம்!
            கையில் வைத்த கரும்புள்ளியைப் பார்க்கும் போதெல்லாம் பயம்!
            எல்லாம் பயம்!
            பணம் என்றால் ரொம்ப ரொம்ப பயம்!
பாரதி இன்று இருந்திருந்தால்,
            ‘தனியொரு மனிதனுக்கு பணமில்லை என்றால்
            இந்த ஏ.டி.எம்.களை அழித்திடுவோம்!’
என்று பாடியிருக்கக் கூடும்.
            சுதந்திர இந்தியாவில் இதையெல்லாம் பார்க்க அவருக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை,

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...