சோறூட்டல்
நட்சத்திரங்களையும், நிலாவையும் தன்
ஆன்ட்ராய்டு போனில் காட்டிக் காட்டிச் சோறூட்டிக் கொண்டிருந்தாள் பொம்மின் மம்மி
நிம்மி!
*****
தாகம்
வாட்டர் கேன் போட்டு வெளியே வந்த கந்தன், சாலையோர பைப்பில் தீர்த்துக் கொண்டான் தாகத்தை!
*****
செல்பி
ரயில் வந்து மோத, உடல் துண்டு துண்டாகச் சிதறுவதற்குள் சரியாக செல்பியை எடுத்து
முடித்திருந்தனர் ரயில் முன் பாய்ந்த தேனரசனும், நித்யாவும்.
*****
சமத்துச்
சம்புலிங்கத்தின் கண்டுபிடிப்புகளில் சில
1) வங்கியில் இப்போது மாற்றும் பணத்தையும்
மீண்டும் கருப்பு பணமாக்கி விடக் கூடாது என்பதற்காகவே பணம் மாற்றும் போது வைக்கப்படும் கருப்பு மை.
2)
வங்கிக்குச் செல்ல இருப்பவர்கள் டை அடிக்கும் போது எச்சரிக்கையாக
கையில் மை பட்டு விடாமல் அடிப்பது
அவசியம். கரிப் பாத்திரங்கள் தேய்த்து மனைவிக்கு
உதவுபவர்களுக்கும் இந்த விசயத்தில் எச்சரிக்கை முக்கியம்.
3) ஒரு முறை பணம் மாற்றி போதாமல், பணத்தட்டுபாடு உள்ளவர்கள்
மறுமுறை முழங்கை வரை கட்டுப் போட்டு கழுத்தில் ஒரு கயிறைப் போட்டு அதில் கையை மாட்டிக்
கொண்டு செல்க. ஆனாலும் சூதானமாகச் செயல்படுவது இன்றியமையாதது.
4) உடனடி பணத்தட்டுபாடு உள்ளவர்கள்
மறுகல்யாணத்திற்கு முயன்று பார்க்க. கல்யாணப் பத்திரிகை போன்ற சமாச்சாரங்களைக்
காட்டி கட்டிய இரண்டரை லட்சத்தை எடுக்க வசதியானது. இன்னும் கல்யாணம்
ஆகாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இதற்காகவேனும் உடனடியாக கல்யாணம் பண்ணிக் கொள்க. கல்யாண தசை வந்து விட்டது மக்கா உங்களுக்கு! ஜாதகத்தால்
தடைபடும் திருமணங்கள் நடக்க இதைப் போல சாதகம் இனி வராது.
5)
நள்ளிரவில் நடுரோட்டில் கையில் வைக்கப்பட்ட மையோடு செல்வதைத்
தவிர்க்க. வங்கியிலிருந்து இன்னும் பணம் எடுக்கவில்லை என்று தப்பிக்க நினைத்தாலும் கையிலிருக்கும்
மை கொள்ளைக்காரர்களிடம் காட்டிக் கொடுத்து விடும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செல்ல
வேண்டி இருப்பவர்கள் கையில்
க்ளவுஸ் அணிதல் நலம்.
6)
மூவாயிரம் வாடகைக் கொடுப்பவர்கள், வங்கியில் மாற்றி
விட்ட இரண்டாயிரத்திற்காக
வருத்தப்படாமல், வீட்டை இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் காலி செய்க. குடும்பத்தோடு வங்கி வரிசையில் நின்று கொண்டிருந்தால் ஒரு மாதம் போகிற போக்கில் போய் விடும்.
ஒரு மாத வாடகை மிச்சம் ஆவதோடு வீட்டில் இருக்கும் எல்லோர் தலைக்கும் தலா இரண்டாயிரம் மாற்றி விடலாம்.
*****
No comments:
Post a Comment