24 Jan 2026

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

அரசியல் என்றால் சத்தம்தான். சத்தம் இல்லாமல் அரசியல் ஏது? வெற்றிடத்தில் சத்தம் கிடையாது என்கிறது அறிவியல். அரசியலில் ஏது வெற்றிடம்? வெற்றிடமில்லாத அரசியலில் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் இப்போது தமிழக அரசியலில் ஒரே சத்தம். அது – ‘விசில்’ சத்தம்! அது வெற்றிச் சத்தமாகுமா? அல்லது விஜயகாந்தின் முரசு சத்தம் போலாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த விசிலுக்குப் பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. ரஜினிகாந்த் சினிமாவுக்கு வரும் முன்பு அவர் கையில் இருந்தது விசில். இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குச் செல்லும் போது அவர் கையில் கிடைத்திருக்கிறது. அவர் படத்தை விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இப்போது இந்தச் சின்னம் கிடைத்ததை அதே சின்னத்தை வைத்தே சின்னமடித்து அதாவது விசிலடித்துக் கொண்டாடுகிறார்கள். மொத்தத்தில் கொண்டாட்டத்தில் அதீத ஆர்வம் நிறைந்த தொண்டர்களுக்கு கொண்டாட்டத்திற்கான ஒரு சின்னமே கிடைத்திருக்கிறது. அது வெற்றிச் சின்னமாக ஆகுமா என்பதே கேள்வி.

குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்துவதில் ஒரு பெரிய உளவியலே இருக்கிறது. கொஞ்சம் குஷி வந்து விட்டால் போதும், வெறும் வாயிலாயே விசில் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக விசில் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் சின்னம்தான். அரசியலையும் வெற்றி கொள்ளும் சின்னமா?

பேருந்து நடத்துநர்கள் கையில் இருக்கும் விசில் இப்போது விஜய்யின் கட்சியின் கையில் வந்திருக்கிறது. அவர் சரியாக அரசியல் பேருந்தைச் செலுத்துவார் என்று மக்கள் நம்பினால் கோட்டையில் நின்று விசிலடிக்கும் உரிமையும் அவருக்குத்தான். ஒருவேளை அந்தப் பேருந்து கரூரைப் போன்ற ஒரு கூட்ட நெரிசலைச் சந்தித்து விபத்துக்குள்ளானால் விசிலே சங்காகவும் மாறி விடும் ஆபத்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் விசில் ப்ளோயர் (The Whistleblower) என்பதற்குத் தவறுகளைத் தட்டிக் கேட்பவர் என்று ஒரு பொருள் இருக்கிறது. விஜய் அப்படி மாநில அரசையும் மத்திய அரசையும் நிறைய கேட்டிருக்கிறார். என்றாலும் அவரையே இப்போது தட்டித் தூக்கி டெல்லி சிபிஐ கட்டிடத்தில் வைத்துக் கட்டம் கட்டியிருக்கிறார்கள். இதைத்  தாண்டுவதைப் பொருத்துதான் அவரது விசில் சத்தம் வெற்றிச் சத்தமா அல்லது சமிக்ஞை சத்தமா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

விஜய் – விசில் இந்த இரண்டுக்குமே மூன்றெழுத்துகள் என்பதாலும் வெற்றி என்பதற்கும் மூன்றெழுத்து என்பதாலும் விசில் சின்னத்துக்கும் விஜய் கட்சிக்கும் வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா என்றால், அப்படிக் கிடைத்து விடாது. விஜய் கூட்டிய கூட்டங்களில் இனைஞர்களும், பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டதால் அது ஒரு வெற்றி வாய்ப்பாக அவருக்குத் தெரியலாம். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும் போதும், வாக்குறுதிகள் ஒவ்வொரு கட்சிகளிடமிருந்து வந்து விழும் போது அவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறிக் கொண்டே இருப்பதுதான் மனிதர்களின் மனநிலை என்பதால், விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இலையைப் போட்டு பந்திக்கு முந்துபவர்களாகவோ, சூரிய வெளிச்சத்தில் குளிர்காயப் போகிறவர்களாகவோ மாறி விட்டால் ஆட்டம் காலி, படுதா மிச்சம் என்றும் ஆகி விடலாம்.

ஒரு வகையில் விஜய்யின் கைகளுக்கு விசில் கிடைத்து விட்டது. விசிலுக்கான பேருந்து எந்த அளவுக்கு ஓடப் போகிறது? கோட்டை வரையா? கோட்டை விடும் வரையா? என்பதற்குத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தினமே பதிலைக் கொடுக்கும். அதுவரை அவர் கரூர் வரை ஓட்டிச் சென்ற பேருந்தைப் பழுது பார்த்து, தனது விசிலின் வேகத்திற்கேற்ப ஓடும் வாகனமாக அவர் மாற்ற வேண்டும். மாற்றுவரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்பதைத் தவிர, பொதுமக்களான நமக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

இதை வாசிக்கும் நீங்களும் ஒரு வாக்காளர் என்பதால், நீங்கள் இந்த விசிலை வைத்து ஊதப் போகிறீர்களா? அமைதி காக்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு ஒரு பதிலை உங்களை வைத்தேச் சொல்லுங்கள். மற்றவற்றைக் கருத்துக் கணிப்புகள் விரைவில் சொல்லும். முடிவு விசிலா? சங்கா? என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள் துல்லியமாகச் சொல்லி விடும்.

****

1 comment: