மழைநீர் சேமிப்பைப் போற்றுதும்!
கடல்நீரைக்
குடிநீராக்கும் திட்டத்தை விட மழைநீரைச் சேமிக்கும் திட்டம் ஓர் அருமையான திட்டமாகும்.
இயற்கை
மழை மூலமாகக் கடல்நீரைக் குடிநீராக்கித் தருகிறது.
கடல்நீரைக்
குடிநீராக்க வேண்டும் என்றால் அதற்கென ஆலையை நிறுவ வேண்டும். இது பொருட்செலவு பிடிக்கும்
வேலை. ஏகப்பட்ட முதலீடு வேண்டும். அந்த ஆலைக்கு அதிக அளவு மின்சாரம் தேவை.
எந்த
ஆலையாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் சுற்றுப்புறச் சமநிலையைப் பாதிக்காமல் இருக்காது.
இப்படிச்
செலவு செய்து உருவாக்கிய நீரை இலவசமாக விநியோகம் செய்ய முடியாது. ஆனால் மழைநீரில் இப்படிப்பட்ட
பிரச்சனைகள் இல்லை.
மழைநீக்
குடிநீராக்க நீங்கள் ஆலைகளை நிறுவ வேண்டியதில்லை. இயற்கைச் சமநிலையைப் பாதிக்காமல்
இருந்தால் போதும். மரங்களை நட்டு வளர்த்து பேணிப் பாதுகாத்தால் போதும்.
மழைநீரைத்
தூய்மைப்படுத்த நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் வீட்டிற்கே வந்து பொழியும்
மழைநீரை வாங்க நீங்கள் காசு கொடுக்க வேண்டியதில்லை. இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மழைநீர்
மண்ணிற்கும் மனிதர்களுக்கும் உயிர்நீர். மழைநீரைச் சேமிப்பதில் நாம் அக்கறை காட்டினாலே
போதும், தண்ணீர்ப் பஞ்சத்தையும் தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளையும் சுலபமாக எதிர்கொண்டு
விடலாம்.
சில
ஆண்டுகளில் தேவைக்கு அதிகமாகப் பொழியும் மழைநீரைச் சேமிப்பதற்கான வழிமுறைகளை வகுத்து
விட்டால் தண்ணீர்ப் பஞ்சம் என்ற பேச்சுக்கே எங்கும் இடமில்லை.
நம்மிடம்
நம் முன்னோர்களால் வழங்கப்பட்டிருக்கும் குளம், குட்டை, ஏரி, ஆறு, கேணிகளோடு கூடுதலாகத்
தற்போதைய காலத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும் மேலும் எப்படி நீர் நிலைகளை உருவாக்கி
மழைநீரைச் சேமிக்கலாம் என்பது குறித்து நாம் நிறைய யோசித்துச் செயல்முறைகளை வகுக்க
வேண்டும்.
வருங்காலத்தில்
தண்ணீர்ப் பிரச்சனைப் பூதாகரமான பிரச்சனையாக ஆகாமல் இருப்பது நிகழ்காலத்தில் மழைநீரைச்
சேமிப்பது குறித்து நாம் சிந்திப்பதில்தான் அடங்கி இருக்கிறது.
எத்திசையும்
செயல் மணக்க மழைநீர் சேமிப்பைப் போற்றுதும்!
மழைநீர்
சேமிப்பின் அறம் அறிந்து திறம் வியந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
*****
No comments:
Post a Comment