அது
ஒரு பிரச்சனை!
அனிதாவுக்குப்
பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது
எப்போதும் குழப்பமே. அவளுடைய சிநேகிதன் ஒரு காரணம். இந்த விசயத்தை அவன் அநியாயத்துக்குக்
குழப்பி விட்டான். அவளுடைய அம்மா மேலும், தங்கை மேலும், அப்பா மேலும் அவளுக்கு அவநம்பிக்கை
நிலவியது. யாரிடம் சொன்னாலும் இவள் மேல்தான் பிழை என்பார்கள். அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு
அவள் மேல்.
யாரிடமாவது
சொல்லித்தானே ஆக வேண்டும். சிநேகிதனிடம் சொல்லி விட்டாள். அவளுடைய சிநேகிதன் அதிகமாகக்
குழம்பி அவளையும் குழப்புவதற்குக் காரணம், எந்த முடிவெடுத்தால் பின்னால் பிரச்சனை இல்லாமல்
இருக்கும் என்பதை அதிகமாக யோசித்ததுதான். அப்படி ஒரு முடிவை எடுக்க வாழ்நாள் முழுவதும்
முயன்றாலும் எடுக்க முடியாது. ஒவ்வொன்றிலும் ஒரு பிரச்சனை இருக்கவே செய்கிறது. அதை
எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
இப்பிரச்சனையின்
பொருட்டு அனிதாவின் மேலாளர் சொல்வதை அப்படியே நம்ப முடியாது. அதை நம்பிச் செய்யவும்
முடியாது. அவருக்கு இதில் ஒரு வருமானச் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கலைத் தாண்டி
வருமானத்தை எப்படிச் சாமர்த்தியமாக செய்து கொள்ள முடியும் என்பதில் அவர் குறியாக இருப்பார்.
அதற்காக அதற்கேற்றபடி நயமாக அனிதாவிடம் பேசவும் வாய்ப்பு இருக்கிறது.
அனிதாவுக்கு
இன்னொரு சந்தேகம் இருக்கிறது, எவ்வளவோ நடந்த பிறகும் அவன் சிநேகிதன் எப்படி மேலாளரை
நல்லவன் என்கிறான். அவர் தனக்குரிய தர்மத்தின்படி, தன் தொழிலுக்குரிய நியாயங்களுடன்
நடந்து கொள்ளவே இல்லை. அவள் பிரச்சனையை முடிக்க சொன்னாள் என்றால், அதன்படி அந்தப் பிரச்சனையை
முடித்திருக்க வேண்டும்.
அதை
விட்டு விட்டு அதற்கு எதிர்மாறான முடிவை எடுக்க வைத்து விட்டு, அவர் சரியாகத்தான் சொன்னார்,
நாம்தான் தவறி விட்டோம் என்றால், அங்கே நடந்த பிழைதான் என்ன? மனிதர்களின் மனதுக்குத்
தகுந்தாற் போல் நடந்து கொள்வது என்ற ஒரு முடிவில் இருந்து விட்டு, முடிவாகத் தவறாக
நடந்து விட்டது என்று வருத்தப்படுவதுதானா?
மண்டல
பொறுப்பாளர் சரியாக எடுத்துச் சொன்னார். அனிதாவுக்கும் அடங்கிப் போவதற்கான அறிவுரையைக்
கூறினார். அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பிறகு ஏன் மனிதராக இருக்க வேண்டும்? மனம்
ஏற்றுக் கொள்ள மாட்டேன்கிறது என்று மனம் போன போக்கில் போனால், அது சொல்கிற போக்கில்
எல்லாம் போய்க் கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்படித்தான் இந்த மனிதர்கள் போய்க் கொண்டு,
அவர்களும் சிரமப்பட்டு, சுற்றியிருக்கிறவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
யாருக்காகவோ யார் யாரோ சிரமப்பட வேண்டியிருக்கிறது.
இன்று
இந்தப் பிரச்சனையை முடிப்பதற்குள் ஐந்து முறைக்கு மேல் மெனக்கெட வேண்டியதாகி விட்டது
அவளது சிநேகிதனுக்கு. சரியான முறையில் அது ஒரு முடிவுக்கு வரவில்லை. மேலாளருடைய மனதுக்குள்
ஏதோ நிகழ்ந்து விட்டது அல்லது வேறு ஒரு உபாயம் கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டாள்
அனிதா.
ஒரு
பிரச்சனை உள்ளது உள்ளபடி முடிவுக்கு வர, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இன்னொரு
பிரச்சனையால் ஏதோ சிக்கல் இருக்க வேண்டும் போல. அதை தவறாகக் கையாண்டால், இதற்கான சரியான
தீர்வு வரும் போல இருக்கிறது. வழக்கமாகப் பிரச்சனை சரியாகி விடும் என்று அனிதா எடுக்கும்
முடிவுகள், சரியாகக் அணுகினால் எல்லாம் சரியாக வந்து விடும் என்று நினைப்பில் எடுக்கப்படுபவை.
ஐந்து முறையும் தவறாகி தவறாகி, ஆறாவது முறைதான் அந்த தவறைச் சரி செய்ய முடிந்தது இந்தப்
பிரச்சனையில்.
இப்படித்
தவறாகிறதே என யோசித்துக் கொண்டிருந்தால் அடுத்து செய்ய வேண்டியதைச் செய்ய முடியாமல்
போய் விடும். தவறு செய்ய வேண்டும் என்றெல்லாம் செய்வதில்லை. ஆனால் தவறாகி விடும் போது
அதை சரி செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. அது கொஞ்சம் வேலையை வாங்குகிறது. கூடுதலாக
யோசிக்க வைக்கிறது. இந்தத் தவறு எப்படி நேர்ந்தது என்று ஆராய வைக்கிறது. அந்தப் பணிச்
சுமையைத் தவிர ஒரு தவறிலிருந்து நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள்
இருக்கின்றன. மனிதர்களின் சுய ரூபம் அப்பட்டமாகப் பளிச்சிடும் வாய்ப்புகள் அவை.
மேற்கொண்டு
இப்படி யோசித்தே கொண்டே போகலாம் என்றாலும், அனிதா இந்தப் பிரச்சனையில் குழம்பிக் குழம்பி
இப்படி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். இது போன்ற பிரச்சனைகளை இனி ஆண் சிநேகிதர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படியே அது பிரச்சனை என்றாலும் மேலாளர் அளவுக்குப் புகாருக்குப்
போய் விடக் கூடாது. அதுவும் மேலாளர் மீதே என்றால், மண்டல பொறுப்பாளர் அதே தவறை அவரை
வைத்து எப்படி நிகழ்த்திக் கொள்வது என்பதில் குறியாக இருக்கிறார்.
பாலியல்தான்
பிரச்சனை என்றால் வேறு என்ன செய்வது? எதுவும் சில காலம். காலம் கடந்துவிட்டால், எவன்
சீண்டப் போகிறான்? ஏன்டா பிரச்சனை செய்ய மாட்டேன்கிறீர்கள் என்று அப்போது பிரச்சனை
செய்ய வேண்டும். அனிதாவுக்குக் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் தாண்டி எல்லாவற்றையும் மீறிய ஒரு சிரிப்பு வந்தது. எல்லாம்
ஒரு கணம் உறைந்தது போலிருந்தது, நின்றது போலிருந்து, முடிந்தது போலிருந்தது. மீண்டும்
தொடங்கும் போது மீண்டும் இயங்க வேண்டும். மீண்டும் எல்லாம் முடிவுக்கு வந்து மீண்டும்
இயங்கும் என்றாலும் அனிதாவுக்கு இப்போதைக்கு ஆசுவாசமாக இருந்தது.
*****
No comments:
Post a Comment