பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது சரியா?
தாம்
பட்ட கஷ்டங்களைத் தம் பிள்ளைகள் படக் கூடாது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.
அந்தக்
கஷ்டங்கள் அவர்களைத் துன்புறுத்தி விட்டதாக, துயரத்தில் தள்ளி விட்டதாக நினைக்கிறார்கள்.
அந்தக் கஷ்டங்கள்தான் அவர்களை வடிவமைத்து வைத்திருக்கும் பாடங்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
வறுமையானது
கொடுமையானது என்றாலும் வறுமையைப் போன்ற பள்ளிக்கூடம் வேறு எதுவுமில்லை. வறுமை உங்களுக்கு
வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கும் பாடங்களை இந்த உலகில் வேறு யாராலும் கற்றுக் கொடுத்து
விட முடியாது.
தாங்கள்
கஷ்டப்பட்டதைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் கஷ்டமே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்
என்று யோசிக்கிறார்கள். வாழ்க்கையில் கஷ்டமே இல்லாமல் போவது வாழ்க்கையை எப்படியெல்லாம்
கஷ்டப்படுத்தும் என்பதை அவர்கள் அறிய மறுக்கிறார்கள்.
உங்கள்
குழந்தைகளைக் கஷ்டமே இல்லாமல் வளர்த்தால், அவர்களால் ஏற்படும் கஷ்டங்களை நீங்கள் பின்னர்
அனுபவிக்க நேரிடும். கஷ்டமே இல்லாமல் வளரும் பிள்ளைகள் அடம் பிடிப்பவர்களாகவும், பிடிவாத
குணம் நிறைந்தவர்களாகவும், தான்தோன்றித் தனமாகச் செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதற்கான விலையைப் பெற்றோர்கள் தங்களின் பிற்பாதி வாழ்க்கையில் கொடுக்க வேண்டியிருக்கும்.
கேட்டதையெல்லாம்
வாங்கிக் கொடுத்தால்தான் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
அதற்காக கடன் வாங்கிக் கூட பெற்றோர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தச்
சந்தோசம் எத்தனை நாளைக்கு, எத்தனை மணிக்கு, எத்தனை நிமிடங்களுக்கு வருகிறது என்பதை
யோசித்துப் பார்க்க வேண்டும் இல்லையா?
சில
பொருட்களால் உண்டாகும் சந்தோசம் குழந்தைகளுக்குச் சில நிமிடங்கள் கூட நீடிப்பதில்லை.
அந்தச் சந்தோசம் தீர்ந்த பின்பு குழந்தைகளின் கவனம் அடுத்த பொருட்களின் மேல் செல்லும்.
பிறகு அந்தப் பொருளை வாங்கிக் கொடுத்தால்தான் குழந்தைகளுக்குச் சந்தோசம் உண்டாகும்.
இப்படி எத்தனை எத்தனை பொருட்களைக் குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் சந்தோசமாக
இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள்?
உண்மையைச்
சொல்லப் போனால் இந்தப் பொருட்களின் மோகம் எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போகும். அப்படி
நீங்கள் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தால் உங்கள் வீட்டை உங்கள் குழந்தைகள் கேட்டதற்காக
வாங்கிக் கொடுத்த பொருட்களைக் கொண்ட ஒரு பெரும் குப்பைத் தொட்டியாகத்தான் வைத்திருக்க
வேண்டியிருக்கும்.
ஒரு
கட்டத்திற்கு மேல் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் சக்தியும் போய்
விடும். பணம் என்ன மரத்திலா காய்த்துக் கொண்டே இருக்கும்? அதுவும் பறிக்க பறிக்க காய்த்துக்
கொண்டிருக்க?
தொடர்ச்சியாகப்
பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்திக் கொண்டே வரும் போது, ஒரு நிலையில்
அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது உங்கள் பிள்ளைகள்
அவர்களுடைய மிகப் பெரிய எதிரியாக யாரை உணர்வார்கள் தெரியுமா? பெற்றோர்களான உங்களைத்தான்
அப்படி உணர்வார்கள்.
அவர்களைப்
பொருத்த வரை அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கத்தான் பெற்றோர்களாகிய நீங்கள்
என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். அதை உங்கள் கடமை, பொறுப்பு என்றெல்லாம் நினைத்துக்
கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்காத போது, உங்களை கடமையை மறந்த பெற்றோர்கள்
என்றோ, பொறுப்பற்ற பெற்றோர்கள் என்றோ கூறவும் தயங்க மாட்டார்கள்.
அப்படியானால்
பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்கவே கூடாதா என்றால், அவர்களுக்கு அவசியமான மற்றும்
தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை ஆடம்பரமாக, சொகுசாக
உணரச் செய்யும் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவற்றை
வாங்கிக் கொடுக்க முடியாது என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்வதில் கூட தப்பில்லை.
ஏனென்றால் தன்னுடைய பெற்றோர் இது போன்ற தேவையற்ற அநாவசியமான பொருட்களை வாங்கித் தர
மாட்டார்கள் என்ற மனநிலையை உருவாக்குவதற்கு அந்த எதிர்மறை அனுபவம் நேர்மறையாக உதவும்.
பிள்ளைகள்
சந்தோசம்தான் முக்கியம் என்று கேட்டதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொடுத்தால், இந்த உலகில்
எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடும் என்று மனநிலைக்கு வந்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல்
அழுது அடம் பிடித்தால் அல்லது பிடிவாதமாக நச்சரித்தால் பொருட்கள் கிடைத்துவிடும் என்ற
மனநிலைக்கும் வந்து விடுவார்கள். அப்படிப் பெறப்படும் பொருட்களில்தான் வாழ்க்கையே இருக்கிறது
என்ற மனநிலைக்கு வந்துவிடுவதுடன், அந்தப் பொருட்கள் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை
என்ற மனநிலைக்கும் கூட வந்து விடுவார்கள். இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என்றால்,
இப்படி ஒரு நடக்கவே அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன.
வாழ்க்கையில்
எல்லாமும் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. விடா முயற்சியுடன் அடைவதற்காகப் போராட வேண்டியிருக்கிறது.
சிலவற்றை அடைவதற்காகப் பொறுமையாக நீண்ட காலம் காத்திருக்கவும் வேண்டியிருக்கிறது. ஒன்றை
எதிர்பார்த்துக் கிடைக்காமல் போகும் போது அதற்காக மனம் உடைந்து போகாமல் உறுதியாகவும்
தெளிவாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இப்படி பொருட்களை அடைவதில் நிறைய நிலைப்பாடுகளை
அடைய வேண்டியிருக்கிறது.
நிலைமை
இப்படியிருக்க, தனக்குக் கிடைக்காத வசதிகளும் வாய்ப்புகளும் பிள்ளைகளுக்குக் கிடைக்க
வேண்டும் என்று பெற்றோர்கள் தங்களின் தகுதிக்கு மீறி செய்யும் போது, அதுவே அவர்களின்
குழந்தைகளுக்கு அவர்களே வைத்து விடும் சூனியமாக அமைந்துவிடுகிறது. ஏனென்றால் அளவுக்கு
மிஞ்சிய எதுவுமே விஷமாகி விடும்தானே?
இதற்குத்
தீர்வுதான் என்ன என்று கேட்கிறீர்களா?
உங்கள்
தகுதிக்கு மீறிய எதையும் பிள்ளைகளுக்குச் செய்யாதீர்கள். அப்படி உங்கள் பிள்ளைகள் உங்களைச்
செய்ய வேண்டிய நிர்பந்தித்தால் உங்கள் நிலைமையைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். உங்கள்
நிலைபாட்டிலும் உறுதியாக நில்லுங்கள்.
உங்களின்
வருமானம், செலவினங்கள், சேமிப்புகள் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குப் புரியும்படி அவ்வபோது
எடுத்துச் சொல்லுங்கள். பேசும் போது பணம் எப்படியெல்லாம் வாழ்க்கையிலும் மனநிலையிலும்
வேலை செய்கிறது என்பதை உங்கள் அனுபவத்தோடு எடுத்தச் சொல்லுங்கள். சிறுவயதில் பல பொருட்கள்
கிடைக்காமல் மற்றும் இல்லாமல் நீங்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டீர்கள் என்பதை எடுத்துச்
சொல்லுங்கள்.
ஒரு
பொருள் இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் மனநிலையைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஆம்,
பல பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்தப் பொருட்கள்
இல்லாமல் அவர்களுக்கு உண்டாகும் ஏக்கம் மற்றும் ஏமாற்றங்களைக் காது கொடுத்துக் கேட்பது
கூட அவர்களுக்குப் போதுமானது. அத்துடன் அவர்களிடம் நீங்களும் உங்கள் இளவயதில் சில பொருட்கள்
கிடைக்காமல் அடைந்த ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள்
புரிந்து கொள்வார்கள்.
அதையும்
தாண்டி ஒரு பொருள் மீது அவர்கள் அளவிட முடியாத ஆசையை வளர்த்துக் கொண்டார்கள் என்றால்
அவர்களையே கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து அந்தப் பொருளை வாங்கத் தூண்டுங்கள். பல
நாட்கள் பணம் சேர்த்தால்தான் அவர்கள் விரும்பிய பொருளை வாங்க முடியும் என்ற மனநிலையை
உருவாக்கும் போது, அவர்கள் அந்தப் பொருளைப் பற்றி மேலும் யோசித்துப் பார்க்க கால அவகாசத்தை
அது தருகிறது. அந்த அவகாசம் பல நேரங்களில் அந்தப் பொருளே தேவையில்லை என்ற மனநிலைக்கு
வரவும் அவர்களுக்கு உதவும்.
பிள்ளைகள்
கேட்பதை வாங்கிக் கொடுப்பதைப் பொருத்த வரை அவசரப்படாதீர்கள். துரிதமாகச் செயல்பட நினைக்காதீர்கள்.
முதலில் நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆம் கொஞ்சம்
கொஞ்சமாகத்தான் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளின் மனநிலையை நீங்கள்தான்
அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையால் உருவாக்குகிறீர்கள் என்பதால், மிக நிதானமாக உங்கள்
நடத்தை முறைகளையும் அணுகுமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பொதுவாகப்
பல பொருட்கள் இல்லாமலே எப்படி சந்தோசமாக வாழ முடியும் என்பதை நீங்களே ஓர் உதாரணமாக
இருந்து உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தி விட்டால், பொருட்களால் ஏற்படும் கிளர்ச்சிக்கும்
சஞ்சலத்துக்கும் பிள்ளைகள் ஆட்பட மாட்டார்கள்.
நீங்களே
பாருங்கள்! வீட்டில் நாம் வாங்கி வைத்திருக்கும் பல பொருட்கள் நமக்குத் தேவையே இல்லாத
பொருட்களாகத்தானே இருக்கிறது? நாமே அப்படி இருந்தால் நம் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
ஆகவே ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாகப் பல முறை யோசியுங்கள். அதுவே பின்பு உங்கள்
பழக்கமாகும். உங்கள் பிள்ளைகளுக்கும் அதுவே பழக்கமாகும்.
நம்மை
அறிந்தோ, அறியாமலோ நாம் பிள்ளைகளைப் பழக்கப்படுத்துகிறோம். அந்தப் பழக்கங்கள் சரியாக
இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள். சமூகமும் சரியாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment