8 Sept 2024

பிள்ளைகளைப் போட்டுத் தள்ளும் அப்பன்கள்!

பிள்ளைகளைப் போட்டுத் தள்ளும் அப்பன்கள்!

லியோ, கோட் இரண்டும் விஜய் நடித்து அடுத்தடுத்து வெளிவந்த படங்கள்.

இந்த இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை - வேற்றுமைகள் இருக்கின்றன.

இரண்டு படங்களும் அப்பா – மகன் பகைமையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இரண்டுமே அப்பா – மகன் கொலையில் போய் முடிகிறது.

வேற்றுமையான ஒற்றுமை என்னவென்றால்

லியோவில் மகன் அப்பனைக் கொல்கிறான்

கோட்டில் அப்பன் மகனைக் கொல்கிறான்.

இரண்டுமே கொலைகார படங்களின் வரிசையில் வருகிறது.

இரண்டு படங்களிலுமே விஜய் அமைதியான குடும்பத்தைத் தக்க வைக்க அல்லாடுகிறார்.

ரஜினிக்கும் ஜெயிலர் படத்தில் இதே பிரச்சனைதான்.

கமலுக்கும் இந்தியன் படத்தில் இதே பிரச்சனைதான். இந்தியன் – 2 படத்தில் இதை விட அதிகப் பிரச்சனைகள்.

இந்த விவாதத்தில் இப்படி எல்லாரையும் கொண்டு வந்து விட்டு, தலையை (தல) விட்டு விட முடியுமா? வில்லன் படத்தில் அஜித்தும் இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

பிள்ளைக்கறி கேட்ட இறைவைனை விட இந்தத் தலைவன்கள் பெற்ற பிள்ளைகளைப் போட்டுத் தள்ளுவதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்.

பலவித நாயக – எதிர் நாயக பிம்பங்களைக் காட்டி விட்ட தமிழ்த் திரையுலகம் மேலும் புதிய புதிய வடிவங்களைத் தேடுகிறது. அப்பா – மகன் வடிவம் அதற்குப் புதியது போலத் தோன்றினாலும் இந்த மொந்தை ரொம்பவே பழையது என்பதைக் கூறத் தேவையில்லை.

இவர்கள் இப்படியொரு சகாப்தத்தைத் தொடங்குவதற்கு முன்பே தங்கப்பதக்கத்தில் சிவாஜி சௌத்ரியாக இதை செய்து விட்டார் என்றாலும் இவர்கள் பலவித வடிவமைப்புகள் எனும் டிசைன்களில் செய்கிறார்கள், செய்கிறார்கள், நன்றாகவே வைத்துச் செய்கிறார்கள்.

முன்பு காவலன் – திருடன் என்று இருந்த களத்தை உளவுத்துறை, புலனாய்வுத் துறை, போதைத்தடுப்புத் துறை என்று உயர்த்தியதைத் தவிர, உயர்த்தியதும் என்று கூற முடியாது, மாற்றியதைத் தவிர வேறு எதையும் இவர்கள் செய்யவில்லை.  

எனக்கென்னவோ தமிழ்த் திரையுலகின் உச்ச நாயகர்கள் கொலைக்களத்தை மையமாகக் கொண்டே கதையாடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இவர்களின் கொலை எங்கு போய் முடியுமோ?

ஓரளவுக்கு எங்குப் போய் முடியும் என்பதையும் கணிக்கவே முடிகிறது.

நீங்கள் இந்தச் செய்தியைக் கேள்விபட்டிருக்கலாம். தமிழின் உச்சபட்ச நட்சத்திர நடிகரை வைத்து இயக்கிய இயக்குநரின் மனைவி அரசியல் தலைவர் ஒருவரின் கொலை விசாரணையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்.

மற்றத் திரைக்கொலைக் காதலர்களையும் இது தொற்றாமல் இருந்தால் தேவலாம். பொறுத்திருந்துதான் அதைப் பார்க்க வேண்டும்.

ஆனாலும் ஒன்றை மாற்ற முடியாது. அது என்னவென்றால், அவர்கள் எதை விதைக்கிறார்களோ அதையே அவர்கள் அறுவடை செய்கிறார்கள்!

*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...