2 Nov 2023

எப்படி வாங்குவது நல்லது?

எப்படி வாங்குவது நல்லது?

ஒரு பொருளைப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதெல்லாம் ஒரு காலம். ஒரு பொருளைப் பார்க்காமல் கூட வாங்குகிறார்கள். அது இந்தக் காலம்!

இணையவழியில் (ஆன்லைனில்) வாங்கும் போது ஒரு பொருளின் படத்தைப் பார்த்துதானே வாங்குகிறோம். ஒரு பொருளை நேரில் பார்த்து வாங்குவதற்கும் அதன் படத்தைப் பார்த்து வாங்குவதற்கும் ஒப்புமை சரியாக வருமா என்ன?

இணையவழியில் பார்த்த பொருள் ஒன்றாகவும் கைக்கு வரும் போது அதன் தோற்றம் கொஞ்சமாவது மாறுபாடாக இருப்பதை அனுபவிக்காதவர்கள் நாட்டில் இருக்கிறார்களா என்ன?

ஒரு பொருளை இணைய வழிச் சந்தையில் வாங்குவதா? நேரில் வாங்குவதா?

நேரில் வாங்குவதே சிறந்தது எனக் கருதுகிறேன்.

இதில் இணையவழியில் கிடைக்கும் சலுகை விலை கிடைக்காது என நீங்கள் நினைக்கலாம். நேரடியாகப் பொருளை வாங்க மெனக்கெட்டுச் செல்ல வேண்டுமே என நினைக்கலாம். இணையவழிப் போன்று வீட்டிற்கே பொருள் வந்து சேரும் வசதி (ஹோம் டெலிவரி) இல்லையே எனக் கருதலாம். இவற்றுக்குச் சில தீர்வுகள் இல்லாமலா இருக்கும்?

நேரில் பார்த்து வாங்கும் வகையில் அருகருகே இருக்கும் நகரங்களுக்குச் செல்லுங்கள். இது கொஞ்சம் மெனக்கெடுதான். இருந்து விட்டுப் போகட்டும். வீட்டில் வாங்கிப் போட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டாமா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பொருள் வாங்க (பர்சேஸ் செய்ய) செல்கிறோம் என்பதைக் காட்ட வேண்டாமா?

வீட்டிற்கே பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கவும் தற்போது கடைகள் தயாராக இருக்கின்றன. கையிலோ, பையிலோ எடுத்து வரக் கூடிய அளவுக்குப் பொருள் என்றால் எடுத்து வந்து விடுங்கள். இல்லையென்றால் கொஞ்சம் அடித்துப் பிடித்து அவர்களிடம் பேச வேண்டும். அப்படி ஒரு வசதி இல்லையென்றால் வேறொரு கடைக்குப் போகிறேன் என்று போக்குக் காட்ட வேண்டும். பொருள் வாங்க தயாராக இருக்கும் வாடிக்கையாளரை இழக்க எந்தக் கடைக்காரருக்கு மனம் வரும்? உங்களுக்கு ஏதோ ஒரு சலுகையைச் செய்து கொடுப்பார்.

எல்லாவற்றுக்கும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அங்கு இருக்கும் மனிதர்களிடம் உரையாடுங்கள். பேரம் பேசுங்கள். உங்கள் கடையை விட்டால் வேறு கடை இருக்கிறது எனப் பேச்சினிடையே பயம் காட்டுங்கள். இந்தப் பயத்திற்கு எல்லா கடைக்காரர்களும் மசிவார்கள். வியாபாரம் செய்வதற்குதானே கடை வைத்திருக்கிறார்கள். அதை விட்டு விட மாட்டார்கள் என்பதால் நீங்கள் பலவித கோணங்களில் சுழன்று பேசுவதற்குக் கொஞ்சம் கூட யோசிக்க வேண்டியதில்லை.

இணையவழியில் உங்களுக்குக் கிடைக்கும் சலுகை விலை கடைகளில் கிடைக்காது என நினைத்து விடாதீர்கள். கையிலிருக்கும் அலைபேசியை நோண்டி இணையவழியில் விற்கப்படும் விலையைக் காட்டுங்கள். நீங்கள் இந்த விலைக்குத் தர தயார் இல்லை என்றால் இணைய வழியிலேயே வாங்கிக் கொள்கிறேன் என்று கடையை விட்டு வெளிநடப்புச் செய்யுங்கள். இதுவும் கடைக்காரர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தும் முறைதான். கடைக்காரரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? இப்படி பத்து வாடிக்கையாளர்களை விட்டால் அவருக்குத்தான் மாரடைப்பு வரும். அதை விடக் குறைவான விலைக்கே தருகிறேன் என்று உங்கள் பின் ஓடோடி வருவார்.

நீங்கள் ஒரு கடையில் பொருளை வாங்குவதால் இன்னும் சில நன்மைகளும் இருக்கின்றன. அதன் குறைபாடுகளுக்கும் பழுதுகளுக்கும் நிவாரணம் தேட முடியும். என்னய்யா இது, வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, நீங்கள் பல்லைக் காட்டியதை விட மோசமாக இப்படி பல்லை இளிக்கிறதே இந்தப் பொருள் என்று கடைக்கு முன் நின்று சத்தம் போட முடியும்.

இணைய வழிக் குறைபாடுகளுக்கு நீங்கள் உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நேரடியாக வாங்கும் போது குறைபாடுகளுக்கு நீங்கள் ஒரு புரட்சியையே பண்ணி விடலாம். எது வசதி என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தப் பொருளை வாங்க நினைத்தீர்களோ அந்தப் பொருளையே அச்சரம் பிசகாமல் பார்வை பேதமின்றி நேரில் சென்றால் வாங்கி வந்து விடலாம். இதுவே இணைய வழியில் என்றால் நீங்கள் வாங்க நினைத்த பொருள் ஒன்றாகவும், வாங்கிய பின் வந்து சேரும் பொருள் வேறொன்றாகவும் இருக்க பல சாத்தியங்கள் இருக்கின்றன.

இணைய வழியை விட நேரில் பார்த்து வாங்குவதே இயைந்த வழி என்று நினைக்கிறேன். ஒரு பொருளை வாங்குவதற்குள் நான்கு பேரிடம் நான்கு விதமாகப் பேசிப் பேரத்தில் ஏறி இறங்கி, கறாராகப் பேசி, விட்டுக் கொடுத்து, விட்டுப் பிடித்து, வாங்குவதற்கு எல்லாம் நேரில் பார்த்து வாங்குவதுதான் வசதி. நமக்கும் ஒரு பொழுதுபோக்கு வேண்டாமா?

பேசத்தானே பிறந்திருக்கிறோம் மனிதர்களாகிய நாம். அப்படிப் பேசி வாங்குவதற்கு நேரில் போய் வாங்கினால்தான் முடியும். பொருளை வாங்கிப் புதிய அனுபவத்தைப் பெறுவதைப் பேசிப் பேசியே பெற்று விட முடியும். பேசப் பேச ஒரு பொருளைப் பற்றிய அவ்வளவு புதிய விசயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கும். நமக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு. நாமாகப் போய் பைத்தியம் போல யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க முடியுமா சொல்லுங்கள்? அத்துடன் பொருளைச் சல்லிசாகத் தட்டிக் கொண்டு வரவும் மற்றொரு வாய்ப்பு. இந்த இரண்டு வாய்ப்புகளையும் ஏன் விடுவானேன்?

மற்றவர்களிடம் புரளிப் பேசிக் கொண்டிருப்பதற்கு ஒரு மாற்றாகவும் இருப்பதால் இன்றிலிருந்து பொருட்களை நேரில் பார்த்துப் பேசி வாங்கப் புறப்பட்டு விடலாம்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...