இடைத்தரகர்களை நம்பியிருக்கும் ரெண்டுங் கெட்டான் விவசாயம்
வயலில் விளைந்த நெல் வீடு
வந்தது ஒரு காலம். வயலில் விளைந்த நெல்லைச் சோறாக்கிச் சாப்பிடுவது கௌரவம். கடையில்
அரிசி வாங்கிச் சாப்பிடுவது கேவலம். நெல்லைப் போட்டு வைப்பதற்கென்றே பத்தாயமோ, குதிரோ
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அதிகப்படியான நெல்லை கோட்டை கட்டி வைத்திருப்பவர்களும்
உண்டு. அதெல்லாம் ஒரு காலம்.
அந்தக் காலத்தில் பெண்ணைக்
கொடுப்பதென்றால் பையன் வீட்டைப் போய் பார்ப்பார்கள். நெல்லை எத்தனைக் கோட்டை கட்டி
வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பார்கள். அதிலும் ஏமாற்று வேலைகள் உண்டு. அக்கம்
பக்கத்து வீடுகளிருந்து நெல்லை வாங்கி வந்து கோட்டைக் கட்டி வைத்து ஏமாற்றி விடலாம்
என்று வைக்கோல் போரைப் பார்ப்பார்கள். வைக்கோலை அப்படி அக்கம் பக்கத்தில் வாங்கிக்
கொண்டு வந்து ஏமாற்றி விட முடியாது என்ற நம்பிக்கை. கூடுதலாக மாட்டுக் கொட்டகையைப்
போய் பார்ப்பார்கள். மாடுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்வார்கள். அதை வைத்து
எவ்வளவு நிலம் இருக்கும், விளைச்சல் எவ்வளவு இருக்கும், கோட்டை கட்டி வைத்திருக்கும்
நெல் கணக்கிற்கு ஒத்துப் போகுமா என்பதைக் கணக்கிட்டு விடுவார்கள்.
விவசாயிகளுக்கு நெல்லைச்
சேமிக்கத் தெரியாமலா இருந்திருக்கிறது? நெல்லைப் பாதுகாப்பாக வைத்திருக்க தெரியாமலா
இருந்திருக்கிறது? எல்லாம் தெரிந்தவர்கள்தான். விதை நெல்லை விலைக்கு வாங்கி விதைப்பதை
அகௌரவமாகப் பார்ப்பார்கள். விதைநெல்லை அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள், சொத்தே
அதுதான் என்பது போல.
வயலில் விளைந்த நெல்லை அவ்வளவு
சாமான்யத்தில் வியாபாரியிடம் போட்டு விட மாட்டார்கள். அறுத்த உடன் போட்டால் நல்ல விலை
கிடைக்காது என்று ஆற்றில் தண்ணீர் வரும் நேரமாகப் பார்த்து போடுவார்கள். சரக்குந்தில்
(லாரியில்) ஒரு லோடு ஏற்றினால் வியாபாரியிடம் பேரம் பேசி மூட்டைக்குக் கூடுதல் விலை
வாங்க முடியும் என்று நான்கைந்து விவசாயிகளாகச் சேர்ந்து கொண்டு வியாபாரியைப் போய்
பார்ப்பார்கள்.
சாயுங்கால நேரமாகப் பார்த்து
சரக்குந்தோடு (லாரியோடு) வியாபாரிகள் வருவார்கள். நெல் மூட்டைகளை எடை வைத்து ஏற்றி
முடிப்பதற்குள் இரவு பத்து பனிரெண்டு ஆகி விடும். அதற்குப் பின்பு பணத்தைக் கட்டுக்
கட்டாக எடுத்து வைப்பார்கள். நூறு ரூபாய் கட்டுகள், ஐம்பது ரூபாய் கட்டுகள், பத்து
ரூபாய் கட்டுகள் என்று கலந்து கட்டி இருக்கும். எல்லா கட்டுகளும் நூறு எண்ணிக்கையில்
இருக்கும் என்று வியாபாரிகள் அவ்வளவு நம்பிக்கையோடு சொல்வார்கள். ஆனால் நம்பி வாங்கி
விட முடியாது. ஒரு சில கட்டுகளில் ஒன்றிரண்டு நோட்டுகள் குறையும். ஒவ்வொரு கட்டாக எண்ணிப்
பார்த்துதான் சரக்குந்தை (லாரியை) அனுப்பி வைக்க வேண்டும். சரக்குந்து (லாரி) போய்
விட்டால் பிறகு வியாபாரியைக் கையில் பிடிக்க முடியாது. சரக்குந்திற்கு முன் இரண்டு
மூன்று பேர் நின்று கொள்ள இரண்டு மூன்று பேர் கட்டுக் கட்டாகப் பிரித்து எண்ணிக்கையைச்
சரி பார்ப்பார்கள். அந்த இரண்டு மூன்று பேர் ஊரில் இருக்கும் படித்த பிள்ளைகளாக இருப்பார்கள்.
அவர்கள் எண்ணி முடித்து எண்ணிக்கை சரியாக இருக்கிறது என்று சொன்னால்தான் சரக்குந்தை
(லாரியை) நகர அனுமதிப்பார்கள். சரக்குந்து (லாரி) கிளம்ப அதிகாலை கூட ஆகி விடும்.
ஆற்றில் கிழக்கு நோக்கு தண்ணீர்
வந்து கொண்டிருக்கும். லாரிகள் நெல் மூட்டைகளைச் சுமந்தபடி மேற்கு நோக்கிப் போய்க்
கொண்டிருக்கும். இது சில பத்தாண்டுகளுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் காணக் கிடைத்த
காட்சி. இப்போது அந்தக் காட்சிக்குப் பஞ்சம் வந்து விட்டது.
நெல் அறுத்த அடுத்து சில
மணி நேரங்களில் இப்போதெல்லாம் நெல் வியாபாரியிடம் கை மாறி விடுகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் போட முடியும் என்பவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு போய்
மெனக்கெடுகிறார்கள். பிடி நெல் வீட்டுக்கு வர வேண்டுமே, வருவதே இல்லை. நெல்லின் நிறம்
தெரியாமல் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நெல்லில் உமி, தவிடு இருக்கும்
என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
நெல்லைச் சேமித்து வைக்கத்
தெரிந்த விவசாயிகள், விதை நெல்லை எடுத்து வைக்கும் விவசாயிகள் இப்போது இல்லை. எந்திரம்
அறுத்துத் தந்த நெல்லை வியாபாரியிடம் போடுவதா, கொள்முதல் நிலையத்தில் போடுவதா என்பதை
யோசிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
வியாபாரியிடம் போட்டால் கிடைக்கும்
தொகை குறைகிறது என்று கொள்முதல் நிலையத்தில் போட நினைக்கும் விவசாயிகள் உண்டு. அதற்குக்
கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே மெனக்கெட தெரிந்திருக்க வேண்டும். அலைச்சலுக்கு அசராத மனநிலை
வாய்த்திருக்க வேண்டும். மானம், ரோஷம் என்பனவற்றை அடக்கி வாசிக்கவும் தெரிந்திருக்க
வேண்டும். நியாயம், தர்மம் என்று கதையளக்காமல் நெளிவு சுளிவுகளோடு நடக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
கொள்முதல் நிலையத்தில் நெல்லைச்
சுத்தம் செய்கிறேன் என்று எந்திரத்தில் விட்டு தூற்றுவார்கள். தூற்றும் போது கருக்காய்
போனால் பரவாயில்லை. நெல்லே போகும். கொஞ்சம் காற்றாடி வேகத்தை அதிகம் பண்ணி விட்டால்
அதுதான் நடக்கும். அதைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். விவசாயியாகிய எனக்கு நெல்
எதுவென்றும், கருக்காய் எதுவென்றும் தெரியாது என்று சத்தியம் பண்ண தெரிந்திருக்க வேண்டும்.
எந்திரத்திலிருந்து ஒதுங்கிக் கிடக்கும் நெல்லைக் கேட்கும் மனநிலை வாராதிருக்க வேண்டும்.
பாடுபட்ட விவசாயிக்கு கருக்காய்தானே
என்று விட்டு விட்டு வரத் தோன்றாது. அள்ளி வந்து விடத் தோன்றும். அள்ளி வர கொள்முதல்
நிலையக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதெல்லாம் பெரும் மிராசுதாரர்கள், தனக்காரர்களுக்கான
உரிமை என்பது போலப் பேசுவார்கள். அம்மிராசுதாரர்களாலும் தனவந்தர்களாலும் அவர்களை மிரட்ட
முடியும். அள்ளிக் கொள்ள அனுமதிக்காவிட்டால் அவரிடம் சொல்லவா, இவரிடம் சொல்லவா என்று
நடுக்கத்தை உண்டு பண்ண முடியும். ஒரு சில மா அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிக்கு
யாரைத் தெரியும்? எனக்கு அவரைத் தெரியமாக்கும், இவரைத் தெரியுமாக்கும் என்றால் உன்னுடைய
பவுசுக்கட்டைத் தெரியாதா என்று கொள்முதல் நிலையக்காரர்கள் தண்டவாளத்தை வண்டவாளமாக்கி
விடுவார்கள்.
கைபொத்தி, வாய்பொத்தி கொள்முதல்காரர்கள்
எடுக்கின்ற நெல்லை எடுத்துக் கொண்டு ஒதுங்குகின்ற நெல்லை தாரை வார்த்து விட்டு வரத்
தெரிந்தால் கொள்முதல் நிலையத்தில் போடலாம். எல்லாம் வயிற்றெரிச்சலாக இருக்கும். அதுவேறு
வயிற்றுப் புண்ணோ, குடற்புண்ணோ வந்து விட்டால் அதற்கு யால் செலவு செய்வது என்று அந்த
எரிச்சலையும் படாமல் இருப்பதே நல்லதாகத் தோன்றும்.
இவ்வளவும் நடந்ததற்கு அப்புறம்
மூட்டைக்கு நாற்பது ரூபாய் படியளக்க வேண்டும். சுமை தூக்குபவர்களுக்குக் கொடுக்க வேண்டும்,
பராமரிப்புச் செலவுக்கு வேண்டும் என்று நூறு, இருநூறு தனியாக அழ வேண்டும். அப்படியென்ன
நெல் மூட்டைக்கு இரண்டாயிரம், மூவாயிரமா கொடுக்கிறார்கள்? நீட்டும் கைகளுக்கு எல்லாம்
கையூட்டு தந்து தாராள மனப்பான்மையைக் காட்டிக் கொள்ள?
இவ்வளவு நடந்து முடிந்தும்
பணம் கைக்கு வராது. ஒரு வாரம் கழித்து வங்கிக் கணக்கிற்கு வரும். அதை எடுக்க வங்கிக்குப்
போய் அரை நாளோ, முழு நாளோ தேவுடு காக்க வேண்டும். விலையில்லா பணத்தை (ஓசிப்பணத்தை)
வாங்குவதைப் போல வங்கியாளர்களுக்கு அலட்சியம். அறுவடை வந்தால் இதே வேலையாப் போச்சு
என்று அவர்கள் வீட்டுப் பணத்தை எடுத்து யாசகம் போடுவதைப் போல அலுத்துக் கொள்வார்கள்.
வயலில் நெல்லறுப்பு என்றால்
இடைப்பட்ட செலவுகள் எவ்வளவு இருக்கும்? எந்திரத்திற்குப் பணம் கொடுக்க வேண்டும். ஒத்தாசைக்கு
வைத்திருக்கும் ஓரிருவருக்கு கூலி கொடுக்க வேண்டும். டீ, பட்சணம், மதிய சாப்பாட்டுச்
செலவுகளைச் செய்ய வேண்டும்.
என்னுடைய வயலில் விளைந்த
நெல்லைத்தான் போடுகிறேன் என்று அலுவலரிடம் எழுதி வாங்கி கையொப்பம் பெற்று வர சில நூறுகளை
அழ வேண்டும். இதற்கெல்லாம் பணம் வராமலா போய் விடும் என்ற நம்பிக்கையில் கந்துவட்டி
கந்தசாமியிடம் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வங்கிக் கணக்கில் பணம்
வரவான பிறகு தண்டமாக அழுத பணம் போதாது என்று கந்துவட்டிக் கந்தசாமியிடம் வாங்கிய கடனுக்கும்
வட்டியை அழ வேண்டும்.
இந்தக் கருமாந்திரங்களைப்
பார்க்கையில் வியாபாரியிடம் போடுவதே உசிதமாக இருக்கும். அறுவடை ஆன அடுத்த சில மணி நேரங்களில்
அவரே சிற்றுந்தோ (டாடா ஏஸ் போன்றவை), சரக்குந்தோ (லாரி) கொண்டு வந்து ஏற்றிச் சென்று
விடுவார். கையோடு ரூபாயை எண்ணி வைத்து விடுவார். உடனே அறுவடை எந்திரக்காரருக்கும்,
ஆட்களுக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு டீ, பட்சண செலவையும் பைசல் பண்ணி விடலாம்.
கொஞ்சம் வியாபாரியிடம் பேரம்
பேசியோ, கெஞ்சிக் கூத்தாடியோ மூட்டைக்குப் பத்தோ இருபதோ போட்டுத் தரச் சொல்லி வாங்கிக்
கொள்ளலாம். வியாபாரியிடம் இப்படி அணுக்கம் வைத்துக் கொண்டால் விதைக்கின்ற காலத்தில்
கொஞ்சம் முன்பணமும் வாங்கிக் கொள்ளலாம். விதைநெல்லையும் வாங்கிக் கொண்டு அறுவடை செய்து
போடும் போது கழித்துக் கொள்ளலாம். இந்தச் சௌகரியங்கள் கொள்முதல் நிலையங்களிலோ, கூட்டுறவு
வேளாண்மை வங்கிகளிலோ கூடி வராது. கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் ஊரே விதைத்த பிறகு
விதைநெல் வாங்கிக் கொள்ள அறிவிப்பு வரும். கதிர் முற்றி அறுவடை செய்யும் நேரத்தில்
உரம் வாங்கிக் கொள்ளச் சொல்லித் தாக்கீது வரும். சரிதான் போ என்று நகையை அடகு வைத்து
பணமாக ஆக்கிக் கொண்டு பண்ணலாம் என்றால் இந்த வருடம் வைத்த தங்க நகை அடுத்த வருடம் கவரிங்
நகையாக மாறியிருக்கும்.
இப்போதைய நிலைக்கு கொள்முதல்
நிலையங்களை விட, வேளாண்மை வங்கிகளை விட வியாபாரிகளே பரவாயில்லை என்று தோன்றுகிறது.
விலை குறைத்துதான் எடுக்கிறார்கள் என்றாலும் களத்தில் ரொக்கமாகப் பணத்தை எண்ணி வைக்கிறார்கள்.
முடை என்று போய் நின்றால் உத்திரவாதம் கேட்காமல் பணத்தை எடுத்து வைக்கிறார்கள். அப்படி
ஒருவர் தேவையாகத்தான் உள்ளது. அவர் இடைத்தரகர் என்றாலும் அந்த இடைத்தரகர் இல்லாவிட்டால்
கொஞ்ச நஞ்சம் இருக்கும் விவசாயியும் விவசாயியாக இருக்க மாட்டார்கள்.
சாபக்கேடுதான் என்றாலும்
இந்த இடைத்தரகர்களை நம்பிய ரெண்டுங்கெட்டான் விவசாயத்தைத்தான் இந்தக் காலத்தில் கொஞ்சமேனும்
செய்ய முடிகிறது.
*****
No comments:
Post a Comment