பனியும் மழையும் பொழியும் தை மாதம்
நான்கு வருடங்களாக இப்படியேத்தான்
இருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். மழை பிறக்கிறது. அறுவடையை ஒரு
வழி பண்ணி விடுகிறது. வங்கக் கடலில் புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அப்படி இல்லாவிட்டால்
வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி என்று ஏதாவது ஒன்று வந்து விடுகிறது மழையைக் கொண்டு வர.
மழை வருவதற்கு இப்படி ஏதோ காரணங்கள் வந்து சேர்ந்து மழையும் வந்து சேர்ந்து விடுகிறது.
2023 வருடத்தில் தை பிறந்த
போது மழை வராது போலத்தான் தோன்றியது. அப்போதைகப்போது வானம் மூடாக்குப் போட தவறவில்லை.
சில நேரங்களில் சாரல் தூரலாகவோ சாம்பல் தூரலாகவோ தூரல் போட்டது.
அதிகாலைப் பனிக்கும் குளிருக்கும்
குறைவில்லை. எல்லாம் இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வங்கக்
கடல் சும்மா இருக்க வேண்டுமே. ஒரு புயலை உருவாக்கி விட்டது. அது அப்படியே உருவாகி அப்படியே
அரபிக் கடல் பக்கம் போய் விடும் என்று முதலில் பேசிக் கொண்டார்கள். மனதுக்குக் கொஞ்சம்
தெம்பாக இருந்தது.
அந்தத் தெம்பை உடைத்து போட்டு
விடுவது போல அது இலங்கையின் திரிகோணமலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அடுத்த செய்தி
வந்தது. அதுதான் வயிற்றில் புளியைக் கரைத்தது. அப்போது வயிற்றில் சுரந்த அமிலம் டார்ட்ரிக்
அமிலமா அல்லது ஹைட்ரோ குளோரிக் அமிலமா தெரியவில்லை.
மூன்று நாட்கள் கனமழை இருக்கும்
என்று வானிலை ஆய்வு மையம் தகவல் சொல்லி விட்டது. அப்பாடா வானிலை ஆய்வு மையம் இப்படிச்
சொல்லி விட்டால் பெரும்பாலும் மழை இருக்காது என்று ஊரில் ஒரு நம்பிக்கை உண்டு. அந்த
மூன்று நாளில் முதல் நாள் மழையில்லை. மழைக்கான மூடாக்குதான் இருந்தது. அப்படியே போய்
விடும் என்ற அசட்டு நம்பிக்கை.
இரண்டாம் நாள் ராத்திரி பிடித்துக்
கொண்டது வானம். கொஞ்சம் கொஞ்சமாக மழையைக் கொட்ட ஆரம்பித்து விட்டது. அதிகாலை கொஞ்சம்
கனமாகவே கொட்டியது. இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை விடப் போகிறார் என்று வேடிக்கையாகப்
பேசிக் கொண்டிருந்தோம். வாண்டுகளின் சத்தம் விண்ணைப் பிளந்த போது வேடிக்கை வாடிக்கையாகி
விட்டது. இதிலும் ஒரு நம்பிக்கை உண்டு. மாவட்ட ஆட்சியர் விடுமுறை விட்டால் அன்று மழை
பெய்யாது என்று.
நம் மக்களிடம்தான் எவ்வளவு
நம்பிக்கை. அன்று முழுவதும் மழை அடித்து ஊற்றி மாவட்ட ஆட்சியரின் விடுமுறைக்கு நியாயம்
செய்து விட்டது.
அறுவடை வேலைகள் இப்போதுதான்
ஆரம்பித்திருக்கின்றன. போன வருடம் கர்நாடகத்திலும் ஆந்திராவிலிருந்தும் நெல் அறுக்கும்
இயந்திரங்கள் வந்த நிலை மாறி இந்த வருடம் சேலத்திலிருந்து இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தன.
பரவாயில்லை நம் மாநிலத்துக்காரர்கள் இயந்திரங்கள் வாங்கும் அளவுக்குத் தெம்பாக இருக்கிறார்கள்
என்று ஒரு பக்கம் சந்தோசம். இருந்தாலும் நம் மாவட்டத்துக்காரர்கள் இயந்திரம் வாங்கும்
அளவுக்கு தெம்பாக இல்லையே என்று மறுபக்கம் கவலை. விவசாயத்தில் இறங்கி விட்டால் இப்படித்தான்
சந்தோசமும் கவலையும் மாறி மாறி மனதில் வந்து போகும் போலிருக்கிறது.
பழைய அறுவடை முறை எவ்வளவு
மாறி விட்டது. அதிகாலை ஐந்து ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி ஆட்களைத் திரட்டி எட்டு ஒன்பது
மணிக்குள்ளாக கதிரறுத்து வேலை ஆகி விடும். மிஞ்சிப் போனால் பத்து பதினொன்றுக்கு முடிந்து
விடும்.
அந்த நாள் முழுவதும் அறுத்த
கதிர்கள் அரிகாய்ச்சலாகக் காய்ந்து கொண்டிருக்கும். மறுநாள்தான் கண்டுமுதல் ஆகும்.
இப்போது இப்படிப் பெய்யும் மழையில் கதிரை அறுத்துப் போட்டால் நிலைமை என்னவாகும்? பைசா
காசுக்குப் பிரயோஜனப்படாமல் போய் விடும்.
கதிர் அறுத்துக் கண்டுமுதல்
செய்யலாம் என்றால் கதிர் அரிவாள் எத்தனைப் பேரிடம் இருக்கிறது? விவசாய உழைப்பின் எவ்வளவு
உன்னதமான கருவி அது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் கூட கதிர் அரிவாள்தான்.
ஓட்டுப் போட்டது குறித்து ரகசியம் காக்க வேண்டும் என்றாலும் இந்தப் பகுதி மக்கள் எல்லாம்
தேர்தலில் கதிர் அரிவாளுக்கு ஓட்டுப் போட்டேன் என்று ரொம்ப பெருமையாகச் சொல்வார்கள்.
கதிர் அரிவாள் அவ்வளவு பரிட்சயமான பொருள். இனி வரும் தலைமுறைக்கு அதை அருங்காட்சியகத்தில்
வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அறுத்த கதிர்களை மறுநாள்
கட்டாகக் கட்டி ஒரு திம்மு திம்மி அப்படியே தூக்கிக் கொடுக்கும் கட்டை அலாக்காகத் தூக்கி
வைத்து வரப்பில் ஆட்கள் ஓட்டமும் நடையுமாக நடந்து வரும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும் போலிருக்கும்.
இப்படி கட்டுக் கட்டித் தூக்குனா
எப்போ கட்டுப் போய் சேர்றது, வேலை எப்போ ஆவுறது, இன்னும் சேர்த்து வைத்துக் கட்டுடா
என்று சொல்லித் தூக்கிக் கொண்டு போகும் ஆட்களுக்கு லாரி என்று பெயர். வேலையில் அவர்களுக்கு
எப்போதும் கிராக்கி இருக்கும்.
களத்திற்கு வந்த கதிர்கள்
கை அடியலாகக் கண்டுமுதல் ஆவதிலிருந்து டிராக்டர் வந்து கண்டுமுதல் ஆனது வரை நான் கண்ணால்
பார்த்திருக்கிறேன். பிறகு கதிரடிக்கும் இயந்திரம் வந்தது. நெல்லைக் காய வைப்பது, தூற்றுவது
என்று களம் புழங்கி முடிய இரவு ஆகி விடும்.
கண்டுமுதல் ஆன நெல்லை மூட்டைகளாகக்
கட்டி மாட்டு வண்டியில் அனுப்பிய காலத்திலிருந்து இப்போது டாட்டா ஏஸ் வந்து விட்ட காலம்
வரைக்கும் பார்த்தாயிற்று.
இப்போது எந்திரம்தான் எல்லாவற்றிற்கும்.
எவ்வளவு பேர் வேலை செய்த வயலும் களமும் ஒத்தாசைக்கு ஒன்றிரண்டு பேர் இருந்தால் போதும்
என்றாகி விட்டது.
விதைப்பிலிருந்து களைபறிப்பு
அறுவடை வரை எல்லாம் இயந்திரம்தான். இப்படி அறுவடை நேரத்தில் மழை பொழியும் இந்தக் காலத்தில்
இயந்திரம் இல்லையென்றாலும் சிரமம்தான்.
இந்த இயந்திரங்களுக்குள்ளும்
ஏதோ அறிவு இருக்க வேண்டும். இனி இந்த விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு கிராமத்தில் ஆட்கள்
இருக்க மாட்டார்கள், அவரவர்களும் கட்டட வேலையையோ, திருப்பூர் பக்கமோ, ஓசூர் பக்கமோ
வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள், அப்படியே இருந்தாலும் டாஸ்மாக்கில்
போய் குடித்துக் குடித்து வேலைச் செய்யும் தெம்பை இழந்து போயிருப்பார்கள் என்பதைச்
சரியாக அறிந்து நிலத்தில் இறங்கி விட்டன.
இயந்திரம் இருக்கிறது என்றாலும்
இப்படி மழை பெய்தால் எப்படி வயலில் இறக்க முடியும்? அரை மணி நேர மழைக்கு வயலில் அப்படித்
தண்ணீர் தேங்கி விடுகிறது. பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால் என்று இரு வகை வாய்க்கால்களும்
காணாமல் போய் வாய்க்கால் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக ஆஜானுபாகுவாக இருந்த
மனிதன் எலும்பும் தோலுமாக துருத்திக் கொண்டுப் போய்க் கிடப்பதைப் போல பேருக்கு வாய்க்கால்கள்
இருக்கின்றன. அந்த வாய்க்கால்களில் ஆற்றில் தண்ணீர் வந்தால் சட்டென்று பாயாது, வயலில்
நீர் நிறைந்தால் சட்டென்று வடியாது.
போன வருடம் இப்படி மழை பெய்து
ஓய்ந்திருந்த வேளையில் இயந்திரத்தை இறக்கிப் பார்த்த அனுபவம் இன்னும் மறக்காது. இரண்டு
வயல் அறுவடையை முடித்து மூன்றாவது வயலில் அறுவடை செய்த போது இயந்திரம் சேற்றில் சிக்கி
விட்டது. சக்கரம் சுற்ற சுற்ற சுற்றும் கச்சை வார் அறுந்து விட்டது. சக்கரம் முழுவதும்
சேறு அப்பி சக்கரம் இருக்குமிடமே தெரியாமல் போய் விட்டது. பாதி இயந்திரம் வெளியே தெரிகிறது.
மீதி இயந்திரம் சேற்றில் மூழ்கிக் கொண்டிருப்பது போல தெரிகிறது.
ஒருவழியாகச் சிக்கிய இயந்திரத்தை
மீட்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது. கர்நாடகாவிலிருந்து வந்த ஆட்களைச் சும்மா
சொல்லக் கூடாது. கடுமையான உழைப்பாளிகள். மண்வெட்டியை வாங்கிக் கொண்டு அவர்கள் சேற்றை
இழுத்து போட்ட வேகமும், பாறைக்கோலால் சேற்றைக் குத்தி வெளியேற்றிய வேகமும் சத்தியமாக
நம் ஆட்களால் செய்ய முடியாது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இயந்திரத்தை
மீட்டு வெளியே கொண்டு வந்து விட்டார்கள். பிறகு மழை ஓய்ந்திருந்தும் வயல் காயட்டும்
என்று நான்கைந்து நாட்கள் காத்திருந்து அறுவடையைச் செய்தோம்.
இந்த வருடமும் இப்படி மழை
பெய்ய ஆரம்பித்து விட்டது. முந்தைய நாள் அடித்த காற்று இருக்கிறதே, பேய்க் காற்று.
காலையில் வயலைப் போய்ப் பார்க்க மனசே வரவில்லை. பார்க்காமல் இருந்தால் ஏதாவது ஒரு அசட்டுத்தனமான
நம்பிக்கையில் இருக்கலாம். போய்ப் பார்த்துக் கதிர்கள் சாய்ந்திருப்பதைக் கண்ணில் கண்டு
விட்டால் அன்றைக்கு ஒரு பருக்கை உள்ளே இறங்காது.
என்னத்தெ கவலைப்பட்டு என்னத்தெ
ஆகப் போகிறது என்று வீட்டிலுள்ள பெண்டுகள் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் சோறு இறங்குவது
கஷ்டம்தான். இந்தப் பெண்கள்தான் எவ்வளவு தைரியசாலிகள். என்னமாக அந்த நிலைமைக்குத் தகுந்தாற்
போல பேசுகிறார்கள், ஆறுதல் பண்ண நினைக்கிறார்கள். இதென்ன இந்த வருஷம்சதான் புதுசா நடக்கிறாற்
போல முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு என்று அவர்கள் கேட்கும் கேள்வி இருக்கிறதே. எப்படி
இவர்களால் இதை இவ்வளவு எதார்த்தமாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறதோ?
ஒரு குறையும் இல்லாமல் எல்லாம்
நல்லபடியா வீடு வந்து சேரும் என்று அடுத்த ஆறுதல் அஸ்திரத்தையும் எடுத்து வீசுவார்கள்
பாருங்கள், அப்போதுதான் கொஞ்சம் பசி எடுக்கும். தட்டுல கொஞ்சம் சோற்றைப் போட்டுக் கொண்டா
என்று சொன்னதுதான் தாமதம் என்பது போல சொல்லி முடிப்பதற்கு முன் தட்டை முன்னே வைத்து
விடுவார்கள். நமக்கு வயலில் இருப்பது கரையேற வேண்டும் என்ற கவலை. அவர்களுக்கு வீட்டிலிருக்கும்
ஆம்பளை சாப்பிட வேண்டும் என்ற கவலை. ஒட்டுமொத்தத்தில் எல்லாம் சாப்பாட்டுக் கவலைதான்.
வயலில் கிடப்பது கரையேறினால்தானே உலகத்தில் இருப்போரெல்லாம் சாப்பிட முடியும்.
சரிதான் என்று சாப்பிட்டு
விட்டு வந்து பார்த்தால் இன்னும் மழை நின்றபாடில்லை. இன்னும் கனமாக வேறு பெய்து கொண்டிருக்கிறது.
இப்படி மழையாகப் பெய்கிறதே என்று வருத்தப்பட்ட நிலை மாறி இன்னும் ஐந்து வருடத்தில்
மழையே பெய்யவில்லையே என்று வருத்தப்படும் நிலையும் வரும். இப்படியும் அப்படியுமாக மாறி
மாறி கவலைப்படக் கூடிய நிலையில்தானே இந்த வானம் விவசாயிகளை வைத்திருக்கிறது. அதற்கு
மேல் நெல் மூட்டைக்குக் கிடைக்கக் கூடிய விலை இருக்கிறதே. அதை நாளை சொல்கிறேன்.
*****
No comments:
Post a Comment