2 Nov 2022

மன ஓர்மைக்கான நேரம்

மன ஓர்மைக்கான நேரம்

கவனிக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. கேட்கிறீர்களா என்பதுதான் முக்கியம் மனைவி பேசும் போது.

மனைவியின் அலாதியான அன்பு அதுதான். நீங்கள் கவனிக்கவில்லை என்பது அவரைக் கோபப்படுத்தாது. கேட்கவில்லை என்பதுதான் கோபப்படுத்தும.

கேட்பது போலப் பாவித்துக் கவனிக்காமல் இருக்கும் கணவர்கள் மனைவியோடு அந்நியோன்யமாக இருக்கிறார்கள். கவனித்தலில் கவனம் செலுத்தத் தொடங்கும் கணவர்கள் மனைவியோடு சண்டையிடத் தொடங்கி விடுகிறார்கள்.

பழகப் பழக எல்லாம் எளிமையாகி விடுகின்றன. ஒரு கட்டத்தில் மனைவி பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் பல முக்கியமான பிரச்சனைகளுக்கான முடிவுகளை உங்களை அறியாமல் எடுக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

ஒரு முறை தீர்வு காண முடியாமல் இருந்த அலுவலகப் பிரச்சனை ஒன்றுக்கான தீர்வை மனைவி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்தேன்.

மற்றொரு முறை ஒரு கடன் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது மனைவி பேசிக் கொண்டிருந்தது கை கொடுத்தது.

இன்னொரு முறை வங்கிக் கடன் வேண்டுமா என்று ஓயாது அழைத்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியைச் சமாளிக்க மனைவியின் பேச்சு உதவி செய்தது.

பல முக்கியமான முடிவுகளை மனைவி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்திருக்கிறேன். மனம் ஓர்மை படவும் ஒரு நேரம் வேண்டி இருக்கிறது அல்லவா! அது அவர் பேசிக் கொண்டிருக்கும் நேரம்தான்.

இப்போதெல்லாம் வீட்டுக்கு வந்து உடன் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்குமாறு சொல்கிறேன்.

அவர் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் என்னுடைய பேச்சைக் கேட்காமல் அவருக்குத் தூக்கம் வராது என்று அவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது இப்படியே பழக்கமாகி இப்போதெல்லாம் யார் பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு வார்த்தை எதிர் வார்த்தை பேசுவதில்லை. எல்லாரும் நல்ல பிள்ளை என்கிறார்கள்.

எல்லாம் மனைவி தந்த வரம்.

கண்ணதாசன் சொல்வது போல மனைவி அமைவது இறைவன் தந்த வரம்.

மனைவியை வரமாக அமைத்துக் கொள்வது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதில்தான் இருக்கிறது.

அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருங்கள். மனைவியைக் கடவுள் உங்களுக்கு வரமாய் கொடுத்துக் கொண்டிருப்பார்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...