15 Oct 2022

புத்தரின் கண்டுபிடிப்பு

புத்தரின் கண்டுபிடிப்பு

எனக்குப் பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதை எந்த நாளில் வாழப் போகிறேன் என்று தெரியவில்லை.

அத்துடன் எனக்குப் பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கை வாழவும் ஆசைப்படுகிறேன். அதையும் எந்தப் பிறவியில் வாழப் போகிறேன் என்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்த மாதிரி ஒரு வேலை செய்யவும் ஆசைப்படுகிறேன். அதையும் எப்போது செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்த மாதிரி ஒரு புத்தகம் படிக்கவும் ஆசைப்படுகிறேன். அதையும் எப்போது படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்த மாதிரி சில பிள்ளைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவற்றையும் எப்போதும் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.

இப்படி எனக்குப் பிடித்த மாதிரி வாழ, செய்ய, ஓட, ஆட, நடக்க, கடக்க, படிக்க, நடிக்க, குடிக்க, துடிக்க, பெற்றுக் கொள்ள, கற்றுக் கொள்ள எவ்வளவோ ஆசைகள். அதெல்லாம் எப்போது என்று தெரியவில்லை.

அதனால் நான் எதுவும் நடக்காத துயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மனிதன் என்றால் இப்படியெல்லாம் ஆசைகளோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். அதனால் சரிதான் கழுதை இருந்து விட்டுப் போகட்டும் என்று இருக்கிறேன்.

காசா? பணமா? ஆசைப்பட்டு வைப்போம். நடந்தால் நடக்கிறது, நடக்காமல் போனால் போகிறது.

நடந்தால் ஆசைப்பட்ட மாதிரி நடந்திருக்கிறது அவ்வளவுதான். ஆசைப்பட்ட மாதிரி மட்டுமே நடந்திருக்கிறது. தெரிந்த மாதிரிதானே நடந்திருக்கிறது. அதிலென்ன சுவாரசியம்? நடக்காமல் போனால்தான் சுவாரசியம். தெரியாத மாதிரி நடந்திருக்கிறது. அதைச் சலித்துக் கொள்ள முடியாது பாருங்கள்.

ஆசைப்பட்டபடி நடந்தால் இதென்ன எல்லாம் ஆசைப்பட்டபடி நடந்து கொண்டிருக்கிறதே என்ற சலிப்புதான் மிஞ்சும்.

வாழ்க்கை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எல்லாம் ஆசைப்படாத மாதிரி நடக்க வேண்டும். ஆசைப்பட்ட மாதிரி நடக்கிற வாழ்க்கை குறுகியது. குறுகியது எப்போதும் துன்பம். ஆசையே துன்பங்களுக்கே காரணம் என்று புத்தர் கண்டுபிடித்தது இப்படித்தான்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...