3 Oct 2022

நாம் ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்?

நாம் ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்?

இந்த உலகமே ஒரு கிராமமாக ஆகி விட்டது என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தின் பண்புகளுடனா இருக்கிறது இந்த உலகம்? ஒரு நகரத்தின் பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இந்த உலகில் கிராமங்களும் மாறி விட்டன.

எல்லாருக்கும் ஏதோ ஒரு திசையில் ஓட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஏன் ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? என்ற கேள்வி அப்புறம்தான். ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அறிவுரைதான் எங்கும் எதிலும் முதன்மை பெறுகிறது.

குழந்தைகள் பள்ளி வாகனங்களுக்காக ஓடுகிறார்கள். வாலிப வயதில் இருப்பவர்கள் தங்கள் இணையருக்காக ஓடிக் கொண்டிருக்கலாம். இணையைத் தேடிக் கொண்டவர்கள் நிச்சயம் வேலைக்காக ஓடுகிறார்கள். முதியோருக்கும் ஓட்டம் குறைந்த பாடில்லை. அவர்களும் ஓய்வுக்குப் பின் வருமானம் தரும் ஒரு வேலைக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

யாருடைய ஓட்டம் இங்கு குறைவு, யாருடைய ஓட்டம் அதிகம் என்பதை விவாதிக்க நேரமில்லாத வகையில் ஓட்டம் இருப்பதை நீங்கள் போக்குவரத்து நெரிசலைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

என்னதான் ஓட்டமாக ஓடினாலும் அந்த நெரிசலில் வழியும் வியர்வையோடு நின்றுதான் ஆக வேண்டியிருக்கிறது. நிற்கும் நேரத்திலும் சிவப்பு, மஞ்சள், பச்சை என்று மாறி மாறி ஒளிரும் நிறங்களில் கவனத்தைத் தொலைக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

கிடைக்கும் கொஞ்சம் நஞ்ச நேரத்திலும் சமூக ஊடகங்கள் நம்மை ஓட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது இணையத் தொடர்கள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

நான் என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்? ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இடையே கிடைக்கும் விடுமுறைகள் இளைப்பாறுதலை இட்டு நிரப்பவே போதுமானதாக இல்லை.

முதலில் நாம் கொஞ்சம் ஓட்டத்தை நிறுத்தத்தான் வேண்டும்? எதற்காக நாம் ஓடுகிறோம் என்ற கேள்வியை எழுப்பித்தான் ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...