14 Oct 2022

நீயும் என் தோழரே!

நீயும் என் தோழரே!

நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

இது போன்ற நேரங்களில் மனைவி என்னைத் தொந்தரவு செய்வதில்லை. அவளது மெகாதொடர் நேரங்களில் குறுக்கிடாமல் நான் பாட்டுக்குத் தனியாக யோசித்துக் கொண்டிருப்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அன்று என்னவோ தனியாக யோசித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, “யாரைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள்.

நல்லவேளை, எவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்காததால் எனக்கும் மகிழ்ச்சி. திருக்குறளில் வரும் காதலி அப்படித்தானே கேட்கிறாள்.

சேகுவேராவைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாக யோசிக்காமல் பதில் சொன்னேன்.

“பேரு நல்லா இருக்கே, இந்த பேரையே மகனுக்கு வெச்சிடலாம்” என்றாள்.

எனக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. “நிஜமாகவா சொல்கிறாய்?” என்றேன்.

“உங்களுக்கு முன்னாடிதானே சொல்றேன். இப்படி எப்பப் பார்த்தாலும் லூசுத்தனமா கேட்டுக்கிட்டு?” என்றாள்.

எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டாலும் சேவின் பெயரை வைக்க மனைவி ஆசைப்பட்டதால் அந்த மகிழ்ச்சியைக் குறைத்துக் கொள்ள விருப்பமில்லை. “சேவின் பெயரை வைக்கச் சொன்னதால் இன்று முதல் நீயும் என் தோழர்தான்.” என்றேன்.

“எப்பப் பாரு புரியாத்தனமாவே பேசிக்கிட்டு” என்றவள், “ஜோசியர்தான் சொன்னாரு, அவன் பொறந்த நட்சத்திரதுக்குப் பேரு சேவுல ஆரம்பிக்கணுமாம். நீங்க சொல்ற பேரும் சேவுலதான ஆரம்பிக்குது.” என்றாள்.

நீங்களாக இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்? நான் சொன்னேன், “இன்று முதல் அந்த ஜோதிடரும் என் தோழர்தான்.”

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...