9 Sept 2022

இயந்திரங்கள் எடுத்துக் கொண்ட வேலை வாய்ப்புகள்

இயந்திரங்கள் எடுத்துக் கொண்ட வேலை வாய்ப்புகள்

நம் வாழ்க்கை முறையில் இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் வாழ்க்கை முறையில் இயந்திரங்களும் ஓர் அங்கம் என்று சொல்லலாம்.

விவசாயத்தை எடுத்துக் கொண்டால் ஏர் உழுதல், கண்டுமுதல் செய்வதில் பயன்படுத்தப்பட்ட காளை மாடுகளை டிராக்டர்கள் விரட்டி அடித்து விட்டன என்று சொல்லலாம்.

டிராக்டர்களின் வருகைக்குப் பின் ஏர் எனும் உழவுக் கருவி இல்லாமல் போய் விட்டது. உரங்களின் வருகை மாடு வளர்ப்பை இல்லாமல் செய்து விட்டது.

இயந்தி வாகனங்களின் வருகை மாட்டு வண்டி, குதிரை வண்டிகளின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி விட்டன.

இன்று இயந்திரங்கள் இல்லாத தொழிலைப் பார்க்க முடியாது. இயந்திரங்கள் இல்லாத வாழ்க்கை முறையைக் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.

உடல்  உழைப்பால் செய்யப்பட்ட பல வேலைகளை இன்று இயந்திரங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இட்டிலி மாவுக்கு ஆட்டுக்கல்லைப் பயன்படுத்தி யாரும் மாவு ஆட்டுவதில்லை. மசாலா அரைப்பதற்கு அம்மிக்கல்லைப் பயன்படுத்துவதில்லை.

சமையலுக்கான உடல் உழைப்பு சார்ந்த பணிகளையும் இயந்திரங்கள் எடுத்துக் கொண்டு விட்டன.

நாம் அடுத்தத் தெருக்கு நடந்து செல்வது கூட குறைந்து விட்டது. நம்மை வாகனங்களாக மாறி விட்ட இயந்திரங்கள் சுமந்து செல்கின்றன.

இயந்திரங்கள் நம்முடைய வேலைகள் பலவற்றை எடுத்துக் கொண்டு விட்டன என்றாலும் மனிதர்களுக்குப் புதிய பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தந்திருக்கிறது.

உடல் உழைப்பு குறைந்ததால் உண்டான நோய்களுக்கான மருத்துவமனைகளையும், மருந்து கடைகளையும், மருத்துவ ஆலோசனை நிலையங்களையும் இயந்திரங்கள் அதிகப்படுத்தியிருக்கின்றன என்றாலும் இதற்காக இயந்திரங்களைக் குற்றம் சொல்லி விட முடியாது. நம்மை உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம் என்று எந்த இயந்திரமும் தடுக்கவில்லை.

இயந்திரங்களைக் காரணமாக வைத்தோ, சாக்காக வைத்தோ அல்லது வாய்ப்பாக வைத்தோ நாம்தான் உடல் உழைப்பைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் நடை பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிகள் செய்யலாம். அதை எந்த இயந்திரமும் தடுக்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவஷமாக அவற்றுக்கும் கூட இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இயந்திரங்களைக் கொண்டே நம்மை உடல் உழைப்புக்கும் உட்படுத்திக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு இயந்திரங்கள் சூழ் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயந்திங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டாலும் இயந்திரங்களை இயக்குவதற்கான வேலைவாய்ப்பை இன்னும் மனிதர்களுக்குக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி யோசித்துக் கொண்டு போகும் போது இயந்திரங்கள் பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.

நம் வாழ்வில் நீக்கமற நிறைந்து கொண்டிருக்கும் இயந்திரங்களைப் பற்றி இனியும் யோசிக்காமல் இருக்க முடியாது. மனித உறவில் பங்கு கொள்ளும் அளவுக்கு இயந்திர உறவும் முக்கியமாகி விட்ட பின் இயந்திரங்கள் – மனிதர்கள் தொடர்பாக யோசிக்காமல் இருக்க முடியாது.

யோசிப்போம்!

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...