3 Sept 2022

ஒரு திரைப்படமும் ஒரு நிர்வாணப் படமும்

ஒரு திரைப்படமும் ஒரு நிர்வாணப் படமும்

‘சீயான்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவர் விக்ரம். பாட்டனைச் சீயான் என்று அழைப்பார்கள். அதாவது தாத்தாவின் அப்பாவைச் சீயான் என்று அழைப்பார்கள். அப்படி ஒரு சிறப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரது நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ என்ற திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஓடுவதாகக் கேள்விப்பட்டேன்.

விக்ரம் போன்ற நடிகர்களின் நடிப்புக்கு மூன்று மணி நேரம் போதாது. மூன்று மணி நேரம் என்பது ஒரு நாளின் எட்டில் ஒரு பகுதி. அந்த மூன்று மணி நேரத்திற்கு இடையில் ஒரு பத்து நிமிடம் இடைவெளி இருந்தாலும் மூன்று மணி நேரத் திரைப்படங்களை நேர குறைப்பு செய்வதுதான் நல்லது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஒன்றரை மணி நேரம் போதுமானது. அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஓடலாம். அதற்கு மேல் என்றால் பார்ப்பவர்களின் நிலைமைதான் பரிதாபம். இனிமேல் வரக் கூடிய படங்களில் விக்ரம் இது குறித்துக் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்.

***

அண்மையில் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாயின. இப்படங்களை யாரும் ரகசியமாகப் படம் பிடித்து வெளியிடவில்லை. ரன்வீரே வெளியிட்டிருந்தார்.

பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக அப்படங்களை வெளியிட்டிருந்ததாக ரன்வீர் ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார். ரன்வீர் வெளியிட்ட நிர்வாணப் படங்கள் அவரைக் காவல் நிலையம் வரை இழுத்துச் சென்றிருக்கிறது.

தற்போது தான் ஏன் அப்படங்களை வெளியிட்டோம் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். நிர்வாணப் படங்கள் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆடை கட்டி அலையும் உலகில் அம்மணமாக அலைய முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். தமிழகப் பழமொழி இந்த விசயத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அம்மணமாக அலையும் ஊரில் ஆடை கட்டி அலையக்கூடாது என்பதாக அது இருக்கும்.

ஒரு நடிகரின் நிர்வாணப் படமும் ஒரு நடிகையின் நிர்வாணப் படமும் வெவ்வேறு அலகுகளில் அணுகப்படுவதையும் இவ்விடம் நாம் கவனிக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...