ஏன் தனியார் பள்ளிகள்?
நம் நாட்டில்தான் மக்கள்
தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர் என்று நான் நினைத்திருந்தேன்.
சில வெளிநாட்டு நண்பர்களிடம்
பேசிய போது அவர்களும் அப்படித்தான் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க
விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து
அவர்கள் அநேக கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும்
வகையில் திருப்தியான கல்வியை அளிக்க விரும்புகின்றனர்.
அவர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும்
பூர்த்தி செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
நீங்கள் ஓர் அரசுப் பள்ளி
ஆசிரியரை எடுத்தக் கொள்ளுங்கள். அவர் கூட தன்னுடைய பிள்ளைகளைத் தனியார் பள்ளியில்தான்
படிக்க வைக்க விரும்புகிறார்.
நம் நாட்டில் பல நகைமுரண்கள்
இருக்கின்றன. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்
படிக்க வைப்பதும் ஒன்று.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க
வைக்கவே விரும்புகின்றனர். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அந்த விதிவிலக்குகளைக்
காட்டி நீங்கள் இந்த பேருண்மையை உண்மையில்லை என்று மறுத்து விட முடியாது.
தங்கள் பிள்ளைகள் குறித்த
ஆசைகளையும் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனியார் பள்ளிகள்தான் நிறைவேற்றும்
என்ற நம்பிக்கைதான் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதன் பின்புலம்.
தவிரவும் தங்கள் பிள்ளைகளுக்கான
பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பெற்றோர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது.
இதனால் நான் தனியார் பள்ளிகளுக்கு
ஆதரவானவன், அரசுப் பள்ளிகளுக்கு எதிரானவன் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.
நான் என் பிள்ளையை அரசுப்
பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். இதென்ன மடத்தனம் என்று நீங்கள் கேட்கலாம்.
என் பிள்ளை குறித்து என்னிடம்
அளவான எதிர்பார்ப்புதான் உள்ளது. அவளுக்கு எழுதப் படிக்கவும், சமூகத்தையும் தன்னையும்
புரிந்து கொள்ளத் தெரிந்தால் போதும். அதை நிறைவேற்றிக் கொள்ள அரசுப் பள்ளியே எனக்குப்
போதுமானது.
உங்கள் எதிர்பார்ப்புகள்தான்
உங்கள் பிள்ளைகளுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பது எனது கணிப்பு. அப்படி
இல்லையெனில் நீங்கள் உங்கள் கருத்துகளைத் தாரளமாகச் சொல்லலாம்.
*****
No comments:
Post a Comment