10 Sept 2022

இயந்திரமாகும் மனிதர்கள்

இயந்திரமாகும் மனிதர்கள்

‘பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்’ என்பது தமிழகத்தின் பழமொழி. இயந்திரங்களோடு பழகிய மனிதர்களுக்கும் இது அப்படியே பொருந்திப் போவதுதான் ஆச்சரியம். இயந்திரங்களோடு பழகிப் பழகி ஒரு கட்டத்தில் மனிதர்களும் இயந்திரங்களாகிப் போகிறார்கள்.

சிக்கி முக்கிக் கற்களைக் கொண்டு நெருப்பை உருவாக்கிய காலத்திலிருந்து இயந்திரங்களுடனான மனித வாழ்க்கைத் தொடங்குகிறது. கற்கள்தான் மனிதர்களுக்கான முதல் இயந்திரங்களாக இருந்திருக்கின்றன.

கற்கள் உருண்டோடுவதைக் கொண்டு சக்கரங்களைக் கண்டுபிடித்தது மனிதர்கள் நிகழ்த்திய அடுத்த இயந்திரக் கண்டுபிடிப்பு.

இயந்திரங்கள் ஒவ்வொன்றும் இயல்பான வாழ்க்கையை விரைவாக்குவதை மனிதர்கள் அறிகிறார்கள். அந்த அறிவு அவர்களைத் தங்களையும் இயந்திரங்களாக மாற்றிக் கொண்டால் விரைவாக வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

வேட்டையாடி பசி தீர்த்துக் கொண்ட மனிதர்களுக்குக் கற்கள், மரக்கிளைகள், கூர்மையான பொருட்கள் அனைத்தும் இயந்திரங்களாக மாறத் தொடங்குகின்றன.

செம்பு, இரும்பு போன்ற உலோகங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் இயந்திர அறிவைக் கூர்மைபடுத்துகிறது. கூர்மையான இயந்திரங்களை வடிவமைக்க அவர்களின் இயந்திர அறிவு அவர்களைத் தூண்டுகிறது.

வேட்டையாடும் வாழ்க்கையிலிருந்து விவசாயத்தை மேற்கொண்டு நிலையான வாழ்க்கையை வாழத் தொடங்கும் போதும் இயந்திரங்களின் உதவி அவர்களின் விவசாயத்தைச் செழுமைப்படுத்துவதை மனிதர்கள் அறிகிறார்கள்.

விவசாயத்திற்குத் தேவையான இயந்திரங்களை உருவாக்கிக் கொண்ட மனிதர்களுக்கு அவர்களின் நிலப்பகுதியை விரிவாக்கும் எண்ணம் உண்டாகும் போது அதற்கும் இயந்திரங்கள்தான் தேவை என்பதை அறிகிறார்கள். அவர்களின் அறிவு போர்க்கருவிகள் எனும் இயந்திரங்கள் பக்கம் திரும்புகிறது.

இப்படியாக இயந்திரங்கள் மனிதர்களை வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாயச் சமூகமாக விவசாயச் சமூகத்திலிருந்து நாடு பிடிக்கும் சமூகமாகப் பலவிதமாக மாற்றிப் போடுகிறது.

புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் போதெல்லாம் வாழ்க்கை வேறொன்றாக உருமாறுவதை மனிதர்கள் அறிகிறார்கள். தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பதை மாற்றி கண்டுபிடிப்புகளே தேவைகளின் ஊற்றுக்கண் என்பதை அறியத் தொடங்கி புதுப்புது கண்டுபிடிப்புகளை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

மனிதர்கள் இப்போது இயந்திரங்களைக் கொண்டாடத் தொடங்குகிறார்கள். கொண்டாட்டத்தை நிறுத்திக் கொள்ள யாருக்குத் தோன்றும் சொல்லுங்கள். தங்கள் கொண்டாட்டம் புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதில் இருப்பதை அறிந்து புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார்கள்.

இந்தப் பயணம் எங்கு சென்று முடியும் என்றுதானே கேட்கிறீர்கள். அதை நோக்கித்தான் இனி நாம் பயணிக்கப் போகிறோம்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...