1 Sept 2022

பொன்னியின் செல்வனும் ஜெயமோகனும்

பொன்னியின் செல்வனும் ஜெயமோகனும்

தமிழகத்தில் நாவல் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தியவர்களின் பட்டியலில் கல்கி கிருஷ்ணமூர்த்தி முதன்மையானவர். சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் என்று இரண்டு வகை நாவல்களிலும் அவர் உருவாக்கிய சாதனை மலைப்பானது.

நா. பார்த்தசாரதி சற்றேறக்குறைய கல்கியின் பாதையில் நடை போட்டவர் என்று சொல்லலாம். கல்கியின் சரித்திர நாவல்களைப் போலச் சாண்டில்யனின் நாவல்களும் தமிழர்களை அதிகம் சரித்திர நாவல்களைப் படிக்கத் தூண்டியது.

கல்கியின் நடை தனித்துவமானது. அந்த நடைதான் அவரது நாவல்களைத் தமிழர்களை விரும்பிப் படிக்கத் தூண்டியது. தமிழர்களைச் சுவாரசியமாகப் படிக்கத் தூண்டியவர் என்றும் கல்கியைச் சொல்லலாம்.

கல்கியின் நாவல்களில் ‘பொன்னியின் செல்வன்’ உண்டாக்கிய தாக்கம் பிரமாண்டமானது. அந்தப் பிரமாண்ட தாக்கம் எம்.ஜி.ஆரை உந்தியது. அவர் பொன்னியன் செல்வனைத் திரைப்படமாக்க முயன்றார். அடுத்ததாக கமல்ஹாசனும் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயன்றார்.

இரண்டு நடிகர்களைத் தொடர்ந்து ஓர் இயக்குநராக மணிரத்னமும் கல்கியின் பொன்னியின் செல்வனைச் சில பத்தாண்டுகளாகப் படமாக்க முயன்று வந்தார்.

மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியில் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாவது சாத்தியமாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக ஆகும் தகவல் வெளியானதும் அந்த நாவலின் விற்பனையும் அதிகரித்துள்ளது. எப்போதும் விற்பனையில் தனித்த வெளிச்சத்தில் உள்ள நாவல்தான் பொன்னியின் செல்வன் என்றாலும் அதன் திரைப்பட உருவாக்கம் விற்பனையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நாவல் திரையில் விரியும் நாளுக்காகப் பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்காதவர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். நாவலைப் படித்தவர்கள் பேராவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்நாவல் குறித்து மாறுபட்ட கருத்து உடையவர்தான் ஜெயமோகன். அவர் இந்த நாவலின் திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்தில் பங்கேற்று இருக்கிறார் என்பது வியப்புக்குரியது.

ஜெயமோகன் கல்கியின் எழுத்துகள் குறித்து ‘நாவல் கோட்பாடு’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “தமிழ் வாசகர்களில் பெரும்பாலானோர் கல்கி, சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன் ஆகியோரின் நீள்கதைகளைப் பெரும் நாவல்கள் என்று நம்பி விடுகின்றார்கள்” என்கிறார்.

மேலும் அவர், “கல்கியின் பெரும் நீள்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் தமிழ் உலகத்தை ஆட்டிப் படைத்த பல உணர்வுகள் இன்று மழுங்கி விட்டன என்பது வெளிப்படை.” என்றும் குறிப்பிடுகிறார்.

கால மாற்றமா அல்லது காலச் சூழ்நிலையா எது என்று சொல்லத் தெரியாவிட்டாலும் ஜெயமோகன் இன்று பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பங்களிக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...