30 Aug 2022

நல்லுணர்வு திரைப்படங்களும் அவற்றின் கதைக்களங்களும்

நல்லுணர்வு திரைப்படங்களும் அவற்றின் கதைக்களங்களும்

நல்லுணர்வு புத்தகங்கள், நல்லுணர்வு வாசகங்கள், நல்லுணர்வு நிகழ்வுகள் மற்றும் நல்லுணர்வு திரைப்படங்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதரின் நம்பிக்கையும் நல்லுணர்வை உருவாக்கும் ஏதோ ஒன்றோ நடந்து விடாத என்ற எதிர்பார்ப்பில்தான் அடங்கியிருக்கிறது.

தென்கச்சி சுவாமிநாதன் பேசியதும் எழுதியதும் நல்லுணர்வு வாசகங்களுக்கும் மற்றும் நல்லுணர்வு புத்தகங்களுக்குக்கும் நல்லதொரு சான்று.

முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு ஆய்வாளருமான அப்துல் கலாம் மாணவர்களோடு உரையாட ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அனைத்தும் நல்லுணர்வு நிகழ்வுகளுக்குச் சான்று.

தமிழ்த் திரையுலகில் விக்ரமன் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலானவை நல்லுணர்வு வகைத் திரைப்படங்கள். அவரது ‘வானத்தைப் போல’ நல்லுணர்வு திரைப்படத்துக்கு நல்லதொரு சான்று.

அண்மையில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை நல்லுணர்வு திரைப்படங்கள் என்று பலரும் கொண்டாடுகின்றனர்.

தாத்தாவும் பேரனும் உட்கார்ந்து மது அருந்துவது என்ன வகை நல்லுணர்வோ என்று நீங்கள் கேட்கலாம். கால மாற்றமும் தலைமுறை மாற்றமும் மது அருந்துவதை நல்லுணர்வின் பட்டியல் இணைத்து விட்டதோ என்னவோ. தாத்தா – பேரனுக்கிடையே இருக்கும் ஆழ்ந்த புரிதல் உணர்வை நல்லுணர்வாகக் காட்ட இயக்குநர் மேற்கொண்ட காட்சியமைப்பாகவும் அது இருக்கலாம்.

நல்லுணர்வு திரைப்படங்களில் கதையும் வலுவாக அமைந்திருக்க வேண்டும். வலுவான கதையில் குடும்பம் மற்றும் உறவுகளின் மேன்மையை வலியுறுத்தும் திரைப்படங்கள் நல்லுணர்வு திரைப்படங்களாக ஆகி விடும்.

நம்பிக்கையையும் நிறைவையும் தரும் குடும்ப மற்றும் சமூக உறவுகளைக் கொண்டும் நல்லுணர்வு திரைப்படங்களின் கதையைப் பின்ன முடியும். விசுவின் பெரும்பாலான திரைப்படங்களில் இத்தகைய கதைப் பின்னலைக் காண முடியும்.

இப்போதெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, மச்சான் என்று உறவுகளைக் கொண்டிருந்தாலே அந்தத் திரைப்படம் நல்லுணர்வு பட வகையில் சேர்ந்து விடுகிறது. கதை கூட இரண்டாம் பட்சம்தான்.

ஒரு வலுவான கதையோடு ஒரு நல்லுணர்வு திரைப்படம் அமைக்கப்படும் போது அது தரும் தாக்கம் காலம் கடந்து நிற்கும். பாசமலர் போன்ற திரைப்படங்கள் அந்த வகையைச் சார்ந்தவை.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் ஒரு நல்லுணர்வு இழையோடுவது உண்மையே. கதையைத்தான் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. விக்ரமன் போன்ற நல்லுணர்வு திரைப்பட இயக்குநர்கள் கையாண்ட உத்தியில் சற்றே மாறுபட்டு காலத்திற்கேற்ற ஒரு கதையைச் சொல்வதன்றி கதையளவில் அந்தத் திரைப்படம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...