ஆத்திசூடி சொல்லும் சர்க்கரை நோய்க்கான மருந்து
எளிமையாகப் படிக்க வேண்டும்
என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இரண்டிரண்டு அடிகள் என்று சொல்ல முடியாத அளவுக்கு
ஒன்றே முக்கால் அடிகளில் எழுதியிருக்கிறார்.
அதை அப்படியே சாரமாக்கி இன்னும்
எளிமையாக ஒவ்வோர் அடியாக அதுவும் இரண்டு அல்லது மூன்று சொற்களில் சொல்லியிருந்தால்
எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
எவ்வளவு எளிமையாக்கினாலும்
இன்னும் இன்னும் எளிமை என்று எதிர்நோக்குபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.
அவர்களுக்காகவே ஔவையார் ஆத்திசூடியை
எழுதியிருக்கிறார்.
திருக்குறளைப் போல 1330 குறட்பாக்கள்
வீதம் 2660 அடிகளைப் படிக்க வேண்டியதில்லை. 109 வரிகளில் ஆத்திசூடியை முடித்திருக்கிறார்
ஔவையார்.
வாழ்க்கையின் அனைத்து விதமான
அனுபவங்களையும் நுட்பங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் திருக்குறள்
ஒரு பெட்டகம். அந்தப் பெட்டகம் பெரிதென நினைப்பவர்களுக்கு ஆத்திசூடி கையடக்க பெட்டகம்.
ஆத்திசூடியினின்று வாழ்க்கைக்கான
அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பது என்னுடைய எண்ணம். வாழ்க்கையின் சகலவிதமான
சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அது முன் வைக்கிறது என்பது என்னுடைய
கணிப்பு.
நண்பர்களிடம் இப்படி இது
குறித்து ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் கேட்டார், “வாழ்க்கையின் அனைத்து
விதமான பிரச்சனைகளுக்குமான தீர்வு ஆத்திசூடியில் இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்?”
இப்படி ஒரு கேள்வி வரும்
என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழையும் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் எதைச்
சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆகவே அப்படித்தான்
சொல்கிறேன், அதிலென்ன சந்தேகம் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.
நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்
என்று நண்பர் இப்போது நான் நழுவிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பைத் தந்தார்.
ஒரு நண்பர் இவ்வளவு அழுத்தமாகக்
கேள்வி கேட்டு, நான் தப்பித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பத்தையும் தருவதால் எனக்குக்
கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஒருவேளை ஆத்திசூடியில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும்
இல்லாமல் இருக்குமோ என்று ஒரு கணம் தயக்கமாக இருந்தது.
அப்படி இருந்தால் அதையும்தான்
தெரிந்து கொள்வோமே என்ற நினைப்போடு, நானறிந்த வகையில் இருப்பதாக நினைக்கிறேன் என்று
சொன்னேன்.
நண்பருக்கு நல்லதொரு பிடி
கிடைத்து விட்ட சந்தோசத்தை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இப்படியெல்லாம் மொன்னையாகக்
சொல்லக் கூடாது என்று ஒரு விதமான எகத்தாள மனநிலைக்கு நண்பர் சென்று விட்டார்.
அத்துடன் நில்லாமல், நீங்கள்
நினைப்பது போலலெல்லாம் வாழ்க்கையின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே நூல் தீர்வு
சொல்லி விட முடியாது, ஒரு சில பிரச்சனைகளுக்கு அதில் தீர்வுகள் இருக்கலாம் என்பது உண்மையாக
இருக்கலாம். உங்களைப் போன்ற சிலர் இப்படி உயர்வு
நவிற்சியில் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசி விடுகிறீர்கள் என்றார் என்னைப்
பார்த்து ஒரு வலுவான குற்றச்சாட்டை முன் வைக்கும் தொனியில்.
நான் வசமாக மாட்டிக் கொண்டது
போலத்தான் எனக்குப் பட்டது. வலுவான ஆதாரம் இல்லாமல் அந்த நண்பர் பேசக் கூடியவர் அல்ல.
ஆகவே இதில் தெரிந்து கொள்ளக் கூடிய ஏதோ ஒன்று இருப்பதாக எனக்குப் புலப்பட்டது.
பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தம்
இருக்க முடியாது. உண்மையை நோக்கி நகர்வதுதான் பொருள் பொதிந்ததாக இருக்க முடியும் என்று
நிலையை நோக்கி நகர்வது சயிராகப் பட்டது எனக்கு.
நீங்கள் எதிர்பார்க்கும்
எந்தப் பிரச்சனைக்கு ஆத்திசூடியில் தீர்வு இல்லை என்று சொன்னால் உங்கள் கூற்றில் உள்ள
உண்மையைப் பரிசீலிக்கலாம் என்றேன் நான்.
இதைத்தான், இந்த நேரிடையான
எதிர்கொள்ளலைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் என்று துவங்கிய நண்பர் ஒரு கேள்வி
கேட்டார், சர்க்கரை நோய்க்கு உங்கள் ஆத்திசூடியில் தீர்வு இருக்கிறதா என்று.
நண்பரின் கேள்வியின் உட்பொதிவு
எனக்குப் புரியத் துவங்கியது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர் அவர். அவர் இந்தக் கேள்வியைப்
பாசாங்கு இல்லாமல்தான் கேட்டிருக்கிறார். தன்னையே மையமாகக் கொண்டு தன்னிலிருந்துதான்
இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது. இப்போது அவரது கேள்விக்குப்
பதில் சொல்லும் பாதை புலப்படத் தொடங்கியது.
ஏன் இல்லாமல்? இருக்கிறது
என்றேன் நான்.
சும்மா சமாளிக்கக் கூடாது.
சர்க்கரை நோய் சில பத்தாண்டுகளாகப் பெரிய அளவில் வெளியே தெரிந்து இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட
பிறகு தீர்வு காணப்பட்ட ஒரு நோய். அதற்கு எப்படி ஓய் ஆத்திசூடியில் மருந்து சொல்லியிருக்க
முடியும்? என்றார் நண்பர் என்னை வலுவாகப் பிடித்த விட்ட பெருமிதத்தில்.
மருந்தென்றால் ஆங்கில மருத்துவத்தில்
சொல்லப்படும் மருந்துகளை ஔவையார் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது
நண்பரே. சர்க்கரை நோயின் அடிப்படை என்ன? அதைத் தடுக்கும் முறையின் சாரம் என்ன? என்பதற்கேற்ப
ஒரு தீர்வை ஔவையார் சொல்லியிருக்கிறார். அதுதான் ‘மீதூண் விரும்பேல்’ என்ற ஆத்திசூடியின்
வரி என்றேன் நான்.
நண்பர் இப்படி ஒரு பதிலைச்
சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. தீடீரென்று எனக்குச் சட்டென்று ஆத்திசூடியின் அந்த
வரியைச் சொல்ல வேண்டும் என்று எப்படித் தோன்றியது என்றும் புரியவில்லை. நண்பரும் ஒரு
வகையில் மீதூண் மேல் விருப்பம் கொண்டவர்தான்.
நண்பர் இப்போது கொஞ்சம் ஆச்சரியமாகவும்
அதிர்ச்சியாகவும் என்னைப் பார்த்தார். நான் சட்டென்று அப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்க்காத
போதும் அது அவருக்குச் சரியான தீர்வாகத்தான் பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவர் முகத்தில் தன் சந்தேகம் தவறுதான் என்பதற்கான சுணக்கம் தெரிந்தது.
மருந்தாக ஒரு தீர்வைச் சொல்வதை
விட அந்த மருந்தே தேவைப்படாத அளவுக்கு ஒரு தீர்வைச் சொல்வதுதானே சாசுவதமாக இருக்கும்.
அப்படிப் பார்த்தால் ஆத்திசூடியில் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் தேவையான பல சாசுவதமான
முடிவுகள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
மிக மிக ஆதாரமாக திருக்குறள்,
ஆத்திசூடி போன்ற அறநூல்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் சொல்கின்றன என்றே சொல்லலாம்
என்று நினைக்கிறேன்.
ஆத்திசூடியின் பல வரிகள்
திருக்குறளைச் சுண்ட காய்ச்சியது போன்ற பிழிவாகவும் வாழ்க்கையின் தீர்வாகவும் இருப்பதை
ஆத்திசூடியைப் பன்முறை படிக்க படிக்க உணரலாம்.
வேறு ஏதேனும் வாழ்வியல் சிக்கலுக்கான
தீர்வுகள் ஆத்திசூடியில் இல்லாமல் இருக்கிறதா என்பதை நண்பர்கள் மேற்கொண்டு கேட்கும்
கேள்விகள் மூலமாக அறியலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் நண்பர்கள் சந்தேகப்படும் அளவுக்குத்
தீர்வுகள் எதுவும் இல்லாத வகையில் ஆத்திசூடி இருக்காது என்று நம்புகிறேன். “அறம் செய
விரும்பு” என்று துவங்கும் இடத்திலேயே ஆத்திசூடி ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் தேவையான
தீர்வைச் சொல்லி விட்டதாகவே நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment