யாருக்கும் தெரியாமல் கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை
வாழ்க்கையின் சுழற்சி எப்போதும்
விசித்திரமாக இருக்கிறது. எங்கே துவங்கினோமோ அங்கே திரும்பி வர வேண்டியிருக்கிறது.
எதை வேண்டாமென நிராகரித்து வேறு திசையில் பயணப்பட்டோமோ அதற்கு எதிர் திசையிலேயே மீண்டும்
பயணப்பட்டுப் புறப்பட்டு இடத்தை நோக்கி வந்து சேர வேண்டியிருக்கிறது.
இப்போதும் அப்படிச் சில குரல்கள்
கேட்கின்றன. தான் பட்ட கஷ்டம் தன்னோடு போகட்டும் என்கிறார்கள் விவசாயக் குடும்பத்தில்
பிறந்த தகப்பன்மார்கள். விவசாயம் செய்வதை அவர்கள் கஷ்டமாகப் பார்க்கிறார்கள். சிரமமாக
நினைக்கிறார்கள். அதை ஒரு துயரமாகக் கொள்கிறார்கள்.
விவசாயம் யாருக்கும் எப்போதும்
கஷ்டம் கொடுத்தாக எனக்குத் தெரியவில்லை. இறங்கி உழைக்கும் அளவுக்கு நிச்சயமான வருமானத்தைக்
கொடுக்கும் ஒரே தொழில் இப்போதும் அது ஒன்றுதான். அதுவும் சர்வ நிச்சயமான வருமானம்.
ஒருவரின் ஆசைக்கும் எதிர்பார்ப்புக்கும்
ஏற்ற வருமானத்தை விவசாயம் கொடுக்கத் தவறியிருக்கலாம். ஒருவரைப் பட்டினி போடும் அளவுக்கு
மோசமான வருமானத்தை அது எப்போதும் தந்ததில்லை.
ஒரு முறை வெள்ளத்தால் விளைச்சல்
பாதிக்கப்படும் வயல் அடுத்த முறை விளைவதைப் பார்த்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
இழப்புக்கும் சேர்த்தாற் போல் விளைவித்துக் கொடுத்து விடும். ஆகவே விவசாயத்தில் இழப்பு
என்பதில்லை.
விவசாயத்தில் இழப்பு என்பது
வியாபார நோக்கிற்கு கிடைக்கின்ற அடி. ஏனென்றால் விவசாயம் என்பது வியாபார நெருக்கடிக்கு
ஏற்ற ஒரு தொழில் கிடையாது. இது மக்களுக்கு உணவிடுகின்றன, உலகின் பசி போக்குகின்ற ஒரு
வாழ்க்கை முறை.
விவசாயத்தில் உங்கள் பசியைத்
தீர்த்துக் கொள்ளலாம். நீங்கள் விளைவிக்கும் உணவால் இன்னும் சிலரின் பசியைத் தீர்க்கலாம்.
அப்படிப் பசி தீர்ப்பதால் உங்கள் அடிப்படைத் தேவைக்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதைத் தாண்டி உபரி வருமானத்தை நீங்கள் எதிர்பார்த்தால் உங்களுக்கு விவசாயம் ஏற்றதல்ல.
நீங்கள் விவசாயத்தை விட்டு டாட்டா காட்டி விட்டுப் போய் விடலாம்.
எப்போதும் விவசாயம் எளியோர்க்கான
தொழிலாக உள்ளது. எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவோர்க்கு விவசாயம் தரும் மனநிறைவும்
மனதிருப்தியும் அலாதியானது.
வீட்டைச் சுற்றி ஒரு சின்ன
தோட்டம், நெற்பயிர் பயிரிடுவதற்கு கொஞ்சம் வயல் இருந்தால் போதும். அதற்கான உழைப்பை
உங்கள் ஒருவரால் மற்றும் உங்கள் குடும்பத்தினரால் கொடுக்க முடியும். அதிலிருந்து கிடைக்கும்
விளைபொருள் உங்கள் குடும்பத்தின் பசி தீர்க்க போதுமானது. கொஞ்சம் உபரியாகக் கிடைக்கும்
விளைபொருளை விற்றால் அது உங்கள் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளைத் தீர்க்கப் போதுமானது.
நீங்கள் எளிமையையும் அதன்
மூலம் கிடைக்கும் மன நிறைவையும் விரும்பவில்லை என்றால் நீங்கள் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ள முடியாது.
கடந்த காலத்தின் தகப்பன்மார்கள்
விவசாயம் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்கள். அதில் சம்பாத்தியம் இல்லை என்றார்கள். அவர்கள்
தங்கள் பிள்ளைகளைப் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்க வைக்க விரும்பினார்கள்.
நிறைய சம்பாத்தியம் அவர்களின் கஷ்டங்களைத் தீர்த்து விடும், சிரமங்களைப் போக்கி விடும்
என்று நம்பினார்கள்.
அந்தத் தகப்பன்மார்கள் எவ்வளவு
தவறான நம்பிக்கையில் தங்கள் தலைமுறையைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை இப்போது காலம்
உணர்த்திக் கொண்டிருக்கிறது. சம்பாத்தியமே பிரதானம் எனப் போன எத்தனையோ பொறியாளர்கள்
இன்று விவாசயத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
புறப்பட்ட இடத்துக்குத் திரும்பி
வந்துதான் ஆக வேண்டும். உபரியான வருமானம் ஒரு போதும் கஷ்டத்தைத் தீர்த்து விடாது. நிறைவான
வாழ்க்கை ஒன்றே கஷ்டத்திற்கான மருந்து. அது விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையில் இருக்கிறது.
அதற்காக விவாசயத்திற்குத்
திரும்புங்கள் என்றெல்லாம் கூக்குரல் இடாதீர்கள். நீங்கள் கூக்குரல் இடாவிட்டாலும்
சரி, இட்டாலும் சரி அங்குதான் திரும்பியாக வேண்டும். இந்த வட்டமான வாழ்க்கை முறை அப்படித்தான்
யாருக்கும் தெரியாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment