மெதுவாப் போங்க!
இரு சக்கர வாகனத்தில் இருபத்தைந்து கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவர்களின்
வகையறாக்களில் நானும் இருக்கிறேன். முப்பதில் போனால் அதுவே வேகம் எனக்கு. இந்த வேகம்
வண்டி ஓட்டுபவர்களைப் பாதிப்பதில்லை. பின்னால் உட்கார்ந்து வருபவர்களுக்கு ஏக ஏரிச்சலை
உண்டு பண்ணி விடுகிறது.
இதனாலேயே வண்டியின் பின்னால் யாரையும் உட்கார வைத்து அழைத்தச்
செல்வதில்லை நான். மகள் மட்டும் விதிவிலக்கு. அப்பாக்கள் என்ன வேகத்தில் சென்றாலும்
அதை விரும்ப மகள்களால் மட்டும்தான் முடியும்.
மனைவிக்கு நான் செல்லும் இந்த வேகம் எப்போதும் பிடிப்பதில்லை.
உங்களோடு வண்டியில் வருவதற்கு நடந்தே சென்று விடலாம் என்பாள். நான் செல்லும் வேகத்தில்
வெறுத்துப் போய் அவளே வண்டி ஓட்ட கற்றுக் கொண்டு புது வண்டியொன்றை வாங்கிக் கொண்டு
இப்போது அதில்தான் சென்று கொண்டிருக்கிறாள். இதனால் நான் விருப்பப்பட்ட வேகத்தில் செல்ல
முடிகிறது.
சில நாட்களில் எங்கேயாவது விஷேசங்களுக்குச் செல்ல நேரிடும் போது
பின்னால் உட்கார்ந்து வரும் நிலைமை அவளுக்கு ஏற்பட்டு விடும். வண்டியில் ஏறியதிலிருந்து
இறங்கும் வரை என் வேகத்தைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டே வருவாள்.
சில நேரங்களில் அவளை ஓட்டுமாறும் நான் பின்னால் உட்கார்ந்து
வருகிறேன் என்றும் கூறிப் பார்த்து விட்டேன். அதற்கு அவள் இணங்குவதில்லை. நீங்கள் ஓட்டினால்தான்
பின்னால் உட்கார்ந்து கொண்டு உங்களை நான் ஓட்ட முடியும் என்பாள். ஓட்டுவது என்பது வண்டியை
ஓட்டுவது என்ற பொருளோடு ஒருவரைக் கிண்டல் செய்வதும் என்ற பொருளில் இந்தப் பகுதியில்
வழங்கப்படுவதால் அவள் அப்படிக் கூறுவாள்.
நேற்று நல்ல மலையில் நானும் அவளும் ஒரு நெரும்பயணம் மேற்கொள்ள
வேண்டியதாயிற்று. நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுங்கள் என்று அவள் எவ்வளவோ சொல்லிப்
பார்த்தாள். நல்ல நாளிலேயே முப்பதைத் தாண்டாத நான் மழை நாளில் நாற்பதில் போவதெல்லாம்
நடக்கின்ற காரியமா?
நாற்பதில் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே நான் முப்பதில் போய்க்
கொண்டிருந்தேன். சில இடங்களில் அந்த வேகத்தையும் குறைத்து இருபதிலும் போய்க் கொண்டிருந்தேன்.
அந்த நேரம் பார்த்து ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் எங்களை முந்திச் சென்று
கொண்டிருந்தாள்.
என் மனைவிக்குக் கோபமென்றால் கோபம், மழையில் நனைந்தபடி கொதிக்க
ஆரம்பித்து விட்டாள். “உங்களை முந்திப் போகுது பாருங்க அந்தப் பொண்ணு. அது போறதுதான்
நாப்பது. நீங்க போறது இருபது கூட தேறாது.” என்றாள் கோபமாக.
“வேகமா போறதுல என்ன இருக்கு. மெதுவா போறதுல நெறைய நல்லது இருக்கு.
இந்த மழையில வேகமாப் போய் வண்டி வழுக்குனா வண்டி மேல நாம்ம இருக்க மாட்டோம். நம்ம மேலத்தாம்
வண்டி இருக்கும்.” என்றேன் நான்.
“பேசுறதுல இருக்குற வேகத்தை வண்டியை ஓட்டுறதுல காட்டலாம்.” என்றாள்
முகத்தைச் சுளித்துக் கொண்டு.
கொஞ்சம் தூரம் போயிருப்போம். எங்களை முந்திச் சென்று கொண்டிருந்த
பெண் சாலையோரத்தில் விழுந்து அவள் மேல் வண்டி கிடந்தது. நான்கைந்து பேர் கொட்டும் மழையில்
அவரவர் வண்டிகளை நிறுத்தி விட்டு வண்டியைத் தூக்கி அந்தப் பெண்ணையும் தூக்கிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்ணை ஒருவிதமாக ஆசுவாசப்படுத்தி பக்கத்தில் இருந்த
வீட்டில் உட்கார வைத்து விட்டுக் கொஞ்ச நேரம் கழித்துச் செல்லுமாறு சொல்லி விட்டு அவரவர்
பயணத்தைத் துவக்க ஆரம்பித்தோம்.
“நல்ல வேளைங்க. நாம்ம மெதுவாப் போனோம்.” என்றாள் மனைவி இப்போது.
நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
“என்னங்க வேகமாப் போறதுப் போல தெரியுது. கொஞ்சம் மெதுவாப் போங்க.”
என்றாள் மனைவி.
நான் போய்க் கொண்டிருந்த வேகம் இருபது கூட இருக்காது. இருந்தாலும்
சந்தேகத்திற்கு ஸ்பீடோமீட்டரைப் பார்த்தேன். சரியாக இருபது கிலோ மீட்டர் வேகத்தைத்தான்
காட்டியது.
*****
No comments:
Post a Comment