9 Apr 2022

பேனாவில் கண்டடையும் ரகசியங்கள்

பேனாவில் கண்டடையும் ரகசியங்கள்

            தற்போது ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சொற்களோடு ஆங்கிலச் சொற்கள் கலந்து கொண்டிருந்த காலத்தில் நான் பள்ளி பயின்று கொண்டிருந்தேன். தமிழாசிரியர்களுள் சிலர் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.

            பென்சிலைக் கரிக்கோல் என்றும், ஸ்கேலை அளவுகோல் என்றும், ரப்பரை அழிப்பான் என்றும், பேனாவைத் தூவல் என்றும் தமிழாசிரியர்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இங்க் பேனா, பால் பாய்ண்ட் பேனா என்றிருந்த இருவகைப் பேனாக்களை அவர்கள் மையூற்றுப் பேனா, பந்து முனைப் பேனா எனப் பிரித்துத் தமிழ்ப்படுத்தினர்.

            நாம் பேசப் போகின்ற விசயம் இங்க் பேனாவைப் பற்றித்தான் என்றாலும் அதனோடு தமிழ் – ஆங்கில சொல் கலப்பு வரலாறும் பின்னிப் பிணைந்து விடுகிறது.

            நீங்கள் ஒரு இங்க் பேனாவைப் பயன்படுத்தினால் அது உங்களுக்கேயான இங்க் பேனா. அதை நீங்கள் இன்னொருவரிடம் கொடுத்து விடக் கூடாது. ஏனென்றால் நீங்கள் எழுதும் வாகிற்கு ஏற்ப பேனாவின் நிப் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும். அதை இன்னொருவர் வாங்கி எழுதி உங்களிடம் கொடுத்தால் நீங்கள் எழுதும் போது நிப் பிரச்சனை செய்யும். நீங்கள் எழுதிய வாகிற்கு ஏற்ப இருந்த நிப் இன்னொரு வாகிற்கு மாறும் போது கிரீச்சிடும். சமயத்தில் நிப்பைச் சமாதானம் செய்யும் விதமாகக் கொஞ்சம் அழுத்திப் பிடித்து எழுதினால் தாளைக் கிழித்து விடும்.

            ஆசிரியர்கள் பேனா கொடுக்கும் விசயத்தில் ரொம்ப கவனமாக இருப்பார்கள். பேனாவைக் கொடுப்பதும் பெண்டாட்டியைக் கொடுப்பதும் ஒன்று என்கிற அளவிற்குப் பேசிக் கொள்வார்கள்.

            ஓர் இங்க் பேனா உங்களுக்குப் பழக்கமாகச் சில நாட்கள் பிடிக்கும். பழக்கமாகி விட்டால் அந்த இங்க் பேனா இருந்தால்தான் உங்களுக்கு எழுத வரும். நீங்கள் வைத்திருக்கும் அதே கம்பெனியின் புதிய இங்க் பேனாவை வாங்கினாலும் உங்களுக்குத் தோதாக நிப் மாற சில நாட்கள் ஆகும். அதன் பிறகு அந்தப் பேனா உங்களுக்கே உங்களுக்கு உரிய பேனாவாக மாறி விடுவதை நீங்கள் பார்க்க முடியும்.

            ஒரு இங்க் பேனாவைப் பழக்கப்படுத்துவது ஒரு குதிரையைப் பழக்கப்படுத்துவது போல்தான். பழக்கப்படுத்தும் வரை கொஞ்சம் சிரமமாகத் தெரியும். பழக்கமாகி விட்டால் நீங்கள் அந்தப் பேனாவை விட முடியாது என்று சொல்வதை விட அந்தப் பேனா உங்களை விடாது. அதாவது பழகி விட்ட குதிரை எசமானை விடாததைப் போலத்தான். அலெக்ஸாண்டர் பழக்கி வைத்திருந்து பியூசிபேலஸ் என்ற குதிரையைப் போல என்றும் சொல்லலாம்.

            உங்களுக்குப் பழக்கமாகி விட்ட பின் இங்க் பேனா உங்கள் மனமறிந்து நடந்து கொள்ளும் என்று சொன்னால் உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். இங்க் பேனாக்களோடு பழகியவர்கள் இதன் பின்னாலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.

            நீங்கள் நினைப்பது போல எல்லாம் எழுத நீங்கள் பழகிய இங்க் பேனா துணை செய்யும். நீங்கள் எதை நினைத்தாலும் உங்களால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்கள் பேனா உங்களுக்குக் கொடுக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது இங்க் பேனா குறித்த மிகையான மதிப்பீடாகத் தோன்றினாலும் இங்க் பேனா தரும் அலாதியான அனுபவம் அப்படித்தான் இருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நீங்களும் உங்கள் பேனாவும் அந்த அளவுக்கு அந்நியோன்யம் ஆகி விடுவீர்கள். நாட்கள் ஆக ஆக உங்களுக்கு ஒரு ரகசியம் புரிய வரும். நீங்கள் எழுதவில்லை, உங்கள் பேனாதான் உங்களுக்காக எழுதுகிறது என்ற ரகசியத்தை நீங்கள் கண்டடைவீர்கள்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...