3 Feb 2022

மௌனத்துடன் பேசுதல்

மௌனத்துடன் பேசுதல்

            மனிதர்களைப் பேச்சு மிருகம் எனலாம். மிருகங்களும் பேசுகின்றன. அவற்றின் பேச்சைக் கத்தொலிகள் என்பர். அந்தப் பேச்சுகள் தேவை கருதியவை. அன்பை வெளிக்காட்ட நிகழ்பவை. மனிதர்களின் மிருகங்களின் பேச்சை விட விஸ்தாரமானவை. அவசியமின்றியும் பேசலாம். அநாவசியமாகவும் பேசிக் கொண்டிருக்கலாம். வெட்டிப்பேச்சு பேசுபவர்களும் திண்ணைப் பேச்சு பேசுபவர்களும் அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

            மனிதர்களாகிய நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். காலம் முழுவதும் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். அதிலும் வெட்டித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வ மிகுதியோடு இருக்கிறோம். வெட்டித்தனமாகப் பேசுவேன் என்பதில் பிடிவாதமாகவும் இருக்கிறோம்.

            மனிதர்களுக்கு இருக்கும் அறிவு அவர்களை விதவிதமாகப் பேசச் செய்கிறது. மனிதர்களுக்குப் பேச்சு ஒரு வடிகால். மனிதர்கள் தங்கள் மனதைப் பேச்சின் மூலமாகத்தான் வடியச் செய்கிறார்கள். பேசுவதின் மூலமாக அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறார்கள். பேசுவதில் இரு ஒரு வகை நன்மை.

            மனிதர்களுக்கு நேரக் கூடிய துன்பங்களில் பெருமபான்மை அவர்களின் பேச்சினால்தான் நிகழ்கிறது. தவறான ஒரு சொல், மனதைக் காயப்படுத்தும் ஒரு சொல் பிரச்சனைக்கான தீப்பொறி. ஒரு பெருங்காட்டை அழிக்க ஒரு சிறு பொறி போதும் அல்லவா! அப்படியான தீப்பொறிதான் தவறான ஒரு வார்த்தை. மேலும் அது ஒரு குடம் நீரில் விழுந்து விட்ட ஒரு துளி விஷம் போல. மொத்த நிலைமையையும் அது மாற்றி விடும். பேசுவதில் இருக்கும் சங்கடம் இது.

            நல்லவிதமாகப் பேச நினைப்பவர்களுக்கு மௌனம் ஒரு சிறந்த மார்க்கம். மௌனம் பேச்சின் பலவிதமான சாத்தியக்கூறுகளைத் திறந்து காட்டும். பேசிக் கொண்டிருப்பது ஒரு வழிப் பாதை என்றால் மௌனம் பல வழிப் பாதைகளைத் திறந்து காட்டும் திறவுகோல். மௌனத்தைப் பின்தொடர்ந்து பேசத் தொடங்கும் போது சிறந்த வார்த்தைகளைத் தேர்வு செய்து மேன்மையான பேச்சை வழங்க முடியும்.

            பேசத் தொடங்குவதற்கு முன் மௌனமாகச் சூழ்நிலைகளை உற்றுக் கவனியுங்கள். மற்றவர்கள் பேசுவது அனைத்தையும் அமைதியாகச் செவி மடுங்கள். அந்த மௌனம் உங்களுக்கு எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுத் தரும். எப்படிப்பட்ட சொற்களைத் தேர்வு செய்து பேச வேண்டும் என்பதைச் சொல்லித் தரும்.

            புயலுக்கு முன் அமைதி நிலவுகிறது. பேச்சிற்கு முன் கொள்ளும் மௌனம் பேசத் தொடங்கும் போது மிகச் சிறந்த வீச்சைத் தரும். சொற்களுக்கு இடையே தரும் இடைவெளி சொல்லின் ஆழப்படுத்துவதைப் போலத்தான் பேசுவதற்கு முன் கொள்ளும் மௌனம் புரிதலை ஆழப்படுத்துகிறது.

            வித்துகள் தோன்றியவுடன் முளைத்தலை நோக்கிச் செல்வதில்லை. விதை உறங்கும் காலத்தைக் கடந்த பின்தான் முளைக்கத் தொடங்குகின்றன. சிறந்த செயல்கள் அனைத்தும் ஆழ்ந்த புரிதலுக்கான காலத்தை எடுத்துக் கொண்ட பின்தான் தொடங்குகின்றன. பேச்சிற்கான ஆழ்ந்த புரிதலுக்கு மௌனம் எப்போதும் துணை செய்யும்.

            மௌனத்தின் போது உறங்கிக் கொண்டிருக்கும் நல்ல விசயங்கள் விழித்தெழுகின்றன. அவை உங்கள் பேச்சுக்கு வலு சேர்க்கும். நன்மைக்கு துணை நிற்கும். பேச்சுக்கிடையே அவ்வபோது மௌனத்தைக் கடைபிடியுங்கள். அந்த மௌனம் அதுவரை நீங்கள் நிகழ்த்திய பேச்சுக்குப் புதுப்புது பரிமாணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். இதனை மௌனத்துடன் பேசுதல் எனக் குறிப்பிடலாம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...