2 Feb 2022

குற்ற உணர்வு உண்டாக்கும் பிரச்சனைகள்

குற்ற உணர்வு உண்டாக்கும் பிரச்சனைகள்

            உளவியல் ரீதியாக வீழ்த்தும் சூட்சுமங்கள் உலகில் அநேகம். நாங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற உணர்வை உண்டாக்குவது கூட உளவியல் ரீதியாக வீழ்த்தும் சூட்சமம்தான். ஒன்றை உயர்த்தி இன்னொன்றைத் தாழ்த்தும் இந்நுட்பம் வரலாறு நெடுகிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் சாதி முறைகள் இதற்கு நல்ல உதாரணம்.

            நவீன காலங்களில் உளவியல் தாக்குதல்கள் குற்ற உணர்வை உண்டாக்குவதை மையமாகக் கொண்டுள்ளன. சரி – தவறு என்ற நோக்குதான் குற்ற உணர்வு உண்டாவதன் பின்னணி.

            சரி – தவறு என்பதற்கான பின்புலங்கள் ஆராயப்படாமல் இப்படி இருந்தால் சரி, இப்படி இருந்தால் தவறு என்ற அளவுகோல்கள் கண்மூடித்தனமாகக் கொள்ளப்படும் போது ஒருவரைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வது எளிதாகி விடுகிறது.

            பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணம்தான் சரி, பிள்ளைகள் அவர்களாகச் செய்து கொள்ளும் திருமணம் தவறு என்ற அளவுகோலைக் கறாராகப் பின்பற்றும் சமூகம் காதல் செய்வது தவறானது என்ற குற்ற உணர்வை எளிதாகப் பரப்பி விடும். காதல் திருமணம் தவறானது என்ற உணர்வு மனதில் ஆழமாக வேரூன்றும் போது அது ஓர் அடிப்படைவாத உணர்வை ஆழ்மனதுக்குள் விதைத்து விடும்.

            அடிப்படைவாத உணர்வுக்குள் ஆட்பட்டுக் கொண்டவர்களால் அதற்கு மாறான உணர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றுக்கருத்துகளை அவர்களால் அனுமதிக்க முடியாது. அவர்களது அடிப்படைவாதம் அவர்களுக்குள் ஒரு மிரட்டல் சக்தியாக உருப்பெற்று அவர்களை ஆட்டிப் படைக்கும். அடிப்படைவாதத்தை மீறுவது அவர்களை குற்ற உணர்வுக்குள் தள்ளும். குற்ற உணர்வுக்குப் பயந்து அவர்கள் அடிப்படைவாதத்தை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள்.

நாளடைவில் குற்ற உணர்வுக்கு அஞ்சி அடிப்படைவாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துடிப்பாக இருப்பார்கள். தங்களைக் குற்ற உணர்விலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் அடிப்படைவாதத்தைக் காத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் கொலை செய்வதையும் நியாயம் செய்வார்கள். தங்களது மன உணர்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உயிர்நேயம் என்ற உயர்ந்த தன்மையை மறுதலிக்கும் நிலை வரை அவர்கள் செல்வார்கள்.

காலம் காலமாக சமூகத்தால் பதிய வைக்கப்பட்டிருக்கும் பல கூட்டு உணர்வுகள் குற்ற உணர்வைத் தோற்றுவிப்பதில் முன்னணி பங்கு வகிக்கின்றன. தவறாக எதுவும் நடந்து விடக் கூடாது, தவறாக எதுவும் செய்து விடக் கூடாது என்ற அடிப்படை பய உணர்வும் குற்ற உணர்வுகளுக்கு முக்கிய காரணம்.

தவறே செய்யக் கூடாது என்ற உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கு குற்ற உணர்வும் அதிகமாகத்தான் இருக்கும். மனதளவில் சுதந்திரமாக இருக்க முடியாதவர்கள், மனதை அதிகமாகக் கட்டுப்படுத்த முனைபவர்கள் குற்ற உணர்வால் அதிகம் அவதிப்படுவார்கள்.

தவறு நடந்து விடக் கூடாது என்பதற்காக குற்ற உணர்வைக் காப்பாகப் பயன்படுத்த நினைப்பவர்கள் காலப்போக்கில் குற்ற உணர்வு தரும் நெருருக்கடியால் தவறு செய்பவர்களாக மாறி விடுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை விட குற்ற உணர்வில் கழித்த நாட்கள் அதிகமாக இருக்கும்.

அறிவும் உணர்வும் மனிதர்களை மாறி மாறி இயக்குகின்றன. அறிவால் உணர்வையும் உணர்வால் அறிவையும் மாறி மாறி சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தாய்வை அவ்வபோது மனிதர்கள் செய்து கொண்டு இருக்க வேண்டும். சரியான நிலைப்பாடு என்பது அவ்வபோது மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வதே. இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எதையும் பகுத்தாய்ந்து ஏற்றுக் கொள்வதன் அவசியத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மன உணர்வுகளால் கெட்டிப்படும் போது நாம் பகுத்தாய மறுக்கிறோம். நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க தயங்குகிறோம். மன உணர்வுகளுக்காக வாழ்கிறோமோ, வாழ்க்கைக்கேற்ப மன உணர்வுகளை ஏற்ற அளவில் பயன்படுத்தி வாழ்கிறோமோ என்பதற்கு விடை தெரிந்தால் போதும் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரிந்து விடும்.

இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்களே, ஒவ்வொன்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையே என்பதை அறிந்து கொள்ளும் போது ஒருவர் குற்ற உணர்வு கொள்ள மாட்டார், பிறரையும் குற்ற உணர்வு கொள்ள வைக்க மாட்டார்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...