ஓடுபாதையின் முடிவுகள்
ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்கப்படுகிறது
என்றேனும் ஒரு நாள் அவநம்பிக்கைகளைத்
தகர்த்தபடி
அபூர்வமாக நடப்பவைகள் நடக்கக்
கூடும்
நம்பிக்கையோடு காத்திருப்பது
மட்டுமே
அவரவர் கடமைகளில் ஒன்று
அவநம்பிக்கைகளை அள்ளி வீசிச்
செல்வது
காலதேவனின் பல வேலைகளில்
ஒன்று
வடக்குத் தெற்காய் எதிரெதிராய்
விலகும்
இரு துருவங்கள் மோதிக் கொள்ளும்
அபூர்வங்கள் நிகழும் போது
இப்படியும் நிகழுமா எனவா
அங்கலாய்ப்பது
அப்படி நிகழ்ந்ததை அதிசயம்
என்றெண்ணி
வேடிக்கை பார்த்திட கண்கள்
கோடி வேண்டி
பிரார்த்தனை புரிந்திடல்
வேண்டும்
விலகிச் செல்லும் சாலைகளில்
ஒட்டிச் செல்லலும்
ஒட்டிச் செல்லும் சாலைகளில்
ஒட்டிச் செல்லலும்
தேவைப்படும் பொழுதுகளில்
விதியை விலக்கி இயக்கிக்
கொள்தலும்
காலத்தின் முடிச்சில் பதுங்கியிருக்கும்
சூக்குமங்கள்
எதற்காக யார் என்ன செய்ய
முடியும்
அவரவர் ஓடுபாதையில் அவரவர்
ஓடிக் கொண்டிருப்பதும்
ஒருவர் பாதையில் இன்னொருவர்
முட்டிக் கொள்வதும்
பாதைகளைத் தூர்க்கும் நெரிசல்களில்
விரைவதும்
விதிகளுக்கு இருக்கும் விலக்குகளையும்
விலக்குகளில் ஒளிந்திருக்கும்
விதிகளையும் அறிவதற்குள்
பிறவியின் ஓர் ஓடுபாதை ஒரு
முடிவுக்கு வந்திருக்கும்
*****
No comments:
Post a Comment