1 Feb 2022

உள்ளார்ந்த சக்திகளை உற்றுப் பார்ப்பது எப்படி?

உள்ளார்ந்த சக்திகளை உற்றுப் பார்ப்பது எப்படி?

            நாம் நேர்மறையாகப் பார்த்தால் போதும். எதிர்மறையாகப் பார்ப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எதிர்மறையாகப் பார்ப்பது எப்படி என்பதை அவர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த உலகம் நம்மிடமிருந்து நேர்மறையாகப் பார்ப்பது எப்படி என்பதை மட்டும் தெரிந்து கொள்ளட்டும்.

***

            சில நேரங்களில் சிறிய மீன்கள் பெரிய மீன்களை விழுங்கிக் கொண்டிருக்கும். சிறு சிறு வேலைகளில் கவனம்செலுத்திக் கொண்டிருக்கும் போது பெரிய வேலைகள் எல்லாம் தடைபட்டுப் போய் நின்று கொண்டிருக்கும். அது போன்ற நேரங்களில் பெரிய வேலைகளை முதலில் துவங்கி அந்த வேலைகளில் கிடைக்கின்ற இடைவெளிகளில் சிறிய சிறிய வேலைகளைச் செய்து முடிக்கலாம். சிறிய வேலைகளில் கிடைக்கின்ற இடைவெளியில் பெரிய வேலைகளை முடிக்க முடியாது. ஆகவே பெரிய பெரிய வேலைகளுக்கு இடையே சிறிய சிறிய வேலைகளை முடித்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

***

            உங்களால் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்று தோன்றினால் அதற்காகச் சோர்ந்து போக வேண்டியதில்லை. சாதிக்கும் கூட்டம் ஒன்று இருக்கும். அந்தக் கூட்டத்தோடு சென்று சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். திருவிழாவுக்குச் செல்ல வழி தெரியவில்லை என்றால் திருவிழாவுக்குச் செல்லும் கூட்டத்தோடு சென்று சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். அந்தக் கூட்டமே உங்களை அழைத்துக் கொண்டு சென்று விடும்.

***

            குதர்க்கமாகப் பேசும் மனிதர்களைப் பார்க்கும் போது கோபப்படக் கூடாது. ஒரு வித்தியாசமான மனிதரின் பேச்சைக் கேட்பதற்காகச் சந்தோசப்பட வேண்டும். ஒருவரால் நீண்ட நேரம் குதர்க்கமாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது. இரண்டு குதர்க்கங்கள் சேர்ந்தால் ஒரு சரியான கூற்று வெளிப்படும்.

***

            இங்கு யார் நேர்மையாக இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டாம். யாரும் நேர்மையாக இல்லை என்று சோர்ந்து போகவும் வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். இறுதியில் அனைவரும் நேர்மை என்ற புள்ளியை நோக்கி வந்துதான் ஆக வேண்டும். இயற்கையின் விதிகள், காலத்தின் கோட்பாடுகள் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கின்றன.

***

            சராசரியாக வாழ்வதைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அதற்கு அதிக நிதானம் தேவை. மிகுந்த பொறுமை தேவை. அவையிரண்டும் உள்ளார்ந்த சக்திகள். உலகம் வெளியில் தெரிவதைத்தான் பார்க்கிறது. உள்ளே இருப்பதைக் கவனிக்க மறுக்கிறது. பொறுமையும் நிதானமும் உள்ளே இருக்கும் சக்திகள்.

***

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...