உறவுகளை வளர்ப்பதில் உள்ள நுட்பமான அணுகுமுறை
மனிதர்கள் யாவரும் நல்லவரே. மனிதர்களில் கெட்டவர்கள் என்று யாரும்
இல்லை. இது ஒரு பேருண்மை. இந்தப் பேருண்மையை உலகில் முதலில் உணர்ந்து கொண்டது தமிழ்
மொழி. தமிழ் மொழி உணர்ந்து கொண்ட இப்பேருண்மையிலிருந்து பிறந்த வாசகம்தான் “யாதும் ஊரே
யாவரும் கேளிர்” என்ற சங்க இலக்கிய வரி.
யாவரும் உறவினர்களே எனும் போது யாருக்கும் யாரும் எதிரிகள்,
பகைவர்கள், விரோதிகள் இல்லை என்றுதான் அர்த்தமாகிறது. அதுதான் உண்மையும் கூட. ஆனால்
நடைமுறையில் எதிரிகள், பகைவர்கள், விரோதிகள் இல்லாமல் யார் இருக்கிறார்கள்? உலகம் முழுமைக்கும்
அன்பைப் போதித்த இயேசுவைக் காட்டிக் கொடுக்கவும் ஒருவர் இருக்கத்தானே செய்தார். அகிம்சை
வழியில் போராடிய காந்தியடிகளைச் சுட்டுக் கொல்லவும் ஒருவர் இருந்தார்தானே. உயிர்நேயத்தை
வலியுறுத்திய வள்ளலார் மீதும் வழக்குத் தொடக்கப்பட்டதுதானே.
மனிதர்கள் அனைவரும் உறவுகளே. அவர்களில் நல்ல மனிதர்கள், கெட்ட
மனிதர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் மனிதர்களே. அதே நேரத்தில் மனிதர்களிடம் இருக்கும்
உணர்வுகள்தான் அவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் அடையாளப்படுத்துகின்றன. மனிதர்களிடம்
இருக்கும் உணர்வுகள் நல்லுணர்வுகளாக அமைந்து விட்டால் மனிதர்களை மனிதர்கள் என்று மட்டுமே
அடையாளப்படுத்த முடியும், நல்லவர்கள், கெட்டவர்கள் என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது.
அன்பு, நட்பு, காதல், பாசம், நேயம், பரிவு, அக்கறை, அரவணைப்பு
என்று நல்ல விளைவுகளுக்குக் காரணமாகும் அனைத்தும் உணர்வுகளால் ஆனவை. கோபம், வெறுப்பு,
எரிச்சல், விரோதம், எதிர்ப்பு போன்ற தீய விளைவுகளுக்குக் காரணமாகும் அனைத்தும் கூட
உணர்வுகளால் ஆனவைதான். நாம் எந்த உணர்வை வளர்த்துக் கொள்ளப் போகிறோமே அதற்கேற்ற மனிதர்களாக
நாம் உரு பெறுகிறோம். இந்த வகையில் நோக்கினால் நாம் நல்லவர்களாகவதும் கெட்டவர்களாகவதும்
கூட நம் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று சங்கத்தமிழ் சுட்டுகிறது.
நல்லுணர்வுகள் இருந்தும் உறவுகள் பகையாவதும், நட்புகள் விரோதமாவதும்,
காதல் பிரிவுகளாவதும் நிகழ்வதுண்டு. இவை அனைத்திற்கும் காரணம் அந்தந்த நேரத்து மன உணர்வுகள்தான்.
மன உணர்வுகள் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது பருவ காலங்களைப் போல,
இரவு பகலைப் போல மாறி மாறி வருபவை. நேற்றிருந்த அதே கோபம் இன்றும் இருக்கும் என்று
சொல்ல முடியாது. தீவிர மன உணர்வுகள் தணிவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. இதையும்
சங்கத் தமிழ் “நோதலும் தணிதலும் அற்றோ ரன்ன” என்று எடுத்துரைக்கின்றது.
மனித உணர்வுகளை நன்கு உணர்ந்தவர்கள் கூட உறவுகளை முறித்துக்
கொள்ள நேரிடும் சூழ்நிலைகள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படியானால் உறவுகளை வளர்த்தெடுக்க
இன்னும் சில கூறுகள் இருக்கின்றன என்றுதான் பொருள். அதில் முதன்மையானது ஒவ்வொரு தனிமனிதரையும்
மதிப்பது. இதையும் சங்கத்தமிழ் “பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே” எனப் போகிற போக்கில் மிக அழகாகக் சொல்லிச் செல்கிறது.
ஒவ்வொரு தனிமனிதரையும் நாம் மதிக்கிறோம் என்றால் அவரின் தனிப்பட்ட
எல்லைகளுக்குள் நாம் அநாவசியமாகக் குறுக்கிட மாட்டோம் என்பது அதன் பொருளாகிறது. அது
ஒருவரது வாழ்க்கைத் துணையாயினும், பெற்றெடுத்த பிள்ளைகளாயினும், எவ்வளவு நெருங்கிய
உறவுகளாயினும் ஒவ்வொருவரும் தனித்து மதிக்கப்பட வேண்டிய தனி மனிதர்கள்தான். அவர்களுக்கென்று
உரிமைகளும் சுதந்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் நாம் ஒருபோதும் குறுக்கிட முடியாது.
ஒருவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நாம் சரியென்றோ, தவறென்றோ
வாதிடும் இடம் மிகவும் நுட்பமானது. அவற்றை நாம் சுட்டிக் காட்ட வேண்டிய நிலைமைகளில்
மிகவும் நயத்தக்க சொற்களோடு சுட்டிக் காட்ட வேண்டும். அது போன்ற நேரங்களில் நாம் பயன்படுத்தும்
சொற்கள்தான் உறவையும் பகையையும் தீர்மானிக்கின்றன. ஒரு சொல் பிறழ்வது போதும் உறவைப்
பகையாக்க, நட்பை விரோதமாக்க, காதலைப் பிரிவாக்க. மன உணர்வுகளைச் சரியாக உள்வாங்கி வார்த்தைகளைத்
தொடுப்பது உறவுகளை வளர்த்தெடுக்க மிக அவசியமானது. வாழ்க்கையின் ஆகச் சிறந்த அறங்களுள்
அதுவும் ஒன்று என்பதை “முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொலினதே
அறம்” என்று திருவள்ளுவரும் சுட்டுவார்.
சொற்களைச் சரியாகக் கையாள்வதோடு ஒருவரை மதிக்கிறோம், நேசிக்கிறோம்
என்பதற்கு அடையாளமாக அவர் கூறும் சொற்களுக்கும் நாம் செவிமடுக்க வேண்டும். அவர் சொல்வதைக்
கேட்பதற்கு நேரமில்லாதது போல நடந்து கொள்ளக் கூடாது. ஒருவர் சொற்களால் மனதைத் திறக்கிறார்
எனும் போது அச்சொற்களைக் கேட்பதற்கு நாம் எப்போதும் நேரம் ஒதுக்க வேண்டும்.
ஒருவர் துயரமான சொற்களைக் கூறும் போது அவரைத் தோள் கொடுத்துத்
தாங்குவது போல நம் சொற்கள் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் அமைய வேண்டும்.
உறவுகளுக்கு நாம் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு என்பது அவரது
துயரத்தை நாம் நம்முடைய துயரம் போல உணர்கிறோம் என்ற உணர்வுதான். அதைத்தான் உறவுகளும்
நட்புகளும் நம்மிடம் எதிர்பார்க்கின்றன. அந்தப் பரிசைக் கொடுக்க நாம் எப்போதும் தயார்
நிலையில் இருக்க வேண்டும். அவர்களைத் தழுவதிலும் அரவணைத்துக் கொள்வதிலும் அடிக்கடி
அவர்களுக்குக் கைகொடுப்பதிலும் நம்மிடம் பஞ்சமே இருக்கக் கூடாது. “அகனமர்ந்து
ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்” என்று திருவள்ளுவர் சொல்வதில்
இருக்கும் ஓராயிரம் பொருளை இப்போது உங்களால் உணர்ந்து பார்க்க முடியும்.
*****
No comments:
Post a Comment