யாவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
புது நெல் அறுத்து புத்தரிசியில் பொங்கலிட்ட நாட்கள் மாறி விட்டன.
எல்லாருக்குமான அரிசி இப்போது கடைகளில் இருக்கின்றது. அரசாங்கத்தால் அங்காடிகளாலும்
வழங்கப்படுகின்றது.
அப்போது போலா? இப்போது அறுவடை செய்த நெல் நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களை நோக்கிப் போகிறது. அல்லது வியாபரிகளை நாடிச் செல்கிறது. நெல்லைச் சேமித்து
வைப்பதற்கான குதிர்களும் பத்தாயங்களும் இடத்தை அடைக்கும் பொருட்களாக மாறி விட்டதில்
அந்த இடங்களை மின் சாதனங்கள் பிடித்துக் கொண்டன.
கரும்பு கட்டுகள் வாகனங்களில் வீடு தேடி வருகின்றன. பேரம் பேசுவதற்கு
வாய்ப்பில்லாத வகையில் ஒலிப்பெருக்கிகள் விலையைக் கூறி வாங்குவதற்கு அழைக்கின்றன.
இருபதாண்டுகளுக்கு முன்பு கடைத்தெருக்களில் வரிசையாகச் சார்த்தி
வைக்கப்பட்டிருக்கும் கரும்பு கட்டுகளைப் பேரம் பேசி வாங்குவதில் கடைத்தெருவே களை கட்டும்.
ஒரு கட்டுக் கரும்பு என்பது அப்போது இருபது கரும்புகள் சேர்ந்தது. இப்போது ஒரு கட்டு
என்பது பத்தாகச் சுருங்கி விட்டது.
அன்றைய கரும்புகள் நீண்டதாக
எடை மிகுந்ததாக இருக்கும். ஒரு கட்டைத் தூக்குவது
என்றால் தனித்தெம்பு வேண்டும். கடைத்தெருவில் வாங்கிய கரும்புக் கட்டை மிதிவண்டியில்
கம்பிகளின் ஊடே அணைத்துக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வருவது சாமி உற்சவத்தைப் போலிருக்கும்.
தெருவுக்கு முதலாகக் கரும்பு
வாங்கும் வீட்டின் பிள்ளைகள் அதைச் சொல்லிச் சொல்லி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
பணம் கைவரப் பெறதாவர்களும் போகி அன்று கடனுக்காவது கரும்புக் கட்டை வீடு கொண்டு வந்து
சேர்த்து விடுவார்கள். குறைந்தது ஒரு கட்டாவது கரும்பு வாங்கி விடுவார்கள். இரண்டு
மூன்று கட்டு வாங்குபவர்கள் அநேகம் பேர் இருப்பர்கள். இப்போது போல் சாத்திரத்திற்காக
ஒன்றிரண்டு கரும்புகள் வாங்கும் வழக்கமெல்லாம் அப்போது இல்லை.
இப்போது போல் கடைகளில் தின்பண்டங்கள்
அதிகம் புழங்காத அந்த நாட்களில் கரும்பே குழந்தைகளின் முதன்மையான தின்பண்டமாக இருந்ததால்
திகட்ட திகட்ட கரும்பைத் தின்று தீர்த்தார்கள். ஆலையைப் போலப் பிள்ளைகளின் வாய்கள்
கரும்பை மென்றபடி இருக்கும். கரும்புச் சக்கைகள் இல்லாத தெரு ஓரங்களைக் காணாமல் இருக்க
முடியாது.
கொல்லைகளில் பரங்கி, பூசணி,
சுரை, அவரை, கொத்தவரை, கத்தரி என்று காய்கறிகளுக்குப் பஞ்சம் இருக்காது. வரப்புகளில்
கருணை, சேமம், சேப்பம் என்று கிழங்குகளும் துவரையும் வெண்டையும் நிறைந்து இருக்கும்.
அந்தக் காலமெல்லாம் மலையேறி இன்று அனைத்துக் காய்கறிகளையும் கடையில் வாங்கும் நிலைமையாகி
விட்டது.
பொங்கலுக்கு புதுப்பானை எடுப்பதெல்லாம்
வைபவம்தான். அதற்கான நாள், நேரம் பார்த்துப் பெண்டிர் சிறு பிள்ளைகள் சூழ கூடைகளோடும்
கூடையில் நெல்லோடும் செல்வர். ஊருக்கு ஒன்றிரண்டு குயவர் வீடுகள் இருக்கும். அவரவர்களுக்கும்
குலசாமியைப் போல பானைகள் வாங்குவதற்கு ஒரு குயவர் வீட்டை வைத்திருப்பர். அவரிடம்தான்
வாங்குவர். மாற்றி வேறு குயவர் வீட்டில் வாங்க மாட்டார்கள்.
பானைகள் வாங்குவதிலும் அச்சுள்ள
பானைகள் வாங்குவது, அச்சில்லா பானைகள் வாங்குவது என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு
வழக்கம் இருக்கும். பானைகளைத் தட்டிப் பார்த்து வாங்குவதன் லயத்தை நீங்கள் அருகில்
இருந்துதான் பார்க்க வேண்டும். பானைக்கு மாறாக நெல்லைக் கொடுப்பர்.
வாங்கிய பானை, சட்டிகளை கூடையில்
அடுக்கிக் கொடுத்துக் கும்பிட்டு “அமோகமாக இருக்கட்டும்!” என்று வாழ்த்தியபடி குயவர்
தலையில் ஏற்றி விடும் காட்சியைப் பார்க்க மெய் சிலிர்க்கும்.
இன்றைய நாட்களில் புதுப்பானை,
சட்டிகளின் இடத்தை வெண்கலப் பானைகளும் எவர்சில்வர் பாத்திரங்களும் பிடித்து விட்டன.
பொங்கலுக்கு அடுப்பு கூட புத்தடுப்புதாம். பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக
அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விடும். இப்போது எல்லாம் எரிவாயு அடுப்பில் முடிந்து விடுகிறது.
பொங்கல் பொங்கும் போது கேட்கும்
குலவையொலி விண்ணை எட்டும் என்று சொல்லலாம். இப்போதோ ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சிப்
பெட்டிகளின் ஒலிதான் எங்கெங்கும் கேட்கின்றன.
பொங்கலுக்கான நிகழ்வுகளும்
ஏற்பாடுகளும் முன்பிலிருந்து இப்போது எவ்வளவோ மாறி விட்டன. பொங்கல் மட்டும் மாறாமல்
இருக்கிறது.
*****
No comments:
Post a Comment