16 Dec 2021

வனாந்திரத்தில் மகிழ்ச்சியாய் இருந்த நாட்கள்

வனாந்திரத்தில் மகிழ்ச்சியாய் இருந்த நாட்கள்

புல் தின்ன மறந்த மாடுகளும் ஆடுகளும்

சுவரோட்டிகளைத் தின்ற காலம் வரை நன்றாக இருந்தன

பாலிதீன்களைத் தின்னும் காலம் வந்த பின்

ஒவ்வொன்றாக வயிறு வீங்கிச் சாகத் தொடங்கின

காட்டினின்று அழைத்து வந்த மாடுகளும் ஆடுகளும்

இப்படித்தான் அழிந்து போகத் தொடங்கின

வீடங்கி கிடந்த பூனைகளும் தெருவடங்கிக் கிடந்த நாய்களும்

பாழாய்ப் போன மீந்த உணவைத் தின்ற காலம் வரை

யாதுமொரு குறையுமின்றி அலைந்து திரிந்தன

தூக்கி எறியப்படும் பாலீதீன் பைகளில்

உணவைத் தேடத் தொடங்கிய பின்

மலடாகிச் சந்ததிகளின்றிச் சாவத் தொடங்கின

காட்டினின்று மனிதரை நம்பி வந்த நாய்களும் பூனைகளும்

இப்படித்தான் நம்பிக்கை துரோகத்தால் மாண்டு போயின

இதற்கு முன்பே குதிரைகளும் கழுதைகளும்

வாதையின்றி நிர்கதியாய்ப் போய்ச் சேர்ந்த பாக்கியத்தில் இருந்தன

நம்பினார் கெடுவதில்லை என்ற வாசகம் பொய்த்து புழுபுழுத்துப் போக

வனாந்திரத்தில் மகிழ்ச்சியாய் இருந்த நாட்களை

எண்ணிப் பார்க்கின்றன பிராணிகளின் ஆத்மாக்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...